பொருள்வளத் துடனே அறிஞர் தாமும்
பெருவாழ்வு வாழினும் முதலியக் கருத்தில்
உட்படு வதாலே விடுதலை இலையென
நுட்பமாய் உணர்வோர் சமதர்ம அமைப்பை
ஏக்கத் துடனே வேண்டிடும் நிலையில்
ஆக்கம் அனைத்தும் அடையும் வினைஞர்
சமதர்மம் வேண்டின் வியப்பொன்றும் இலையே.
((முதலாளித்துவ சமூகத்தில்) அறிஞர்கள் (அதிக ஊதியம் கிடைத்துப்) பெருவாழ்வு வாழ்ந்தாலும் (பொதுமக்களின் நன்மைக்காகச் சிந்திக்காமல்) முதலாளிகளின் நன்மைக்காக மட்டுமே சிந்திக்க முடிகிறபடியான தளையில் உட்படுவதால் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று உணரும் பொழுது, சோஷலிச அமைப்பு ஏற்படாதா என்று ஏக்கத்துடன் வேண்டும் நிலையில், எல்லாவித நன்மைகளும் சோஷலிச அமைப்பில் மட்டுமே பெற முடிகின்ற தொழிலாளர்கள் அதை வரவேற்பதில் வியப்பொன்றும் இல்லை.)
- இராமியா