கீற்றில் தேட...

வீட்டில் சில செடிகளை
நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
பெருமரமாகி
கிளைபரப்பி நிற்கிறது..!

சின்னஞ்சிறு மழலையாய்
கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
பருவப் பெண்ணாக..
சிவந்து நிற்கிறாள்..!

அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
மலைகளின் உச்சியில்
என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
சில குறிஞ்சிப் பூக்கள்
பூத்திருந்தன..!

என்னோடு சிறைக்கு வந்த
கொலைக் கைதிகளில் சிலர்
தண்டனைக் காலம் முடிந்து
வீடு திரும்பி விட்டனர்..!

எனக்கான விசாரணைக் காலம்
முடிவதற்குள்
சிலரின் ஆயுள் தண்டனையும்
முடிந்திருந்தது..!

நீதி தேவதையின் குருட்டு விழிகள்
கண் திறந்து பார்ப்பதற்குள்
என் இளமை வனப்பு
எரிந்து சாம்பலாகி இருந்தது..!

பிடிபட்ட முதல் நாள்
சித்ரவதைகளுக்கு ஊடாக
நான் சொன்ன வாக்குமூலத்தையே
இறுதியில்
தீர்ப்பாகத் தந்தார்கள்
”நான் குற்றமற்றவன்” என்று..!