மெய்யியல் தன்னை முழுமை செய்த
பொய்யா அறிஞர் மார்க்சும் எங்கெல்சும்
முடியும் என்றே செய்து காட்டிய
மடியிலா வீரர் மகாலெனின் தானும்
அவரின் பின்னே டிமிட்ரோவ், ஸ்டாலின்
நவயுக மாவோ, ஹோசி மின்னும்
மறைந்ததி னாலே தளர்ந்திட வேண்டாம்
உறைபனி உருக்கும் புவிவெப்ப உயர்வு
உலகை அழிக்கும் முன்பே விழித்து
பலவகை வகுப்பையும் ஒன்று திரட்டி
சமதர்மம் அமைக்க அணியம் ஆவீர்.

((தத்துவ அறிஞர்கள் இதுவரைக்கும் உலக நடைமுறைகளை விளக்க மட்டுமே செய்தனர்; ஆனால் அவற்றை மாற்றி அமைப்பது தான் அதன் பணி என்று கூறி) மெய்ஞ்ஞானத்தை முழுமை செய்த அறிஞர்களான கார்ல் மார்க்சும், பிரடெரிக் எங்கெல்சும், ஓய்வறியா வீரர் மகாலெனினும், அவர்களுக்குப் பின்னே டிமிட்ரோவும் (பார்க்க புது நானூறு 19), ஸ்டாலினும், (புரட்சியில் விவசாயிகளை ஈடுபடுத்திய) நவயுக மாவோவும், ஹோ சி மின்னும் மறைந்து விட்டார்கள் என்று மனம் தளர்ந்து விட வேண்டாம். உறைபனியை உருக்கிக் கொண்டு இருக்கும் புவி வெப்ப உயர்வு உலகை அழிக்கும் முன்பாகவே விழித்து எழுந்து (இதுவரைக்கும் உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்காக மட்டுமே தேவையாய் இருந்த சோஷலிசம், உலகத்தை அழிவில் இருந்து காப்பதற்கே அவசியமாகத் தேவைப்படுவதைச் சுட்டிக் காட்டி, உழைக்கும் மக்களை மட்டும் அன்றி) எல்லா வகுப்பு மக்களையும் ஒன்று திரட்டி சமதர்மம் அமைக்க அணியம் ஆகுங்கள்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.