அவனுக்கு ஒருநாள் முன்பாகத்தான்
அந்த அறைக்கு குடிவந்தது
அந்தச் சிலந்தி ....
மேல்சதுரத்தின் கிழக்கு மூலையில்
நமக்கு ஒட்டடையான
வலை பின்னி அமர்ந்து கொண்டது ...
அதற்குப் பிறகுதான்
அவை அரங்கேறின...
உச்ச டெசிபலில் அவன் வைத்த பாட்டுக்கு
உதிர்ந்து விடுமோவென அதிரும் வலையை
அச்சத்தில் பார்த்தது...
அன்றிரவில் வந்த எவளோவுடன்
அவன் கொண்ட கலவியின் கட்டிலோசை
வலையை மெல்லத் தாலாட்டி
ஊஞ்சலின் வேகம் போல்
ஓய்ந்து போகிறது...
பிறிதொரு பகலில் வந்து அழுத
இன்னொருத்தியின் கண்ணீர் கரைந்த காற்று
உப்புச் சுவையை உணர்த்திப் போகிறது...
அவன் மட்டும் தனித்திருந்த பொழுதின்
சுய இன்பத்தின் வெறி மூச்சில்
சிலந்தியின் கால்களில் எட்டு நடுக்கங்கள்...
அவனில்லாத பொழுதுகளிலும்
அவ்வப்போது ஒலிக்கிறது
அழைப்பு மணியோசை...
மறுமொழியில்லாமல் திரும்பிச் செல்லும்
காலடி ஓசைகளை கவனித்துக் கிடக்கிறது
அருகில் வரும் இரைகவர மறந்த சிலந்தி....
இறுதிநாளின் இரவில்தான்
மதுவோடும் புகையோடும்
அவன் மனம் திறந்தான்....
அழுகலின் வாசனை தாங்க முடியாமல் ....
அந்தக் கலவியையும் கண்ணீரையும்
கவிதை செய்து விடாதீர்கள் என்றபடி
வெளியேறியது சிலந்தி ....
ஒட்டடை ஆகிவிட்ட
அந்த வீட்டிலிருந்து.
- சீமாசெந்தில் (