இனி, இப்பிரச்சினையை புத்தரின் பார்வையிலிருந்து பரிசீலனை செய்வோம். அத்தகைய ஒரு பதிலை அளிப்பது, புத்தருக்கு இயற்கையானதாக இருந்திருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில், பெண்களின் மீதான புத்தரின் நடத்தைப் போக்கின் மீது சார்ந்திருக்க வேண்டும். ஆனந்தாவுக்கு அவர் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளதன்படி, புத்தர் பெண்களை சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறாரா? இது தொடர்பான விவரங்கள் (உண்மைகள்) எவை?
இரு எடுத்துக்காட்டுகள் உடனே நம் மனதில் படுகின்றன. ஒன்று விசாகம் பற்றியது. அந்த அம்மையார் புத்தரின் எண்பது முக்கிய சீடர்களில் ஒருவர். "தானம் வழங்கும் தலைவி' என்பது அவருக்கு இடப்பட்ட பெயர். புத்தரின் அறிவுரையை கேட்பதற்கு விசாகம் ஒரு முறை செல்லவில்லையா? அவருடைய மடத்திற்குள் அந்த அம்மையார் நுழையவில்லையா? பெண்களின்பால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆனந்தாவுக்கு ஆணையிட்டது போல, விசாகத்தின்பால் புத்தர் நடந்து கொண்டாரா? அந்த சந்திப்பின்போது அமர்ந்திருந்த பிக்குகள் என்ன செய்தார்கள்? அவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினார்களா?
நமது மனதில் படுகிற இரண்டாவது எடுத்துக்காட்டு என்னவெனில், வைசாலியைச் சேர்ந்த அமரபாலி தொடர்புடையதாகும். இந்த அம்மையார் புத்தரைக் காணச் சென்று, அவருக்கும் அவருடனிருந்த துறவிகளுக்கும், தனது வீட்டில் வந்து உணவருந்துவதற்கு அழைப்பு விடுத்தார். அவர், வைசாலியின் மிகவும் எழில்வாய்ந்த பெண். புத்தரும் பிக்குகளும் அவரை (காண்பதினின்று) தவிர்த்தார்களா? அதற்கு மாறாக, அவர்கள் அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள் (லிச்சாவிசினுடைய அழைப்பை நிராகரித்தார்கள், அதனால்தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் கருதினார்); அந்த அம்மையாரின் இல்லம் சென்று விருந்துண்டார்கள்.
சம்யுக்த நிக்காயா இவ்வாறு கூறுகிறது : பஜ்ஜுயாவின் மகள் கோகனடா, இரவு அதிக நேரமாகிவிட்டபொழுது, மகாவனம் முழுமையையும் தனது பேரழகால் ஒளிரச் செய்தவர். அவர் வைசாலியில் தங்கியிருந்த புத்தரை காண வந்தார். பசெனாஜித் மன்னரின் மனைவி அரசி மல்லிகா, மத போதனைகளுக்காக அடிக்கடி புத்தரிடம் சென்று வந்த செய்திகள் பிடகாக்களில் நிறைய வந்துள்ளன.
இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, புத்தர் பெண்களை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதும், புத்தரைச் சென்று காண்பதற்கு பெண்கள் அச்சங் கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது. சாதாரண சீடர்களின் குடும்பங்களுக்கு வருகை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று புத்தர் பிக்குகளுக்கு அறிவுரை கூறினார் என்பது உண்மையே. ஏனெனில், பெண்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்வதால் மனித பலவீனத்திற்கு இரையாகக் கூடுமென்று புத்தர் அச்சம் கொண்டார். ஆனால் அத்தகைய வருகைகளை அவர் தடை செய்யவில்லை, மேலும், பெண்களின்பால் எத்தகைய வெறுப்புணர்ச்சியையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதில் புத்தர் கறாராக இருந்தார் என்பதும் உண்மையே. ஆனால், அவர் என்ன அறிவுரை கூறினார்? பெண்களுடன் எல்லா தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும் என்று, அவர் பிக்குகளுக்கு அறிவுரை கூறினாரா? இல்லவே இல்லை. அவர் ஒரு போதும் அத்தகைய எந்தத் தடையையும் விதிக்கவில்லை. மாறாக, பிக்குகள் பெண்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் தாயார், சகோதரி அல்லது மகள் என்ற வகையில் அவர்களுடன் பழக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
புத்தரை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக இருக்கும் இரண்டாவது ஆதாரம், அவருடைய சங்கத்தில் பெண்கள் சேர்வதை புத்தர் எதிர்த்தார் என்றும், பிக்குணி சங்கத்தை (இறுதியில் பெண்கள் சேர்வதற்கு அனுமதித்தபோது) பிக்கு சங்கத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டுமென்று கூறினார் என்ற வாதமுமாகும். இது தொடர்பாகவும் நிலைமையை மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். பரிவர்ஜா (தீட்சை) பெறுவதற்கான மகாபிரஜாபதியின் கோரிக்கையை புத்தர் ஏன் எதிர்த்தார்?
பெண்கள் தாழ்ந்த வகுப்பினரென்றும், அவர்களை அனுமதித்தால், பொதுமக்களின் பார்வையில் சங்கத்தின் தகுதியை அது தாழ்த்திவிடும் என்றும் புத்தர் கருதியதாலா அதை எதிர்த்தார்? அல்லது, அறிவு ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் தனது கொள்கை, கட்டுப்பாடு ஆகிய லட்சியத்தை எய்துவதற்குப் பெண்கள் வல்லவர்கள் அல்ல என்று கருதியதால் புத்தர் அதை எதிர்த்தாரா? இவற்றில் இரண்டாவது கேள்வியை ஆனந்தா புத்தரிடம் கேட்டார்.
விவாதத்தின்போது புத்தர், ஓரளவு பிடிவாதமாக இருப்பதாக ஆனந்தா அறிந்தபோது, அவர் புத்தரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். அய்யப்பாட்டுக்கோ, விவாதத்திற்கோ சிறிதும் இடமளிக்காமல் புத்தர் திட்டவட்டமாக பதிலளித்தார். தமது கொள்கையை நிறைவேற்றுவதற்கு பெண்கள் முழுமையாக தகுதியுடைவர்கள் என்றும், பரிவர்ஜாவை (தீட்சை) எடுத்துக் கொள்வதற்கான அவர்களுடைய கோரிக்கையை தான் மறுத்ததற்கு அது காரணம் அல்ல என்றும் அவர் கூறினார். எனவே, அறிவு அல்லது பண்பாட்டு ரீதியாக பெண் ஆணை விடத் தாழ்ந்தவர் என்று புத்தர் கருதவில்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது.
- தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 112