வட்டமும் சில கோடுகளும்
வரைந்த குழந்தை
அம்மாவைக் கண்டது.
வட்டத்திற்குள்
மேலும் ஒரு கோட்டை
படுக்க வைத்து
அப்பாவையும் கைப்பிடித்தது.
மேலும் ஒரு வட்டத்தை
அம்மாவுக்குப் பக்கத்தில் வைத்து
தானே மூன்றாவதானது.
படைத்தவர்களை ஒன்றாகவும்
படைப்பை தனியாகவும்
காட்சிப்படுத்திய குழந்தையின்
கன்னத்தில் முத்தமிட்ட தாய்
அம்மாவுக்கு
முத்தம் தாவென யாசிக்கையில்
குழந்தை முத்தமிட்டது
தான் படைத்த அம்மாவிற்கு.
- கி.மூர்த்தி