பவுண்டரி தாண்டும் பந்துகளுக்குத் தெரியாது
தான் யாரோ ஒருவனின் ஆட்டத்தின் நிர்ணயமென்று
பந்துகளின் விதிகள் வேறு ஆடுபவனின் விதிகள் வேறு
பலமுள்ளவன் ஓங்கி அடிக்கின்றான்
எல்லைக் கோட்டை தாண்டி விழுகிறது
பார்வையாளர்கள் கை தட்டுகிறார்கள்
அடுத்த பந்தை கிரகத்திற்கப்பால் அடிக்கிறான்
ஆடுகிறவனின் வெறி பூமி முழுவதும் பரவுகிறது
வெளியே போன பந்து ஒரு தலையை கூட்டி வருகிறது
உயிருள்ள தலை பரிசு மீண்டும் அடிக்கிறான்
இந்த முறை இரண்டு தலைகளுடன் வருகிறது பந்து
பார்வையாளர்களின் தலைகள் பந்துகளாகின்ற‌ன‌
நாடுகள் பந்துகளாகின்றன‌
ஆட்டம் முடியவில்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது
யாரோயொருவன் தோல்வி முகத்தோடு திரும்புகிறான்
அவன் சமாதானங்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம்
பிறகொரு நாள் கவனிக்கிறோம்
நாம் தலையில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பதை.
நம்மைப்போல் நிறைய மனிதர்கள்
தலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்
தாராளமயமாக்கலில் தலைகள் விலைக்கு கிடைக்கின்றன
உடலுக்குப் பொருந்துகிற ஒரு தலையை வாங்கி
அணிந்து கொண்டுதான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.