மண்ணாலான இதயமுள்ளவர்களின்
மேய்ச்சல் நிலமாய்
இந்தக் காலம்
உயிருள்ள ஆட்டை
அப்படியே விழுங்கி விட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டே
குருவிகளுக்கு தானியம் தூவும்
கடந்த காலப் பேரரசின் கடைசி வாரிசென
நிரூபிக்கப் போராடும்
முன்னோர்கள்
தெய்வங்களின் பட்டியலில்
இருப்பதாக பறை சாற்றும்
செவி மடுக்காத நீதியை
கொலை செய்ய
ஓர் இரவைத் தயார் செய்யும்
கத்தியை எங்கே சொருகுவது
எப்படி மறைப்பது
எப்படி தப்பிப்பதென சொல்லிக்கொடுக்கும்
கல்லான இதயம் கொண்டவர்களிடம்
கூட்டணி வைத்து
ஒரு வரலாற்றை சமைக்கும்
கத்தி பிடித்தவர்கள்
கடவுளின் வாரிசென
நம்ப வைக்கப் போராடும்
இந்தக் காலம்
கடந்த காலத்தின் மீது
தீவிரமான ஆட்சி செலுத்துகிறது
ஹிட்லரை போல...
கீற்றில் தேட...
கொடுங்காலம்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்