கீற்றில் தேட...


கழுத்தறுக்கப்படாத கோழிகளே
இன்னும் கத்திக்கொண்டிருகின்றன
முட்டைகளிட்ட பிறகு
கழுத்தை திருகியெறியும் உத்திரவுகள்
எல்லா பண்ணைகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன
அதன் மரணம் உறுதியாகிவிட்டது
கோழிகள் நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது
அவைகளின் மனுக்கள்
விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
நடைமுறைகளை சட்டென்று மாற்ற இயலாது
ஆயிரம் கோழிகளைக் கொல்வதைக் காட்டிலும்
ஒரு யானையைக் கொல்லலாமென்ற வாதம் தள்ளுபடி செய்யப்பட்டது
கோழிகள் சாலை மறியல் செய்வதாக
எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட கோழிகள்
நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்பது குற்றச்சாட்டு
காலதாமத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கோழிகளும்
பினாமிகளென்று நிருபிக்கப்பட்டது
கோழிகள் ஆதியில் வார்த்தைகளாக இருந்தது
பிறகு அனைத்து மொழிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது
கோழிகள் தீ குளிக்கும் பரம்பரையைச் சார்ந்தது
எந்த உத்திரவுக்கும் கட்டுப்படாது
அதிகாலையில் முதல் கானத்தை துவங்கும்
கோழிகளின் வாழ்வு எப்போதும் துயரம் நிறைந்ததுதான்
நீதி கேட்டு நெடும் பயணம் போன கடைசிக் கோழியும்
காணாமல் போனதுதான் பெரும் சோகம்.

- கோசின்ரா