தனிமையில் உறங்குவதென்பது
சிரமத்திலும் சிரமமாயிருக்கக்கூடும்
நீயில்லா பொழுதுகளில்…
எப்படி நாட்களை நகர்த்துவதெனத் தெரியாமல்
வீதியில் நின்று வேடிக்கை பார்ப்பதும்
சில்வண்டுகளோடு சில்லாக்கு விளையாடுவதும்
கூட்டாஞ்சோறு ஆக்கித் தின்பதுமாய் பொழுது கழியும்
சிலகணம் கண்ணில் படும் பொடிசுகளையெல்லாம் வரவழைத்து
வட்டமர்வில் அமர்ந்து பேய்க்கதைகளை கதைத்துக் கொண்டே
உன் வருகையை எதிர்நோக்கியிருப்பேன்
இம்முறை நீயுமில்லை எதிர்வீட்டு குழந்தைகளுமில்லை
என்ன செய்வதெனத் தெரியாமல்
பகலைப் பழித்து இரவை சுருக்கி எனக்கேற்புடையதாய்
வளைத்துக் கொண்டிருந்தேன்
நமதறையின் நால்திசையிலும் இருள்சூழ
கண்களை மூடி போர்வைக்குள் எனைக்கிடத்தி
உன் நினைவுகளால் வியாபித்திருந்தேன்
ஒரு மழையின் ஸ்பரிசத்தில் மலர்ந்த காளானைப் போல
நடுநிசிப் பொழுதைக் கடக்கும் வரை
உலர்ந்தும் நனைந்தும் ஓயாத மழைச்சாரலாய்
உன் நினைவுகள் பூடகமாய் என்னைத் தாக்கியது
நினைவுகளை உடலாய் மாற்றி
கனவுகளைக் கடந்து கண்ணயர்ந்த வேளையில்
ஓர் அதிகாலையின் விடியல்
உன் வருகைக்கான தகவலை பரிசளித்துப்போனது
விடிந்தும் விடியாமல் கூவிக் கொண்டிருந்த
அலைபேசி ஒலியும்,
ஒலியின் ஊடே வந்து போன உன் மென்மையான குரலும்,
நீண்ட கால பிரிவின் துயரொழுக
விடிகிறது பொழுது பிரியத்தின் நகர்வுகளாய்…
- வழக்கிறஞர் நீதிமலர்