கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பழங்குடி மக்கள் வாழ்விடம் தன்னை
இழக்கும் படியாய் அணைகள் கட்டியும்
சுரங்கத் தொழிலை வளர்த்தே எடுத்தும்
அரசுகள் முதலியம் காப்பதி னாலே
வினஞைர் வழியில் முதலியம் எதிர்ப்பதே
முனைந்த தீர்வு என்றே நினைத்தேன்
மண்டல் குழுவின் ஆணை தன்னைக்
கண்டனம் செய்து தடுத்து நிறுத்த
எதிரெதிர் என்றே சாற்றிக் கொள்ளும்
பொதுமைக் கட்சியும் மதவெறிக் கட்சியும்
ஒன்றாய் இணைந்ததும், ஈழத் தமிழர்
துன்பங் களைய மக்கள் நினைத்தும்
பார்ப்பனர் எண்ணம் போலவே அழிந்ததும்
பார்த்த பின்னே பார்ப்பன அழிவே
வினைஞர் விடுதலைக்கு வழியென அறிந்தேன்

((தொழில் வளர்ச்சிக்குத் தேவை என்று கூறி மின் உற்பத்தியை அதிகரிக்க) அணைகளைக் கட்டியும், சுரங்கத் தொழிலை வளர்த்து எடுத்தும், பழங்குடி மக்களைத் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டி (மூலதனத்தை ஈடுபடுத்த இடமில்லாமல் தவிக்கும் முதலாளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து) முதலாளித்துவத்தை அரசுகள் காத்திடுவதைக் கண்டு தொழிலளி - முதலாளி முரண்பாட்டை அழிப்பது தான் அறிவார்ந்த தீர்வு என்று நினைத்தேன். (ஆனால்) மண்டல் குழுவின் பரிந்துரைகளில் சிறு பகுதியை அமல்படுத்த அரசாணை வெளி வந்த உடன், அதைக் கண்டனம் செய்து தடுத்து நிறுத்த, தங்களைப் பரம எதிரிகள் என்று பிரகடனம் செய்து கொண்டுள்ள பொதுவுடைமைக் கட்சிகளும் மதவெறிக் கட்சிகளும் ஒன்றாய் இணைந்ததையும், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் களையப்பட வேண்டும் என்று அதீதப் பெரும்பான்மை மக்கள் நினைத்தும் (அதிகார மையங்களில் நிரம்பி வழியும்) பார்ப்பனர்களின் எண்ணம் போல் சீரழிந்து போனதையும் பார்த்த பிறகு, பார்ப்பன அழிவே வினைஞர் விடுதலைக்கு வழி என்று புரிந்து கொண்டேன்.)

- இராமியா