பொதுவாக இத்தகு நெருக்கடியான காலகட்டங்களில் இடது முகாமைச் சேர்ந்த தோழர்களை பொது வெளியில் எப்போதும் விமர்சிப்பது கூடாது எனும் கொள்கையை வைத்திருக்கிறேன். நமது குழுச் சண்டைகள் புரட்சிக்கான அணிதிரட்டல்களில் மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கி விடுவதாக நான் நினைப்பதே அதற்கு காரணம். ஆனால் தவிர்க்க முடியாமல் சில நேரங்களில் அதை முற்றிலுமாக கடைபிடிக்க முடியாமல் போய்விடுவது வருத்தம்தான்.

தோழர் திருப்பூர் குணாவைப்பற்றி எனக்கு நேரடியான தொடர்பு என்பது குறைவுதான். அனேகமாக ஓரிருமுறை சந்தித்திருப்போம் அவ்வளவே. ஆனால் அவரின் எழுத்துக்களை தொடக்கத்திலிருந்து நான் வாசித்து வந்திருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தில் பின் நவீனத்துவ வாதிகளின் செயல்பாடு குறித்து அவரின் எழுத்துக்கள், அம்பேத்கரியம் தொடர்பான சமீபத்திய விமர்சனங்கள், தமிழ்தேசிய வாதிகள் தொடர்பான விமர்சனங்கள், நாடகக் காதல் தொடர்பான அவரின் நூல், அவரின் அவ்வப்போதைய முகநூல் பதிவுகள், கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் என கிடைப்பதை வாசித்து வந்திருக்கிறேன்.

அண்மைக்காலங்களில் இடதுசாரிகளின் ஒற்றுமை குறித்து அவர் நிறைய பேசி வருகிறார். அவற்றிற்குப் பணியாற்ற சி.பி.ஐ- சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கு அறைகூவல் விடுக்கிறார். கீழே உள்ள மேற்கோள்கள் யாவும் அவர் தனது கட்டுரைகள் மற்றும் முகநூல் பதிவுகளில் உதிர்த்தவை. பாருங்கள்...

" ம.ஜ.இ.க-வையும், ம.க.இ.க-வையும், சி.பி.எம்-ஐயும் கூட தோழர் Bhaskar Viswanathan Muthu -வும் கடுமையாக விமர்சிக்கிறார். இது என்ன அணிசேர்க்கை?"

"மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது அரசியல் நிலைமை. வலதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமை இப்போதே சிதரடிக்கப்படுகிறது. சின்னச்சின்ன குழுக்கள் பலவற்றையும் தனி ஆவர்த்தனம் செய்ய வைக்கும் முயற்சி அரங்கேறுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டிய இடதுசாரிகள் (சி.பி.ஐ, சி.பி.எம்) கட்சிகள் இன்னமும் உறக்கத்திலிருப்பதைப் போலவே உள்ளன"

"நமது இந்த எதிர்பார்ப்புக்கு சி.பி.ஐ, சி.பி. எம் தவிர யார் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக இருக்கமுடியும்?"

"பாசிசத்தை எதிர்பதில் சி.பி.ஐ, சி.பி.எம் எப்போதும் சோடை போனதில்லை."

ஒருவித மீளா காதலோடு நீண்டு தொடரும் அவரின் 'ஒற்றுமை' குறித்த கருத்துகள் எல்லை இல்லாதவாறு நீள்கின்றன.

ஏகாதிபத்திய உலகமயமாக்களும், இந்துத்துவ பாசிசமும் தேசத்தை கூறுபோடும் இந்தச் சூழலில், பின் நவீத்துவம் உள்ளிட்ட பல்வேறு எதிர்புரட்சிகர கருத்துக்கள் புரட்சிகர இயக்கங்களை நாடி பிடித்துப் பார்க்கின்ற இந்தச் சூழலில் கம்யூனிஸ்களிடையே ஒற்றுமை இன்றியமையாதது என்பதும், ஓர் ஐக்கிய முன்னணி அவசியம் என்பதும் உண்மையே. ஆனால் அத்தகு ஐக்கிய முன்னணி என்பது எல்லையற்றதல்ல.

