இலண்டன் நகரின் ஹைகேட் காட்டில்
உலவிடும் காவலன் தன்னிடம் கேட்டேன்
உலகின் உயிரொளி காரல் மார்க்சின்
நல்லுடல் புதைத்த இடத்தைக் காட்டென
அவனும் உரைத்தான் தலைமகன் கருத்தை
அவனியில் காணலாம் உடலைப் புதைத்த
இடமே காணும் நினைப்பில் இருந்தால்
உடனே உள்ளே செல்லலாம் என்று

(இலண்டன் நகரத்தில் உள்ள ஹைகேட் இடுகாட்டிற்குச் சென்று, அங்கு இருக்கும் காவலனிடம், உலகின் உயிரொளியான கார்ல் மார்க்சின் நல்லுடலைப் புதைத்த இடத்தைக் காட்டும்படி கேட்டேன். மாமேதை கார்ல் மார்க்சின் கருத்துகளை உலகம் எங்கிலும் காணலாம் என்றும், அவருடைய உடலைப் புதைத்த இடத்தைத் தான் பார்க்க வேண்டும் என்றால் உடனே உள்ளே சென்று பார்க்குமாறும் அக்காவலன் கூறினான்)

- இராமியா