பார்ப்பனக் கூட்டமும், பார்ப்பனத்திற்கு இணையான ஆதிக்கசாதிகளும் தங்களுக்கு அவசியமான அநீதியான கொள்கையை மீண்டும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. ஆம். பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதியினருக்கும் ஆதரவான உச்சநீதிமன்றத் தீர்ப்பு உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் எதிராக வெளிவந்திருக்கிறது. உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இடஒதுக்கீடு - கல்வியும், வேலை வாய்ப்பும் பார்ப்பன ஆதிக்க சாதியினருக்கும் 10% என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் 3 நீதிபதிகள் பார்ப்பன, ஆதிக்கசக்திகளுக்கு ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். பெரியாராலும், அம்பேத்கராலும் அவர்களது முன்னோர்களாலும் படைக்கப்பட்ட, பாதுகாக்கப் பட்ட இடஒதுக்கீடு கொள்கை பார்ப்பனக் கூட்டத்தால் 10% கொள்கை மூலம் முறியடிக்க முயற்சிக்கப்படுகிறது. பார்ப்பனத்தின் இந்தத் தீர்ப்பை பாஜகவும், காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்டும் ஆதரிக்கின்றன. பாஜகவும், காங்கிரசும் பார்ப்பன ஆதரவுக் கூட்டம்தான் என்பதை சமூக முன்னணியினர் அனைவரும் அறிவார்கள். உழைக்கும் மக்களின் இயக்கமாகத் தோன்றிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நடைமுறைப் பணிகளில் குறிப்பாக, தேசிய இனப் பிரச்சனைகளிலும், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளிலும் ஒரு பார்ப்பன சக்தியாகவே செயல்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளில் இந்தியப் பொது உடமை கட்சி (மார்க்சிஸ்ட்) முதலிடம் பெறுகின்றது.

தமிழகம் பார்ப்பனியத்திற்கு எதிரான இரண்டாயிரம் ஆண்டிற்கும் மேலான போராட்ட வரலாற்றைக் கொண்டது. தொல்காப்பியம் திருக்குறள் என இரண்டாயிரம் ஆண்டு வரலாறாக நமது போர் இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்தப் போர்களில் பல பின்னடைவையும், வெற்றியையும் தமிழ்நாடு தொடர்ந்து பெற்றே வருகிறது. பார்ப்பனியத்தை முற்றாக ஒழிக்கும் போரைத் தமிழ்நாடு தற்போது ஏற்றுச் செயல்படுத்தி வருகிறது.

பெரும் வளர்ச்சியைக் கொண்டுள்ள தமிழ்நாடு பார்ப்பனிய ஒழிப்பை நிச்சயம் நிறைவேற்றித் தீரும்.

தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகால அரசியலாக பார்ப்பனிய எதிர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரியாருக்கு முன் பிருந்தே தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு நடைபெற்று வந்தது. பெரியாரும் பார்ப்பனிய எதிர்ப்பை முதன்மைப்படுத்தி செயல்பட்டார். திமுகவின் தோற்றம் பார்ப்பனிய எதிர்ப்பை முதன்மை நிலையிலிருந்து குறைத்துக் கொண்டது. தமிழினக் கொள்கையை மாநிலக் கொள்கையாக மாற்றி அமைத்துக் கொண்டது.

இந்திய அரசின் அடிமைத்தன்மையை முற்றாக ஏற்றுக் கொள்ளும் கட்சியாக மாறிவிட்டது என்ற போதும் வளர்ச்சி பெற்று வரும் தமிழின உணர்வைப் பெயரளவிலாவது ஆதரிக்கும் கட்டத்தில் திமுக செயல்பட்டு வருகிறது.

மக்கள் ஆதரவைப் பெருமளவு பெற்ற கட்சிகள் திமுகவும், அதிமுகவும்தான். அதிமுகவின் தோற்றமே தி. மு. க வை ஒழித்துக் கட்டுவதுதான். பார்ப்பனக் கூட்டத்தின் முதல் இலக்கே திமுகவை ஒழித்து விடுவதுதான். எம்ஜிஆரோ, செயலலிதாவோ தமிழின உணர்வோ, பற்றோ கொண்டவர்கள் அல்ல. பார்ப்பன ஆதரவு சக்திகளே என்ற போதும் சில தமிழினத் தேவைகளை நிறைவேற்றினார்கள். ஆனால் தற்போதைய அதிமுக முழுமையான பார்ப்பன சேவகனாக BJP ஆதரவுக் கட்சியாக செயல்படுகிறது.

நாம் தமிழ்த் தேசிய விடுதலைக் கொள்கையை கொண்டவர்கள். பார்ப்பனி யத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளி யத்தையும். ஏகாதிபத்தியத்தையும் ஒழிப்பதே நமது கொள்கை, இந்தியா முழுவதும் செயல்படும், பார்ப்பன ஒழிப்பாளர்களிடமும் நிலவுடைமை முதலாளிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களிடமும், உலகளவில் தொழிலாளர் வர்க்கத்துடனும், அமைப்புகளிடமும் நல் தொடர்புகளை மேற்கொள்வோம்.

உடனடித் திட்டமாக 10% இடஒதுக்கீட்டு ஆதரவுக் கொள்கைக்கு எதிராக போராடும் அனைத்து சக்திகளுடனும் இணைந்து பணியாற்றுவோம்.

Pin It