விஜய் டி.வி யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, பெரும் விளம்பரத்தைப் பெற்றுள்ளது. திராவிடர் இயக்கங்களின் இளைஞர்கள் - மாணவர்கள் சாதி ஒழிப்பு நோக்கில் இந்த நிகழ்ச்சியைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்து இயக்கங்களோ, இந்து மதச் சிந்தனைகளின் ஆதிக்கம் விவாதமாகக்கூடாது என்ற எண்ணத்தில் எதிர்க்கின்றனர்.
பிக் பாஸில், பார்ப்பன திரைக்கலைஞர் காயத்திரி என்பவர், ‘எச்சை’, ‘சேரி பிகேவியர்’ போன்ற பல ஜாதித்திமிர், பணத்திமிரான சொற்களைப் பயன்படுத்து கிறார். அதை நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களும் அப்படியே அனுமதிக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் கமலஹாசனும் அதற்கு மழுப்பலான பதிலைத் தருகிறார். அதனால், பிக் பாஸையும், கமலஹாசனையும், விஜய் டி.வியையும், காயத்திரியையும் எதிர்த்து சமூகவலைத்தளச் செயல்பாட்டாளர்கள் கொதித்து எழுந்துவிட்டனர். இந்த எழுச்சியை வரவேற்கிறோம். ஆனால், நம் எதிர்வினையைக் காட்ட வேண்டிய பல முக்கிய இடங்கள் இன்னும் இருக்கின்றன.
இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் ‘சேரி’ என்று தனி வாழ்விடம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் இருக்கிறது. பிற்படுத்தப் பட்டவர்கள் வசிக்க, ‘ஊர்’ அல்லது ‘குடியானத்தெரு’ என்று தனியாக இருக்கிறது. பார்ப்பனர்கள் மட்டும் வாழ அக்ரஹாரங்கள் இருக்கிறது. அக்ரஹாரங்கள் இன்று நவீனமயமாகி, பெருநகரங்களில் ‘பிராமின்ஸ் ஒன்லி அப்பார்ட் மெண்ட்டு’களாக உள்ளன.
‘சேரி பிகேவியர்’ என்ற சொல்லுக்கு அடிப்படைக் காரணமே இந்த அக்ரஹாரம் - ஊர் - சேரி என்ற ஏற்றத்தாழ்வான வாழ்விட முறைகள் தானே? அந்த முறையை எதிர்த்து கருத்துப்பேசியவர்கள் எத்தனை பேர்? குறைந்தபட்சம் முகநூலில் ‘ஊர் - சேரித் தீண்டாமையை ஒழிப்போம்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டவர்கள் எத்தனை பேர்?
இந்த ஏற்றத்தாழ்வான வாழ்விட முறைக்கு அடிப்படையாக இருப்பவை - இந்து மதத்தின் வேதங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இவற்றை நடைமுறைப் படுத்தப் பயன்படும் கடவுள்கள், கோவில்கள், நாட்டார் தெய்வ, குலதெய்வ வழிபாடுகள் போன்றவை ஆகும்.
ஊர் - சேரிப் பிரிவினைக்கு அடிப்படையன மனுசாஸ்திரம்
“இவர்கள் அனைவரும் பட்டணத்திற்கும் ஊருக்கும் வெளியில், மரத்தடி, தோப்பு, சுடுகாட்டிற்குச் சமீபமான இடத்தில் – இவர்களது தொழில் இன்னதென்று பிறருக்குத் தெரியும்படி, தொழிலைச் செய்துகொண்டு வாழ வேண்டும்.
இவர்களுக்கு உவோக பாத்திரங்கள் கூடாது. அவர்கள் தீண்டின பாத்திரங்கள் சுத்தம் செய்தாலும் பரிசுத்தமாகாது. அவர்கள் நாய் வளர்க்கலாம். மாடு முதலியவற்றை வைத்து வாழக்கூடாது. பிணத்தின் துணியை மட்டுமே உடுத்த வேண்டும். தங்கள் ஜாதியிலேயே திருணம் செய்ய வேண்டும்.
- மனுசாஸ்திரம், அத்தியாயம் 10, ஸ்லோகம் 49 – 53
பார்ப்பன, பி.ஜே.பி யின் காயத்திரியையோ, கமலஹாசன், விஜய் டிவிக்களையோ எதிர்ப்பதில் நேர்மை இருந்தால், நாம் மேற்கண்ட ஏற்றத்தாழ்வான வாழ்விட முறை, அதை உருவாக்கிய மேற்கண்ட அனைத்தையும் எதிர்க்க வேண்டும். இதுவரை இல்லாவிட்டாலும், இனிமேலாவது எதிர்க்க வேண்டும்
தோழர் பெரியார் இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடினார். “தாழ்த்தப்பட்டவர்களை அக்ரஹாரத்தில் குடியிருக்கச் செய்யவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாகச் ‘சேரி’ இருப்பதை ஒழிக்க வேண்டும்.” என்றார். ( விடுதலை ஏடு - 10.01.1947)
திமுக ஆட்சியின் போது 1972 ஜூன் 23ஆம் நாள் நொய்யலில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசுவதைக் கேளுங்கள்:
“இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்ற தற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.” என்றார்.
இன்றும், அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கட்டிக்கொடுக்கப்படும் வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தனியாகவும், தாழ்த்தப்பட்ட வர்களுக்குத் தனியாகவும் கட்டிக்கொடுக்கப்படுகிறது. ஊர் - சேரி என்ற தீண்டாமை அரசாங்கத்தாலேயே பின்பற்றப்படுகிறது. வழக்குக் கொடுப்பவர்கள் அரசை எதிர்த்தும் கொடுக்க வேண்டும்.
