முதலில் வந்தவர்கள் சொன்னார்கள்
தேசம் ஒளிர்கிறதென்று!
பிறகு வந்தவர்களும் சொல்கிறார்கள்
இனி தேசம் ஒளிரும் என்று!
அலங்காரக் கனவுகளை
முன்னறிவிப்பு செய்கின்றன
இரத்த ஓநாய்கள்!!
எல்லாம் தயார் நிலையில்
இனி எடுக்கப்பட வேண்டியது
உயிர்களை மட்டும்.
ஓங்காரமாய் கொதிக்கும் உலைக்களங்களுக்கு
உடனடியாக தேவைபடுவது
அவர்களின் பிணங்கள் மட்டுமே.!!
சிவப்பு வறண்டு கிடப்பதால்
அவர்களின் இரத்தம் தேசிய கொடிக்கு உயிர்கொடுக்குமாம்!!
மயான சந்தையில்
தேசியம் கூவி, கூவி விற்கப்படுகிறது!!
கடலுக்கும், கரைகளுக்கும் இடையே மிதக்கிறார்கள்!
சுற்றி வளைக்கின்றது இறையாண்மையின் துப்பாக்கிகள்!
இனிமேலும் அவர்களின் பாதங்கள் அசைவதாக இல்லை!
எல்லை தாண்டாத அவர்களின் தோள்கள் தடுப்பு சுவராகிவிட்டன!
பற்றி இருக்கும் அவர்களின் கைகளுக்குள்ளே
நொறுங்கிக் கொண்டிருக்கிறது தேசியச் சக்கரம்!!!
கட்டுமரமாக சாயும் அவர்களின் பிணங்களின் மேல்தான்
அதிகாரத்தின் இறுதி ஊர்வலம் நடக்க இருக்கின்றது
உங்களின் இராணுவ பூட்சை நெருங்கும்
உப்பரித்த பிஞ்சுப் பாதங்கள்,
அவர்களின் கால்தடயங்களுக்குள்
புதைந்து தெறிக்கும் ஒரு பிடி மண்!!
அது நாளை சொல்ல இருக்கிறது
அணு உலைகளின் மரணத்தை!!