கீற்றில் தேட...

ஓடு ஓடு ஓடடா - விரைவாய்
 ஓடிக்கொண்டே இருப்பாய் - தமிழா !
 ஓடு ஓடு ஓடடா
 விடுதலை ஒன்றே இலக்காய் ஓடு
 வென்றெடுப்பதே குறியாய் ஓடு    (ஓடு…ஓடு…ஓடடா.)

 பெரியார் போட்ட பாதையில் ஓடு
 பகுத்தறி வென்னும் ஆயுதத் தோடு
 உறங்கி விடாதே ஓய்ந்து விடாதே
 உனது அப்பன் தமிழன் என்றால் (ஓடு....ஓடு)

 மானை நரிகள் காப்பது மில்லை
 மாற்றான் எவனும் அறத்தோ டில்லை
 மாற்றடா தமிழர் போரின் கலையை
 ஓட ஓட விரட்டடா பகையை  (ஓடு…ஓடு…)
 
 நானும் நீயும் தமிழன் தானே?
 நமக்கு மானம் உயிராம் தானே?
 மானம் என்பதே விடுதலை தானே?
 மறந்தால் நம்மினம் அழியும் தானே? (ஓடு….ஓடு..)
 
 ஆசையும் அச்சமும் நமக்கு மில்லை
 ஆருயிர் என்பதை இழந்தே மீண்டோம்
 கூசும் சூத்திர இழிவை ஒழிக்கக்
 கருப்புக் கவசமாம் ஆடை பூண்டோம்! (ஓடு..ஓடு..)

- குயில்தாசன்