உலகப் பரப்பில் மனிதருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இயற்கையில் அமைந்த பாதுகாப்புகள் இரண்டு. ஒன்று - கரியமில வாயு என்கிற கரிக்காற்று பரவாத நல்ல, தூய காற்று. இரண்டு - மாசுபடுத்தப் படாத - தரையால் வடிகட்டித்தரப்படுகிற நல்ல குடிநீர்.

இவை இரண்டும் மிக மிக வேகமாக உலக ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சப்பான், இந்தியா போன்ற நாடுகளால் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன.

1945இல் - இரண்டாவது உலகப் போரின் முடிவில், சப்பான் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. குண்டு வீசப்பட்ட ஒரு நொடியில் பல இலட்சம் சப்பானியர் கொல்லப் பட்டனர்; பல ஆயிரம் சதுர மைல் நிலம் பளிங்கு போல் மாறிவிட்டது.

இது உலக வளரும் நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசும் அஞ்சியது.

1966இல் அய்.நா. அவையில் இந்திய அரசின் பிரதிநிதியாக இருந்த வி.சி. திரிவேதி (V.C. TRIDEVI) பின்வருமாறு பேசினார் :

“மாஸ்கோவில் ஏற்கெனவே உலக நாடுகள் கூடிப் பேசியபடி-அணு ஆயுத சோதனையை உலகின் எந்தப் பகுதியிலும் நடத்தக்கூடாது என்கிற ஒப்பந்தத்தை எல்லா நாடுகளும் மதித்துப் பின்பற்ற வேண்டும்” என்பதே, 23.11.1966இல், வி.சி. திரிவேதி, அய்.நா. அவையின் முன்வைத்துப் பேசிய கருத்து.

ஆனால் அமெரிக்கா இதை மீறியது; பிரிட்டன் மீறியது; இந்தியாவும் பாக்கித்தானும் மீறின. எப்படி மீறின?

அணுகுண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் இந்நாடுகள் செய்தன; குவித்தன. அவற்றை மக்கள் இல்லாத பகுதியில் வீசிச் சோதித்தன.

இந்திய அரசு எப்படி இதை மீறியது?

பாரதிய சனதாக் கட்சிப் பிரதமர் வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு செய்த அணுகுண்டை, 5 தடவைகள் 1998 மே-இல் பொக்ரானில் இரகசியமாக வீசி, வெடிக்கச் செய்து பரிசோதனை செய்தது.

அந்தச் செயலை சப்பான் அரசு கடுமையாகக் கண்டித்தது. அத்துடன் சோதனை நடத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சப்பான் அரசு இந்தியாவுக்கு அளித்த பொருளாதார உதவியை நிறுத்தியது; மற்ற உறவுகளை அறுத்துக் கொண்டது. 2001இல் அத்தடைகளை சப்பான் அகற்றிக் கொண்டது. பிறகு, 2009இல் சப்பானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை யைத் தொடர்ந்தன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதன்முதலில் 2014இல் சப்பானுக்குச் சென்றார். 2015இல் மீண்டும் சென்று, சப்பானின் உதவியைப் பெற்று, இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப் பதற்கான ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்தார்.

11.11.2016, 12.11.2016 இரண்டு நாள்களில் சப்பானுக்குச் சென்று, ஒப்பந்தம் பற்றிப் பிரதமர் மோடி பேசினார். 2015 திசம்பரிலேயே மோடி அரசும், சப்பானிய அரசும் இதுபற்றிய பேச்சுவார்த்தையைத் தொடங்கி யிருந்தன.

1945இல் அணுகுண்டால் பாதிப்புக்கு உள்ளான நாடு, சப்பான். எனவே இந்திய அரசு மக்கள் பயன் பாட்டுக்கு-மக்கள் நுகர்வுக்கு மட்டுமே அணுஉலையைப் பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை இந்திய அரசிடம் சப்பான் எதிர்பார்க்கிறது.

