கீற்றில் தேட...

kiss_land_380தடைகளை மீறியபடிக்கு ஒரு தொடர் ஓட்டம்
அவசியம் தேவைப்படுகிறது நம் அனைவருக்கும்
ஏதாவது ஒரு தருணத்தில்,
 
தலைமுறைகள் பல கட்டி எழுப்பிய
ஜாதீயத் தடைகள்.
 
ஆணிற்கெனில் பிறப்புரிமை
பெண்ணிற்கெனில் யாசிப்பென
பிரித்தாளும் பாலினத் தடைகள்.
 
வனங்களைச் சூறையாடி
அங்கு வாழ் பூர்வகுடி மக்களை
அடிமைகளாக்கும் தடைகள்.
 
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை
மாற்றி அமைப்போம் என்ற
போலி வாக்குறுதிகளை
நிறைவேற்ற இயலாத அரசியல் தடைகள்.
 
அணு உலை ஆதரவுப் பிரச்சாரங்கள்.
அன்னிய முதலீட்டு அரசியல்கள்
அனைவரும் எதிர்கொள்ளும் தடைகள்.
 
கனிம வளங்களை சூறையாடினாலும்
வளமான நீராதாரங்களை மாசுபடுத்தினாலும்
தாயென நம்மை அரவணைத்துப் பாதுகாக்கும்
பூமித்தாயிற்கு நம் முதல் முத்தத்தைக் கொடுத்து
தடைகளைத் தாண்டித் தொடர்ந்திடுவோம்
நம் தொடர் ஓட்டத்தை
 
நீண்ட இடைவெளிகளை நிரப்பி
போலியாகக் கட்டமைத்த உயரங்களை
உடனே தகர்த்தெறிந்து
உற்சாகத்துடன் ஓடுவோம் இந்த முறை
தோழமையுடன் கைகளை கோர்த்துக்கொண்டு.
 
- பிரேம பிரபா