கடவுளை காப்பாற்றுகிற மனிதனை சந்தித்தேன்
அவன் கடவுளுக்கு எல்லாமுமாக இருந்தான்
கடவுளை குளிப்பாட்டுவது
அதற்கு சட்டை போடுவது
உணவு ஊட்டுவது
கடவுளை வெளியே அழைத்துப் போவது
இரவில் தாலாட்டு பாடி உறங்க வைப்பது
அவனின் அன்றாட வேலையாக இருந்தது
கடவுளைப்பற்றி எது சொன்னாலும் அவனுக்கு கோபம் வந்துவிடும்
அவன் முன்னால் எதுவுமில்லை கடவுளைத்தவிர
இது போல எத்தனை யுகங்களைக் கழித்தானென்று தெரியவில்லை
எப்போதும் கடவுளுக்கு அவன்தான் காவல்
யாரவது கடவுளை கேலி செய்தால் ஆயுதத்தால் கீறிவிடுவான்
அவனிடம் அம்பு ஈட்டி கோடாலி சூலாயுதமிருந்தன
கடவுள் சக்தி வாய்ந்தவரென்று சொல்லி வந்ததை மறந்துவிட்டான்
அவன் கடவுளை விட ஆயிரம் மடங்கு பலமுள்ளவனாக இருக்கின்றான்
ஒரு கலவரத்தில் கடவுளின் எதிரியென்று நினைத்து
ஒருவனை கொலை செய்ததுதான் அவனுடைய முதல் வதம்
அதற்கு பிறகு அவனுடைய அவதாரங்கள்
அவனுடைய கடவுளை மிஞ்சிவிட்டன
துப்பாக்கி சுமந்த படை
அவன் கடவுளுக்கு காவல் இருக்கிறது
இருந்தும் கடவுளை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற
ஓயாமல் சிந்திக்கின்றான்
என்னக்கென்னவோ கடவுளை கொத்தடிமை போல
வைத்திருப்பானோவென்று தோன்றுகிற‌து
அதனால்தான் ஏழைகளின் எந்த துயரங்களும்
இருபது நூற்றாண்டுகளாக தீர்க்கப்படவில்லையோ?

- கோசின்ரா