வெளிச்சமில்லா
இரவுகளைத் தேடித்தேடி
கண்விழித்துக் கொள்கிறது
காமம் தலைக்கேறிய ஆண்குறிகள்

இடம் பொருள் ஏவலின்றி
எவ்விடத்திலும்
தன்னிடமிருக்கும் எதையாவது வெளிக்காட்டி
எதிர்பாலரை தன்வசப்படுத்தி
மண்டியிட்டு நக்கிடத் தயாராகவேயிருக்கிறது

காவல்துறையில் தொடங்கிய
பாலியல் சூதாட்டம் பட்டியலிட்டுப் போகிறது
கல்விக்கூடங்கள் வரை

ஆசிரியர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும்
மதிப்பெண் வழங்குதலை மூலதனமாய்க் கொண்டு
கட்டாயப்படுத்தியும் மிரட்டியும்
காமவெறி களியாட்டத்தை
திணித்துக்கொண்டேயிருக்கிறது

பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
பசுத்தோல் போர்த்திய மிருகமாய் மாறி
அப்பாவிக் குழந்தைகளையும்
இளம் பெண்களையும்
தொடர்ந்து சூறையாடிக் கொண்டிருக்கிறார்

சிலப்பதிகாரத்தின் நாயகியாம்
கற்புக்கரசி கண்ணகியென
கடலோரம் சிலைநிறுத்தி
கவிபாடும்  தமிழகம்தான்
வகைவகையான புணர்தலை
அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது
வயது வித்தியாசமின்றி

கேட்பாரற்றுக் கிடக்கும்
சமூக அநீதிகள்
பாவ மன்னிப்பின்றி தண்டனைகளின்றி
பாலின அதிகாரத்தால்
புணர்ந்து போகும்
அயோக்கியத்தனத்தை
பாலின ஆதிக்கக் கொள்கையாய்
கட்டவிழ்த்துப் போகிறது

இருளில் முளைத்த மிருகங்கள்
இப்போதெல்லாம்
பகலிலும் அலைந்து கொண்டிருக்கின்றன‌
வெற்றுடம்போடு
வெட்கமில்லா இரவுகளைத் தேடி…

- வழக்கறிஞர் நீதிமலர்