உனக்கும் எனக்குமான உறவு குறித்து
இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும்
சாதி மாறி காதலித்த செயலுக்காய் சேரியின் பரப்பை
குறுவாளால் அரிந்து கொடுவாளால் வெட்டியெறிய
ஊர் கைகளை ஒன்றிணைத்து திமிரேற்றியிருக்கிறார்கள்
அனல் பற்றியெறியும் சுடுமணலைப்போல் கொதிப்பேறி
சாதிகூட்டம் போட்டு அரக்க பறக்க செய்திகளை வெளியிடுகிறார்கள்
வெட்டவெளியெங்கிலும் இனம் இனத்தோடுதான் கூடவேண்டுமென
கொந்தளிக்கும் ஓலங்களை பரப்புகிறார்கள்
வயக்காட்டில் வெளிக்குச் சென்ற இளம்பெண்களை
இழுத்துவைத்து கதற கதற புணர்ந்தவனெல்லாம் தனைமறந்து
என்னிலிருந்தே இரத்தகலப்பு உண்டாகுமோவென அலறியடித்து
சாதி கலவரத்தை மூண்டெழச்செய்து முடிவுகளை
என்னிலே தேடுகிறார்கள்…
திருமணமான பின்னும் கூட…
முடிவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை
சாதி மறுத்த முடிவுகள் தானாக நிகழுபவையுமல்ல
இரத்த கலப்பின்றி சாதியின் உளி கொண்டு எனை
செதுக்கிடத் துடிக்கிறார்கள்
அழியவேண்டிய சாதியை என்னுள்ளே நட்டுவைத்து
சாகா வரமளிக்க முனைப்போடு காத்திருக்கிறார்கள்
நான் எடுத்தியம்புகிற ஒவ்வொரு செயலும் எனது
சாதியின் சாயலாகவே இருக்கவேண்டுமென வற்புறுத்துகிறார்கள்
இன்று நேற்று வந்ததல்ல இந்த அச்சுறுத்தல்
பிறப்பிலேயே வேரூன்றப்பட்டுவிட்டது எனக்குள்
சாதி மறுத்து மணம் புரிந்த உன்னை
இறுக பற்றிக் கொள்ள தயாராகவேயிருக்கிறது மனது
ஆயுதங்களைக் காட்டி அழித்தொழிக்க முயன்றாலும்
ஊரை எரித்துச் சாம்பலாக்க நினைத்தாலும் இனியும்
ஒரே சாதிக் கருவை பெற்றெடுக்க விரும்பாது
என்னுள் சூழ் கொண்ட கருப்பை
சாதியின் வறட்டுக் கௌரவத்தை காக்க
வருணம் பூசியலையும் மந்தைக் கூட்டங்களைக் கொண்டு
இல்லற பந்தத்தை முறித்திடத் துடிக்கும் வெறிபிடித்த
சாதி உறவுகளை வெஞ்சினம் மூட்டி அழித்திட
நீண்டு செல்லட்டும் உனக்கும் எனக்குமான பயணம்!
- வழக்கறிஞர் நீதிமலர்