மக்கள் பயன்பாட்டுக்கு என்றால், அது என்ன?

அதாவது, அணுஉலைகள் வைத்து மக்களின் பயன்பாட்டுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வது தான், அது. சரி!

எந்த சப்பான் நாட்டு உதவியுடன் இந்தியாவில், மேலும் அணு மின் உலைகளை அமைக்க மோடி அரசு விரும்பிகிறதோ, அந்த சப்பான் நாட்டில், புகுஷி மாவில் உள்ள அணுமின் உலையில், 2011இல் ஏற் பட்ட பூகம்பத்தில் ஏன் வெடிப்பு ஏற்பட்டது? ஏன் புகுஷிமா அணுஉலைகளின் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது? இப்போது ஏன் இரண்டு உலைகளில் மட்டும் சப்பான் மின் உற்பத்தி செய்கிறது?

இந்த இழிந்த நிலையில், 22.11.2016இல் சப்பா னைத் தாக்கிய பூமி அதிர்ச்சியில், புகுஷிமா அணுமின் உலையை சுனாமி தாக்கியது. அது, பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து 230 கி.மீ. தொலைவிலுள்ள சப்பானின் தலைநகர் டோக்கியோவையும் பதம் பார்த்தது.

இப்படிப்பட்ட அழிம்புகளைக் கொண்டுவரும் அணுமின் உலை ஒப்பந்தம் - சப்பானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள 15 இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள வணிக உறவை வலுப்படுத்தும் என்று, இரு நாடு களும் நம்புகின்றன.

இந்த அணுமின் உலை இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டாலும்-அம்மாநில மக்களுக் குக் கேட்டையே விளைவிக்கும்.

அப்படி என்ன கேடுகள் நேரும்?

1.            முதலில் அணுஉலைக்கான கருவிகள், மூலப் பொருள்கள், உதிரி பாகங்கள் சப்பானிலிருந்துதான் வரவேண்டும்.

2.            கருவிகளைப் பூட்டவும், இயக்கவும், பழுது பார்க்கவும் சப்பான் நாட்டு அணுவியல் அறிஞர்கள் தான் வரவேண்டும்.

3.            அணுமின் உலை எரிப்புக் கழிவுகள் இந்தி யாவின் கடலில் கொட்டப்பட்டாலும், அணுஉலைக்குப் பக்கத்தில் தரையில் குவிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெளிவரும் அணுஉலைக் கதிர்கள் மனிதரைத் தாக்கும்; நீர்வாழ் உயிர்களை அழிக்கும்; நீரிலும், நிலத்திலும் வாழும் உயிர்களை 60, 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தாக்கும்.

தமிழகத்தில் கூடங்குளத்தில், சோவியத் இரஷ்யா வாக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட 6 அணு உலைகளையும் இயக்கும் போது - 2014 தொடங்கி கி.பி.3000 வரைக்குள் தமிழக இந்துமாக் கடற்கரை வாழ் தமிழ் மக்களையும், கடல்வாழ் உயிர்களையும், மரம் செடி கொடிகளையும், விலங்குகளையும், நீர் நிலைகளையும் அணுக்கதிர் தாக்கித் தீராத நோய் களை உண்டாக்கும்; உயிர்களை வாங்கும்.

ஆதலால், மக்கள் நல்வாழ்வுக்கு எதிரான அணு மின் உலைகளை இரு கை நீட்டி வரவேற்ற காங்கிரசு அரசும், அதை வளர்த்தெடுத்து நிறைவேற்றத் துடிக் கும் பாரதிய சனதாக் கட்சி மோடி அரசும் - இந்திய ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்பதை ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் உணரவேண்டும்.

அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரையை எல்லாத் தமிழக இயக்கங்களும் ஒன்றுபட்டு மேற்கொள்ள வேண்டும்.

இது அகத்தியம்! மிக மிக அகத்தியம்!

Pin It