கீற்றில் தேட...

கூட்டம் அழைக்கிறது
யார்வேண்டுமானாலும் வரலாம்
உலகம் வெளிச்சத்தால் நிரப்பப் பட்டுள்ளதென
நம்புகிறவர்கள்
உலகம் இருட்டால் நிரப்பப் பட்டுள்ளதென
நம்புகிறவர்கள் வரலாம்
ஆதாமின் உறவுக்காரர்களும் வரலாம்
ஏவாளின் சொந்தமும் வரலாம்
பச்சை நிறம் பிடித்தவர்களும்
நீல நிறம் பிடித்தவர்களும் வரலாம்
காவியென்றாலும் தடையில்லை
சொற்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும்
மெளனத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் வரலாம்
பிங்பாங் தியரியில் நம்பிக்கை கொண்டவர்களும்
ஆறே நாட்களில் கடவுள்
உலகைப் படைத்தார் என்பவர்களும் வரலாம்
புதைக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க
சொந்த ஊருக்குள் வருகிறார்கள் என்று சொல்பவர்களும்
ஆவிகள் டங்ஸ்டன் இழைகளுக்கு பயப்படுகின்றன என்பவர்களும் வரலாம்
கோழிக் குழம்பு சாப்பிடுகிறவர்களும்
வாஸ்து மீன் வளர்ப்பவர்களும் வரலாம்
இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் வயிறு
வீங்கிவிடுமென்பவர்களும் வரலாம்
கூட்டத்திற்கு எந்த ஆடை அணிய வேண்டுமென்பதை
நீங்களே முடிவு செய்யலாம்
ஒரே நிபந்தனை யாருடைய ஆடை உயர்ந்ததென விவாதிக்க கூடாது
கூட்டத்திற்கு வருகிறவர்களுக்கு தலையில்லா
பொம்மைகள் வழங்கப்படும்
அதற்குத் தலையை மாட்டிவிடுவதும் உயிர் கொடுப்பதும்
உங்கள் பணியாக்கிக் கொள்ளலாம்
இதற்கும் நிபந்தனையிருக்கிறது பொம்மைகளை தெருக்களில்
விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது
கூட்டத்திலிருந்து திரும்பிப் போகிறவர்களுக்கு
ஒரு பெட்டி வழங்கப்படும்
அந்தப் பெட்டி சரித்திரப் பேழையாகவுமிருக்கலாம்
சவப்பெட்டியாகவுமிருக்கலாம்.
உங்களுக்கு எந்தப் பெட்டியென்பது கூட்டம் முடிவு செய்யும்.
வாருங்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது
மீண்டும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது.