முதலியச் சமூகம் பொருள்வளம் ஏத்தும்
அதனால் மக்கள் பெரும்இன்பம் துய்ப்பர்
சமதர்மம் என்றால் ஏழ்மையே மிஞ்சுமென
மமதையில் கூறும் முதலிய அறிஞனே
மலைபோல் பொருட்கள் குவிந்திருந் தாலும்
வேலை யில்லோர் வாங்குவது எங்ஙனம்?
பொருள்வளம் அறியாச் சுரண்டல் சமூகம்
பெரும்வளம் பெற்றது சமதர்மம் ஏற்றபின்
என்பதை அறிந்தும் பொய்யுரை தகுமோ?
உந்தன் வழியில் புவிவெப்ப உயர்வு
என்னும் பெருநோய் பெற்ற பின்பும்
நோய்தீர்க்கும் மருந்தாம் சமதர்மம் தன்னைக்
காய்ந்தே இருப்பது அறிஞனுக் கழகோ?
(முதலாளித்துவப் பொருளாதார முறை, பொருள் வளத்தை உயர்த்துவதால் மக்கள் (அப்பொருட்களை நுகர்ந்து) இன்பமாக வாழ்வார்கள்; சோஷலிசம் என்றாலே ஏழ்மை தான் மிஞ்சும் என்று மமதையில் கூறும் முதலாளித்துவ அறிஞனே! பொருட்கள் மலை போலக் குவிக்கப்பட்டு இருந்தாலும் (முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத அம்சமான) வேலையற்றோர், அவற்றை எப்படி வாங்க முடியும்? பொருள் வளம் இல்லாமல் (ஏழ்மையில்) இருந்த (ரஷ்யா, சீனா போன்ற) சுரண்டல் (கோலோச்சிக் கொண்டிருந்த) நாடுகள், சோஷலிசத்தை ஏற்றபின் தான், பெரும் வளத்தைப் பெற்றன என்பதை அறிந்தும் (சமதர்மம் என்றால் ஏழ்மை என்று) பொய் உரைப்பது சரி தானா? உந்தன் (முதலாளித்துவ) வழியில் புவி வெப்ப உயர்வு என்னும் பெரும் நோயைப் பெற்ற பின்பும், அந்நோயைத் தீர்க்கும் (சரியான) மருந்தான சமதர்ம உற்பத்தி முறையின் மீது வெறுப்பாகவே இருப்பது அறிஞர்களுக்கு அழகோ?)
- இராமியா