நதியில் கரையும் இரவு
காட்டுப் பூச்செடி
மழைநிலமெங்கும்
படர்ந்து செழித்திருந்தது
பனிக்காலத்தின் வரவை அறிவிக்கும்
மஞ்சள் நிறப் பூக்களால் நிரம்பியிருந்தது
நதிக்கரையோரம்
காட்டு மரங்களின்
பழுத்த சருகுகள்
ஈரமாகக் கிடந்தன
அந்த வழித்தடத்தில்
இப்போது இந்த நதியைக் கடந்து செல்ல வேண்டும்
படகோட்டியில்லாத படகின் துடுப்பு
கரையில் கிடந்தது
நதிநீரும்
இரவும்
ஏனோ அச்சப்படுத்தியது
முன்னெப்போதும் இல்லாத வகையில்
மலர்ந்த பூவின் வாசம்
ஞாபகங்களை ஒவ்வொன்றாக மலர்த்தியது
உலர்ந்த சருகுகளின் ஓசையுடன்
ஒற்றைத் துடுப்பினை கையிலெடுத்து
படகை நோக்கிச் சென்றேன்
படகும்
தனித்த பயணமும் கனவின் நகர்த்தலாக இருக்க
நிலத்தின் ஈரம்
மனதில் படர்ந்து கசிய
படகை நகர்த்தத் துவங்கினேன்.
**
பின் மாலை நினைவு
ஒரு மாலைப் பொழுதை
ரசிப்பதற்கு
பின் காலைப் பொழுதில் விழித்திருக்க வேண்டும்
பின் தூங்கி முன் எழுகையில்
ஒவ்வொரு விடியலும்
கண்களில் ஒளிரும்
அதிகாலை உயிர்ப்பென்பது
எத்தனை அழகானது என்பது
காதலர்களுக்கு மட்டுமே தெரியும்
மேலும்
அந்தியில் சூரியன் மறையும் போது
உயிர்க்கும் காதல் அத்தனை ரம்மியமானது
ஒரு மல்லிகையின் மணம்போல
அது இருக்கும்
மல்லிகையாய் மலர்ந்து கொண்டிருக்கும்பொழுது
அதை நுகர்ந்தவன் யார் என்பதை
அறிந்தேயிருக்கிறேன்.
- சக்தி ஜோதி (