சந்தை விதிகள் உழைப்பவர் தம்மைச்
சிந்தையில் செயலில் ஒருபுறம் ஒடுக்க
கூடுதல் கெடுதலாய்ப் புவிவெப்ப உயர்வு
பீடு நடையுடன் அழிவுப் பாதையில்
உயிரினம் தன்னை மெதுவாய்த் துரத்த
பயின்ற அறிஞர் இடித்துரைக்க அஞ்ச
மனித குலமே காணாய் இதனை
இனியும் எழேலெனில் அழிவது தகுதியே
 
((சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும்) சந்தை விதிகள் உழைக்கும் மக்களின் சிந்தனையையும் செயலையும் ஒரு புறம் வாட்டி எடுக்க, கூடுதல் கெடுதலாய் (இலாபம் தருகிறது என்பதற்காக இப்புவியின் வெப்பத்தை உயர்த்தும் பொருட்களின் உற்பத்தியைக் கட்டாயப்படுத்தி) இப்புவியின் வெப்பத்தை உயர்த்தி, (அதனால் இப்புவில் உள்ள) உயிரினங்களை அழிவுப் பாதையில் வெற்றிகரமாகத் துரத்திக் கொண்டு இருக்க, கற்றறிந்த அறிஞர்கள் (இப்போக்கிற்கு எதிராக, சோஷலிச உற்பத்தி முறையை ஏற்பது தான் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று) ஆதிக்கவாதிகளுக்கு இடித்து உரைக்க அஞ்ச, மனித குலமே! (இந்த இழி நிலையைப்) பாராய்! இனியும் (இந்த இழி நிலைக்கு எதிராகப் பொங்கி) எழவில்லை என்றால் (மனித குலம்) அழிந்து போவதற்குத் தகுதியுடையதே ஆகும்.)

- இராமியா

Comments

2 comments

2
Rajendran
மனித குலம் அழியத் தகுதியடையது என்று கூறுவது மன வருத்தத்தையளிக்கிறது. இாரமியா அவர்களே! தங்களிடமிருந்து இப்படிப்பட்ட நம்பிக்கை இழந்த கருத்தை எதிர்பார்க்கவில்லை.
இராமியா
நண்பரே! புவி வெப்ப உயர்வு இவ்வுலகை அழிவுப் பாதையில் உறுதியாக அழைத்துச் செல்கிறது என்று திண்ணைத் தூங்கி அரசியல்வாதியில் இருந்து அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா வரையிலும் மிகத் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். சந்தைப் பொருளாதார விதியோ புவி வெப்ப உயர்வை உயர்த்தும் பொருட்களை உற்பத்தி செய்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அத்தோடு அல்லாமல் புவி வெப்பத்தைக் குறைக்கக் கூடிய மரம் வளர்த்தலையும் வேளாண்மையையும் ஊக்குவிக்கவில்லை என்பது மட்டுமல்ல; அவற்றை வலுக் கட்டாயமாக நசித்து வருகின்றது. சந்தைப் பொருளாதார விதிகளை உடனடியாக மூட்டை கட்டி வைத்துவிட்டு சோஷலிசப் பொருளாதார விதிகளை அவசர அவசரமாக மேற்கொண்டால் ஒழிய உலகைக் காக்க முடியாது என்று தெளிவாகத் தெரிகின்ற நிலையில் அதைப் பற்றிய விவாதம் கூட செய்யாத மனித இனத்தின் மேல் இத்‌தகைய ஆத்திரமூட்டும் சொற்களாவது உணர்வு கொள்ள வைக்க முடியுமா என்ற ஆசையில் தான் இவ்வாறு எழுத வேண்டி உள்ளது. பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.