சி.பி.ஐ-சி.பி.எம் ஆகியவற்றின் அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறை மக்களிடம் (குறைந்த பட்சம் அணிகளிடம்) எடுத்துச்சொல்லாமல் அவர்களின் எல்லைகளை வரையறுக்காமல் ஐக்கியம் என்பது சாத்தியம் என நினைக்கமுடியுமா? அவ்வாறே ஐக்கியப்பட்டாலும் அது ஆக்கபூர்வமானதாக இருக்குமா? உண்மையான, ஆக்கபூர்வமான ஐக்கிய முன்னணி என்பதின் அர்த்தம் என்ன?

"கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் ஸ்தாபன சுயேட்சைத் தன்மையை நலை நிறுத்திக் கொண்டே" ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களில் பங்கெடுக்கவேண்டும் என இந்தியாவைப்பற்றி கூறும்போது டிமிட்ரோவ் சொல்வார். அவ்வாறு இல்லாமல் ஒரு புரட்சிகர கட்சி தனது புரட்சிகர பாதையில் இருந்து அதாவது தனது அடிப்படை அரசியல் கோட்பாட்டில் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு இணைவது ஐக்கிய முன்னணி ஆகுமா? மாவோ சியாங்கே ஷேக்கிடமோ, ஸ்டாலின் இட்லர் பாசிசத்துக்கு எதிராக மற்ற நாடுகளிடமோ (தலைமை நம்மிடம் இல்லாவிட்டாலுங்கூட) ஐக்கிய முன்னணி ஏற்படுத்திக்கொண்டது என்பது புரட்சிகர நோக்கங்களில் இருந்து சமரசம் ஏற்படுத்திக்கொண்டா என்ன? அம்பலப் படுத்தல் இல்லாமல், பலம் பலகீனம் குறித்த சரியான வரையரை யில்லாமல் எந்த ஐக்கிய முன்னணியும் எப்போதும் சாத்தியமில்லை. சர்வதேச அளவில் "செக்டேரியனிஸ" மனோபாவம் பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணிக்கு பெரும் தடையானது உண்மைதான் என்றாலும் ஐக்கிய முன்னணி என்று வருகின்ற போது எழக்கூடிய வலதுசாரி சந்தர்ப்பவாதப் போக்கு குறித்து எச்சரிக்கும் டிமிட்ரோவின் கூற்றை நாம் இங்கே நினைவு கூறவேண்டியது அவசியம்.

இடது சாாிகளை ஒன்றிணைக்க வேண்டிய கடமை சி.பி. எம்முக்கும், சி.பி.ஐயிற்கும் உள்ளதென குணா சொல்வது எதை சுட்டுகிறது? உண்மையில் இந்திய வரலாற்றில் வளர்ந்து வந்த புரட்சிக்கான சூழல் நீர்த்துப்பாேனதற்கு இந்த இரண்டுகட்சிகளின் திரிபுவாத, சந்தர்ப்பவாத கண்ணோட்டங்கள் காரணமில்லை என அவரால் குறிப்பிட முடியுமா?

கப்பல் படை எழுச்சியை கைவிட்டது தொடங்கி பி.சி. ஜோசியின் கையாளாகாத்தனம், முன்நிபந்தனையின்றி தெலுங்கானா ஆயுத போராட்டத்தை கைவிட்டது, பாலக்காடு பேராயத்தின் அப்பட்டமான விலகல் போக்கு,டாங்கே கும்பலின் குருசேவ் அடிவருடி மனோபாவம், குல்சாரிலால் நந்தாவிடம் மனுநீட்டிய மார்க்ஸிஸ்டு சூரப்புலிகள், தேர்தலின் புதைகுழியில் ஊறிப்போன, போலிஸ்துறையை கையில் வைத்துக்கொண்டு நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வேட்டையாடிய ஜோதிபாசுக்கள் என இந்த இரண்டு போலிகம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோத வரலாறு கைகொட்டி சிரிக்கிறது.

1.இந்தியாவை முழு சுதந்திரம் படைத்த நாடாக ஏற்றுக் கொண்டது.(சி.பி.எம் மின் கல்கத்தா போராயத்தில் வைக்கப்பட்ட கட்சி திட்டத்தின் ஒரு தலைப்பு 'இந்திய நாடு தேசிய விடுதலையை அடைகிறது' என்பதாகும்)

2.ஒட்டுமொத்த இந்திய முதலாளிய வர்க்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக கொண்டது.

