மூல தனமெனும் நுகத்தடி எறிந்தபின்
சாலவும் சிறந்த உற்பத்தி முறையில்
நாட்டு மக்களின் தேவையை நிரப்பி
மீட்டனர் வறுமையின் பிடியில் இருந்தே
வேற்று நாட்டு மக்களின் நலனிலும்
சாற்றும் நன்மைகள் பலவும் புரிந்தனர்
எல்லாம் அன்று சமதர்ம அரசில்
பொல்லாச் சந்தையின் கொள்ளை விதிகளில்
அடைக்கலம் கண்டு பணிந்த பின்னர்
படைக்கலம் அன்றி உடையுண விருப்பிடம்
கல்வியில் தானும் பெருமை இழந்து
அல்லற் படுவதைக் காணமனம் கசியுதே
((சோவியத் மக்கள்) மூலதனம் என்னும் நுகத்தடியை எறிந்த பின், மிகச் சிறந்த (சோஷலிச) உற்பத்தி முறையில் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்து, வறுமையின் பிடியில் இருந்து (தங்களை) மீட்டுக் கொண்டனர். (அத்துடன் அல்லாமல்) வேற்று நாட்டு மக்களுக்கும், போற்றும் படியான நன்மைகள் பலவற்றையும் புரிந்தனர். எல்லாம் சோஷலிச ஆட்சி நடைபெற்ற அந்தக் காலத்தில். (இன்று) பொல்லாங்கு நிறைந்த சந்தையின் கொள்ளை விதிகளில் அடைக்கலம் அடைந்து பணிந்து போன பின், இராணுவ வலிமையில் மட்டும் அல்லாமல் உணவு, உடை, இருப்பிடம், கல்வி முதலிய அனைத்துத் துறைகளிலும் பெருமை இழந்து அல்லற்பட்டுக் கொண்டு இருப்பதைக் காண மனம் கசிகின்றதே,)
- இராமியா