அரசிடம் வேலை வாங்குவது உடனே நாளைக்கே நடந்துவிடுவதல்ல. அதுவரை நாம் காத்திருக்க முடியாது. முதற்கட்டமாக, கிராமங்களில் வாழும் முற்போக்காளர்கள், குறிப்பாக பிற்படுத்தப் பட்டவர்கள் தங்களது சொந்த ஊர்களில், தங்களுக்குச் சொந்தமான காலி இடங்களை - அதே ஊரின் அருகில் சேரியில் வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். இலவசமாக வேண்டாம். அந்த ஊரின் மார்கெட் விலைக்கே விற்பனை செய்ய முன்வரவேண்டும். ஒருவேளை வாடகைக்கு விடுவதாக இருந்தால்கூட, அந்த ஊரின் சேரியில் வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.
நாம் முதலில் இயங்கத் தொடங்குவோம். அரசாங்கம் நம் பின்னால் வரும். 1928 ல் தொடங்கப் பட்ட சுயமரியாதைத் திருமணங்கள், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு அன்று சட்டப் படியான அங்கீகாரம் கிடையாது. அதை எல்லாம் தோழர் பெரியார் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வில்லை. தமது தோழர்களைத் துணிவுடன் திருமணம் செய்ய வைத்தார். அதன் பிறகு அண்ணா காலத்தில் 1968 தான் அவை சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற நிலை வந்தது.
தோழர் பெரியாரைப் பின்பற்றும் இயக்கங்களின் தோழர்கள் முதலில் இதுபோன்ற கடமைகளில் இறங்க வேண்டும். ஒரு சிலர் அப்படி ஏற்கனவே செயல்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மள மளவென உயர வேண்டும்.
‘கள்ளர்’ என்றாலும் வாடகைக்கு வீடு கிடைக்காது
தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, சமுதாயத்தில் ஆதிக்கவாதிகள் போல, மனப்பால் குடித்து வாழும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் இதே போன்ற இழிசொற்களைக் கேட்டிருப்பார்கள். அதன் வலியை அனுபவித்திருப்பார்கள்.
குறிப்பாக, தென் மாவட்டங்களிலேயே பல நகரங்களில்கூட கள்ளர், மறவர், தேவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டார்கள். பிள்ளைமார், வன்னியர், கவுண்டர், முத்தரையர், நாயக்கர் உள்பட பல பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், கிராமங்களில் தங்கள் சொத்துக்களை விற்றால்கூட, தமது ஜாதிக்காரர்களுக்கே விற்கமுடியும். வேறு ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதிக்குக்கூட விற்பனை செய்துவிட முடியாது என்ற அவலநிலை இன்றும் உள்ளது.
அப்படி ஒரு பெரும்பான்மை ஜாதி உள்ள கிராமத்தில், அந்த ஜாதி அல்லாத வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர் நிலமோ, வீடோ வாங்கி விட்டால்கூட, அவர் அந்த ஊர்க்காரராகக் கருதப்படமாட்டார். இறுதிவரை ஒதுக்கப்பட்டே இருப்பார். எதிரியாகவோ, தாழ்ந்தவராகவோ கருதப்படுவார். அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், அவரவர் ஜாதிகளால் பெருமைப்பட்டுக் கொள்ளும் இடங்களும் உள்ளன. அசிங்கப்படும் இடங்களும் உள்ளன.
இந்து மதம் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் ஒரு குணத்தைக் கற்பித்துள்ளது. கற்பிக்கப்பட்ட அந்தக் குணங்களைப் பொறுத்தே, ஒவ்வொருவரும் சமுதாயத்தில் மதிப்பைப் பெறுகிறார்கள். இந்த, இந்துமதப் பொதுப்புத்திகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றும், எப்போதும், எங்கும் பெரும் அவமதிப்பை மட்டுமே உண்டாக்குகின்றன. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவமதிப்பையும் - மதிப்பையும் சம அளவில் வழங்குகின்றன.
எனவே, தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் அனைவருக்கும் இருக்கும் இழிநிலை களை ஒழிக்க, இந்த இரட்டை வாழ்விடங்கள், இதற்கு அடிப்படையான இந்து மதத்தின் வேதங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இவற்றை நடைமுறைப்படுத்தப் பயன்படும் கடவுள்கள், கோவில்கள், நாட்டார் தெய்வ, குலதெய்வ வழிபாடுகள், ஜல்லிக்கட்டுகள் அனைத்தையும் எதிர்க்க முன்வர வேண்டும்.
திராவிடர் இயக்கங்களின் இளைஞர்களும், மாணவர்களும் இந்த ஊர் - சேரிப் பிரிவினைகள், அதற்குக் காரணமான இந்துமத வேதங்கள் சாஸ்திரங்கள், கடவுள்களை எதிர்த்துப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அந்தத் தோழர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுகிறார்கள். அவர்களின் எதிர்ப்பு நேர்மையானது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் ‘சேரி பிகேவியர்’ பற்றி ஸ்டேட்டஸ் போடுபவர்களும், அதை ட்ரெண்ட் ஆக்குபவர்களும் மேற்கண்ட வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்தையும் எதிர்த்து சமூகவலைத்தளங்களில் கருத்துத் தெரிவிக்க வேண்டும். கருத்துச் சொல்வதோடு நிற்காமல், தத்தம் வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும்.