3.ஜனநாயகத்தையும், சோஷலிசத்தையும் அடைய தேர்தல் பாதையே தீர்வென தேங்கியது.(புரட்சிகரமான ஏட்டுச் சுரைக்காய் வாய்ச் சவடால்களை விட்டுத் தள்ளுங்கள் அவை அணிகளை நம்ப வைப்பதற்கான ஆயுதங்கள்.)

'பாசிசத்தை எதிர்ப்பதில் என்றைக்குமே சோடைபோகாத' இந்த சி.பி.எம்மின் மையக் குழுதான் மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவைச் சந்திக்க சங்கரைய்யாவை டெல்லிக்கு அனுப்பியது. அங்குபோன சங்கரைய்யா "நாங்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சி முழக்கத்தை மட்டுமே வைத்திருப்பதாகவும், தங்களுடைய கட்சி சட்டரீதியாகவும், வெளிப்படையாகவும்தான் செயல்படும் "என்றும் உறுதி மொழி அளித்தார். ஏறத்தாழ இதே கருத்தைத்தான் ஏ.கே. கோபாலன், பி.இராமமூர்த்தி சுர்ஜித் உள்ளிட்டோர் சிறையிலிருந்து சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்கள்.

மக்களின் மீதும் புரட்சியின் மீதும் நம்பிக்கை கொண்ட பலரும் குறிப்பிடுவது போல அப்பட்டமாக என்றைக்கோ இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தலைமைப் பாத்திரத்தில் இருந்து விலகிப்போய்விட்ட இரண்டு கட்சிகளையும் இப்போது தலைமை தாங்க குணா அழைப்பது வேடிக்கைதான்.

தோழர் திருப்பூர் குணா தொடர்ந்து பின் நவீனத்துவ வாதிகள் குறித்து குறிப்பிடத்தகுந்த விதத்தில் எழுதி வருவது வரவேற்கத் தகுந்தது என்றாலும் புரட்சிகர இயக்கங்ளின் சீர்குலைவாகட்டும், சாதியவாத கட்சிகளின் எழுச்சியாகட்டும் அத்தனைக்கும் இந்தப் பின்நவீனத்துவ வாதிகளேதான் காரணம் என அவர் திரும்பத் திரும்ப சாெல்வது (சிலர் சுட்டிக்காட்டியுங்கூட) யாரை திருப்திபடுத்த? ஏதோ பா.ம.க போன்ற சாதியவாத கும்பல்களுக்கு எதுவும் தெரியாது என்பது போலவும், இந்த பின்நவீனத்துவ கும்பல்கள்தான் அவர்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்ததாகவும் கூறுவதும், புரட்சிகர இயக்கங்களின் தொய்வுகளுக்கு அவற்றின் உள்ளார்ந்த பலகீனங்களை விடுத்து இந்த பின்நவீன கும்பலே முழு முதற்காரணம் என்பது போல கூறுவதும் எதைக் குறிக்கின்றன?

குழுக்களாகப் பிரிந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் இந்த பின்நவீனத்துவ வாதிகளை கோட்பாட்டு ரீதியில் நாம் சரியாக மதிப்பீடு செய்யும்போது அரை நூற்றாண்டுகட்கும் மேலாக புகழ்மிக்க தங்களது திரிபுவாத கருத்துக்களால் புரட்சிக்கான சூழலையெல்லாம் நீர்த்துப் போகச் செய்த இந்திய உழைக்கும் மக்களுக்கு பாரிய துரோகமிழைத்த இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்வது?. தீரிபுவாதம் என்பது பின்நவீனத்துவம் போல எதிர் புரட்சிகர கருத்தில்லையா என்ன? அது புரட்சிக்கான மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்காதா, அணிகளை மடைமாற்றாதா?

இத்தகு திரிபுவாதிகளைத்தான் குணா சொல்கிறார் "நாட்டில் சனநாயக வாய்ப்பை உருவாக்கவும், மக்களையும், சனநாயக சக்திகளையும் பாதுகாக்கவும், பாசிச சக்திகளை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிரான வீரியம் மிக்க போராட்டங்களை முன்னெடுக்கவும் சி.பி.ஐ- சிபிஎம் ஆகிய இடது சாரிகட்சிகளையும்.....
நமக்கு உள்ள ஒரே நல்வாய்ப்பு" என்று.

