வேலையின்றி திரும்பிக் கொண்டிருப்பவனிடம்
சொல்லிக் கொண்டிருக்காதே
உன் பெயர் எழுதப்பட்ட அரிசி உன்னிடம் வருமென்று
மரம் வச்சவன் தண்ணீர் ஊற்றவில்லையென்று
சலித்துக் கிடக்கிறார்கள்
வயிற்றுக்குள் சோமாலியாக்கள் இருக்கின்றன
அவர்கள் தான் மந்திரிகளையும்
மன்னர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்
மரங்களின் கிளைகளை மேற்கூரைகளாக வைத்திருக்கிறார்கள்
பழைய செய்தித்தாள்களை
படுக்கை விரிப்புகளாக வைத்திருக்கிறார்கள்
இந்தியனென்று பெருமைப்படுவதைக் காட்டிலும்
அவர்களுக்கு நிறைய வேலைகளிருக்கின்றன
இரைப்பைகள் மண்ணினால் செய்யப்பட்டிருந்தால்
அவர்கள் கூழாங்கற்களைத் தின்று பசியாறுவார்கள்
அது நில நிற ஆகாயமெனில்
மேகங்களை விழுங்கிக் கொள்வார்கள்
துர்வாய்ப்பு அது எதுவும் ஜீரணமாவதில்லை
தண்ணீரைக்கூட ஜீரணமாக இரைப்பைகளைத் தான்
வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்றைக்கேனும் அரசாங்கத்தைத் தேடிப்போகும் போது
அரசாங்கம் எல்லா கதவுகளையும் மூடிக் கொண்டு
கதவுகளற்ற மலையாகிவிடும்.
எல்லாப்பக்கமும் இறுகிப்போயிருக்கும்.
இளகிய ஜன்னல்களோ, துவராங்களோ கூட
அந்த மலையில் இருக்காது.
அவர்களால் எப்படி உணர முடியும் தான் இந்தியனென்று.