பொருளின் மதிப்பு உழைப்பின் மதிப்பே
செருக்குடன் முதலி குறைத்திடும் கூலி
மிகையாய் அவனிடம் சேர்வதி னாலே
பகையாய் ஆவது மிகைப் பொருளாகி
உற்பத்திச் சக்கரம் உராய்வில் சிக்கப்
பற்பல மக்கள் வேலையை இழக்க
நிலைமை மாற்றப் போரைத் திணித்து
மலையெனக் குவிந்த பொருளை அழித்தும்
சந்தையை மீண்டும் பங்கு பிரித்தும்
எந்திர கதியில் முந்தைய வழியிலே
செல்வதால் மாறா நெருக்கடி இருக்க
மெல்லவே புவிவெப்ப உயர்வு என்னும்
கொடுநோய் தோன்றி வளருது பாரீர்
தடுத்தாட் கொள்ளும் வழியோ சமதர்மம்
அல்லாது இல்லை நிச்சயம் என்றே
சொல்லவும், தேறீர் ஆயின், பல்லுயிர்
வாழும் புவியைக் காத்திட மறுத்துப்
பாழும் வழியைக் கொள்பவர் ஆவீர் 

(ஒரு பொருளின் மதிப்பு அதை உருவாக்குவதற்குச் செலவிடப்பட்ட உழைப்பின் மதிப்பே ஆகும். (ஆனால்) முதலாளியோ செருக்குடன் (உழைப்பின் மதிப்பை விடக்) குறைவான கூலியையே கொடுக்கிறார்.  அப்படிக் குறைக்கப்பட்ட கூலி முதலாளியிடம் இலாபமாகச் சேருகிறது. அப்படி (உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பை விடக் குறைவான அளவே மக்களிடம் கூலியாக) இருப்பதால் சந்தையில் அனைத்துப் பொருட்களும் விற்பனையாகமல் தேங்குகின்றன. அதனால் மீண்டும் உற்பத்தி செய்ய முடியாத நிலை உண்டாகி பல மக்கள் வேலையை இழக்கின்றனர். இந்நிலையை மாற்ற (முதலாளித்துவ அரசு) மக்கள் மீது போரைத் திணித்தும் பொருட்களை அழித்தும், சந்தையை மீண்டும் பங்கு போட்டுக் கொண்டும், எந்திரம் போல முந்தைய வழியிலேயே செல்வதால் பொருளாதார நெருக்கடி தோன்றிக் கொண்டே இருக்கிறது. (நிலைமை இப்படி இருக்க) புவி வெப்ப உயர்வு என்னும் கொடு நோய் தோன்றி வளர்ந்து கொண்டு இருப்பதைப் பாருங்கள். இந்நோயைத் தடுத்து வெற்றி கொள்வதற்கு சோஷலிச உற்பத்தி முறையினால் மட்டுமே முடியும்; நிச்சயமாக வேறு எந்த வழியிலும் முடியாது என்று சொல்வதற்குத் துணிவு இல்லை என்றால் பல உயிரினங்கள் வாழும் பூமியைக் காப்பதற்கு மறுத்து, அது அழியும் வழியைக் கொண்டவர்களே ஆவீர்கள்.)

- இராமியா