இவற்றை சுட்டிக்காட்டும்போது "மக்கள் தாயாராக இல்லை" என்றும், அதற்காக "சட்டபூர்வமான வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டுதான் பயணிக்க வேண்டி இருக்கிறது" என்று தரிபுவாதிகளின் புகழ் மிகுந்த வசனத்தை மறு ஔிபரப்பு செய்கிறார்.

தோழர் திருப்பூர் குணா அவர்களே நீங்கள் வழக்கமாக புரட்சிகர கட்சிகள் திரிபுவாதிகள் மீது வைக்கும் எங்களின் விமர்சனங்களை 'புதிய சூழல் என்றும், இந்துத்துவ பாசிச காலகட்டம் என்றும் செக்டேரியனிஸம் என்றும் எளிதாகக் கடந்து போய்விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவையாவற்றையும் செரித்துக் கொண்டு அமைகின்ற கூட்டணி என்பது ஆளும்வர்க்கத்தின் ஒரு ரோமக் கால்களைக்கூட அசைத்திடாது.

லெனின், பிளக்கானவ்வின் தொடக்கநிலை மென்ஸ்விக் ஆதரவு போக்கு குறித்து குறிப்பிடும்பாேது சொல்வார்: "சந்தர்ப்ப வாதத்தின்பால் சமரச மனப்பான்மையை காட்ட வேண்டுமென யார் கூறினானோ அவன் தானே அந்த சந்தர்ப்ப வாதத்தில் மூழ்கி விடுவது திண்ணம்".

தோழரே நீங்கள் என்னவேண்டுமானாலும் பேசுங்கள் 'இந்தியாவில் ஒரு கட்சி, ஒருதலைமை மூலம் புரட்சி சாத்தியமில்லை' என்றோ, 'முதலாளித்துவ சாதி' என்றோ என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அது உங்கள் சொந்தக் கருத்து மட்டுமல்ல அதை விவாதிக்க வேறொரு தளம் இருக்கிறது. ஆனால் ஐக்கியம் குறித்து பிற கட்சிகளுக்கு நீங்கள் அரைகூவல் விடுக்கின்ற போது, எழக்கூடிய எங்களின் கேள்விகளுக்கு பொதுவெளியில் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

'தோழர் பதிப்பகம் வைத்துவிட்டார். அவருக்கு அவரின் புத்தகங்கள் விற்பனையாக வேண்டும். அதனால் என்.சி.பி.எச் மற்றும் பாரதி புத்தகாலயங்களின் புத்தக விற்பனை மையங்களின் தயவு வேண்டும். அதுபோலவே அவற்றில் உள்ள வலுவான வாசகர் வட்டம் அவருக்கு அவசியம். அதனாலதான் இந்த சி.பி.ஐ_சி.பி.எம் மீதான பாசம். இதையெல்லாம் கண்டுக்காதிங்க.. ம.க.இ.க மீதான கரிசனத்துக்குக் கூட இதுதான் காரணம்.' என சாதாரனமாக வரும் விமர்சனங்களை த.மு.எ.ச உள்ளிட்ட அவர்களின் கரங்களில் உங்கள் வெளியீடுகள் விருது வாங்கும் போது நீங்கள் குதூகலிப்பதகைக் காணும்போது என்னால் முற்றாகப் புறந்தள்ள முடியவில்லை.

சி.பி.ஐ-சி.பி.எம் எனும் இரண்டு பெரிய கட்சிகளின் திசை விலகல் போக்கு குறித்து பிறயாவற்றையும் விட ஐக்கிய முன்னணிக்கு வருகின்ற ஒவ்வொரு இயக்கத்தின் உறுப்பினனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த இரண்டுகட்சிகளின் பகாசூர வெகுசன இயக்கங்களின் கவர்ச்சியில் ஒவ்வொருவரும் சற்று நிலை தடுமாற வாய்ப்புகள் உண்டு. நன்கு கற்றறிந்த தோழர் குணா நிலை தடுமாறுவது போல...

- பாவெல் இன்பன்

Pin It