manual_scavenging_400யாரும் எழுதாத கவிதையொன்று
இன்னும் அலறிக் கொண்டிருக்கிறது
சமூகத்தின் பேராதிக்கத்திற்குள்

பிழைப்புக்கு வழிதேடி வந்த கூட்டம்
உழைப்பிற்குள் சாதியைப் புகுத்தி
இழிதொழிலை குலத்தொழிலாக்கியது

அரசுப் பணியெனும் பெயரில்
கடைக்கோடி சமூகத்தினருக்கு
ஒதுக்கப்பட்ட பணி
“கையால் மலம் அள்ளும் பணி”

அதிகாலை தொடங்கி அந்திசாயும் வரை
பீய்வாரும் தகரத்தையும் போனியையும்
தூக்கிக்கொண்டு வீதி வீதியாய்
கழிக்கப்பட்டிருக்கும் பீய்க்குமியல்களை
கையால் வாரி அள்ளும் பணி…

மலக்கவுச்சியை சுவாசித்து சுவாசித்து
மெதுமெதுவாய் மரணித்துப் போகக்கூடும்
விலைமதிப்பற்ற உயிரும், தன்மானமும்…

வலிந்து பரவும் அரசு பணியமர்த்தும் கொள்கை
மலம் நிறைந்த கழிவறைக் கோப்பைகளிலும்
இரத்தம் தோய்ந்த சானிடரி நாப்கினிலும்
கரைந்தோடுகிறது
கடைக்கோடி மக்களின் வாழ்வியல்
கூடவே மனிதநேயம்
உங்களது சாதிக்கொழுப்பிலும்…
உங்களது கூதிக்கொழுப்பிலும்…

- வழக்கறிஞர் நீதிமலர்