நான் எப்படி இருக்க வேண்டுமென நீ சொல்லிக்கொடுக்கிறாய்
அப்படிச் சொல்வதற்கு உரிமை உள்ளதென்கிறாய்
யாரோடு பேசுகிறேன்
என் சொற்கள் யாரிடம் பிரியமாக இருக்கின்றன
என்பதை உளவு பார்க்கிறாய்
இப்படி எதிர்பார்ப்பதற்கு நீயும் நானும்
ஒரே ஊர் என்பது கரணமாக இருக்கலாம்
நீயும் நானும் ஒரே சாதியென்பதால் உரிமை எடுத்திருக்கலாம்
ஆனால் ஒரே சாதியென்பது தகுதியா
அல்லது ஒரே சாதியென்பது உடைக்க முடியாத ஒப்பந்தமா
அல்லது ஒரே சாதியென்பது வாழ்க்கையின் உத்தரவாதமா
என்னை கேலி பேசியவன் அடுத்த சாதியெனில்
வன்முறை உனக்குள் சதிராட்டமாடும்
என் நிழலாய் சாதி எப்போது இருந்திருக்கிறது
என் கண்ணீருக்கு ஆதரவாய் எப்போது இருந்திருக்கிறது
அது ஒரு துடைப்பக் கட்டையாக கூட இருந்ததில்லையென்று
வரதட்சனை கொடுக்க முடியாமல்
வாழாவெட்டிகளாய் தெருவில் நடமாடுபவர்களே சொல்வார்கள்
அடுத்த சாதிக்காரனை வெட்டிக்கொள்வதற்கு உனக்கு சாதி வேண்டும்
என்னை வாழவைக்க மட்டும் உனக்கு பணம் வேண்டும்
உன் சாதி உனக்கு ஆயுதமெனில் அது
எப்படி அன்பை பொழியும் ஒரு ஆகாயமாக இருக்க முடியும்
நீ சாதிப்புதர்களின் மறைவில் இருக்கிறாய்
அதிலிருந்து வெளியே வருவதால் இழக்கப் போவது ஒன்றுமில்லை
சொத்து தகறாரில் கொலை செய்யப்பட்டவர்கள்
கூரை மாற்றமுடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள்
வறுமை காரணமாக மகன்களை கொத்தடிமைகளாய் விற்றவர்கள்
கூலிக்காக தன் சாதிக்காரனை எதிர்த்து செத்துப்போனவர்கள்
இதே ஊரில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்
பட்டினி கிடந்தவர்களுக்காக உன் சாதி சோறு போட்டிருக்கிறதா
உன் தலைவனும் நீயும் ஒரே சாதிதானே
சுதந்திரமாக அவன் பெரிய வாசலுக்குள் நுழையமுடிகிறதா
அவனுக்கு தேவைப்படும் போது நீ சாதிக்காரன்
மற்ற நேரங்களின் நீ பிச்சைக்காரனென்பதை எப்படி மறந்தாய்
சந்தேகப்பட்டு தன் மனைவி மீது
மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தினானே உன் சாதிக்காரன்
அவள் எரியும்போது உன் சாதி எங்கே போனது
எந்தப் பெண்களுக்கும் மலம் துடைக்கக்கூட
பயன்படவில்லை அவர்களுடைய சாதி
எனக்கு மட்டும் எப்படி அது குடையாக மாறும்
என் சாதிப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கமாட்டேன்
என் சாதிபெண்களை இழிவு படுத்தமாட்டேன்
என் சாதிக் காரனை எந்த காரணத்திற்காகவும் வெட்ட மாட்டேன்
இன்னும் ஆயிரமாயிரம் மாட்டேன் இருக்கிறது
எல்லாவற்றையும் உன் சாதி ஏற்றுக்கொண்டால்
அதே சாதித் திமிரோடு என்னிடம் வா
அப்படி முடியாதெனில் சாதியை எறிந்துவிட்டு மனிதனாக வா
என் மனசுக்குள் நீ இருந்தால் அங்கே சந்திக்கின்றேன் உன்னை.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மலம் துடைக்கவும் உதவாத சாதி
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்