fidel castro 500

நாங்கள் புறப்படுவோம்
விடியலின் சூரியப் பிரகாச தீர்க்கதரிசியே
மங்கலான
ஜன சஞ்சாரமற்ற பாதைகளில் நீ மிகவும் நேசிக்கும்
அந்தப் பச்சை நிற முதலைகளை விடுவிக்க வேண்டி
நாங்கள் புறப்படுவோம்

அட்டூழியங்களை முறியடித்து எமது நெற்றிகளில்
மார்ட்டியின் எழுச்சி நட்சத்திரங்களால் பொறிக்கப்பட்டு
வெற்றி பெறுவோம் அல்லது எமது சாவைச் சந்திப்போம்
எனச் சபதம் செய்வோம்
முதல் துப்பாக்கி வெடிச்சப்தம் எழும்போதும்
முழுக்கிராமப்புறமும்
புதிய ஆச்சரியத்துடன் விழித்துக் கொள்ளும்போதும்
அங்கே நாங்கள் அமைதியின் போராளிகள்
உன் பக்கத்திலிருப்போம்

எல்லாத் திசைகளிலும் உன் குரல்
விவசாயச் சீர்திருத்தம் நீதி
ரொட்டி
சுதந்திரத்தின் செய்திகளைக் கொண்டு செல்லும்போது
அங்கே நாங்கள் உன்னை எதிரொலித்தபடி உன் பக்கத்திலிருப்போம்
கொடுங்கோலனை விரட்டியடிக்கும் நடவடிக்கை
முடிவடையும் நேரத்தில் அங்கே நாங்கள்
முடிவான போருக்கு ஆயத்தமாக உன் பக்கத்திலிருப்போம்
தாய்நாட்டை மீட்டெடுக்கும் அம்பு
அந்த மிருகத்தைத் துளைக்கையில் காயம் பட்ட விலாவை
அவன் நக்கிக் கிடக்கையில் அங்கே நாங்கள்
எமது ஆத்மாக்களின் கர்வத்துடன் உன் பக்கத்திலிருப்போம்

நேர்த்தியாய் உடையணிந்த
மேனாமினுக்கிப் பணியாட்கள் கொண்டுவரும் பரிசுகளால்
எமது உறுதி பலவீனமாக்கப் படலாம் என என்றுமே நினையாதே
நாங்கள் கேட்பது ஒரு துப்பாக்கி துப்பாக்கி ரவைகள்
மேலிருந்து சுடுவதற்கு ஒரு குன்று
மட்டுமே
வேறேதும் வேண்டேன்

எம் வழியில்
ஈய ரவை குறுக்கிடுமேயானால்
நாம் கேட்பதெல்லாம்
எமது கொரில்லா எலும்புகளை மூட
அமெரிக்க வரலாற்றுத் திசை வழியில்
கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி

வேறேதுமில்லை.

- சே குவேரா

தமிழில்: யமுனா ராஜேந்திரன்

Pin It