சலசலத்துக் கொண்டேயிருந்தது
அந்த நீரோடை
கும்மிருட்டில் எங்கோ
ஒரு மூளையில்
தனது நிழல்களைத் தொலைத்துவிட்ட
அந்த இலவ மரத்தில்
ஓர் ஆந்தையின் அலறலில்
சலசலத்துக் கொண்டேயிருந்தது
அந்த நீரோடை
உணவில்லாத
சில நேரங்களில்
நாய்கள்
தின்று கொழுத்த
நரிகளின் தொனியில் ஊளையிட
இலவ மரத்தின் பஞ்சுகளை
வெவ்வேறு திசைகளுக்கு
இடம் பெயர்த்தது காற்று
இருந்தும் அந்த நீரோடை
சலசலத்துக் கொண்டேயிருந்தது
அருகில்
எவருக்காகவோ
தனது ஓட்டில்
நீரைச் சேமித்துக் கொண்டு
ஓர் எருக்கஞ்செடியின்
கீழ் ஒளிந்து கொண்டது
நத்தை
தவளையின்
ஏக போகக் குரல்களுக்கிடையில்
இரவு நேர
உணவைப் பங்கிட்டுக்
கொள்ளத் தெரியாத மீன்களின்
சலசலப்புக்குள்ளும்
நீரோடையில்
உருவம்
சிதைந்து விடாமல்
பார்த்துக் கொண்டது
நிலவு
பசியின் அகோரத்தில்
நீரோடையில்
அந்தத் தண்ணீர்ப் பாம்பின்
தவழலில்
நீரில் தள்ளாடியது நிலவு
நிலவின் தள்ளாட்டத்தையே
வெறித்துப் பார்த்திருந்த பாம்பு
தனது கோரப் பல்லில்
நிலவை கவ்வியது
நிலவு
சின்னா பின்னமாகச் சிதறியது
நிலவினுள்ளிருந்த தவளையின்
சலசலப்பு
நீரோடையில் அடங்கவில்லை.
நிலவைக் காத்துக் கொள்ள
விரும்பிய
வானம் மேகக் கூட்டங்களை
அழைத்து நிலவைச் சிறைபிடித்தது
நிலவின் காயங்களைக்
கண்டு
கண்ணீர் விட்ட
மேக விம்மல்களில்
அந்த நீரோடை
சலசலத்துக் கொண்டேயிருந்தது.