பின் தூங்கி
முன் எழுந்து
வேலைக்கு சென்று
வீடு திரும்புவதற்குள்
காலையில் கருத்தரித்து
மாலைக்குள் பிரசவிக்கும்
மரண வேதனை.

சாலையில்....
விடலை முதல்
பல் விழுந்தது வரை
விடுகின்ற
காமன் அம்புகளால்
சேலை நிறையும்.

பேருந்தில்....
மிட்நைட் மசாலாவின்
மிச்ச அரிப்புகளை-என்
மேனியில் சொறியும்
சபல சம்சாரிகள்.

அலுவலகத்தில்....
கோப்பில்
கையெழுத்து வாங்க
குனிகையில்
கண்ணாடி துளைத்து
நெஞ்சில் குத்தும்
மேலாளரின் ஊசிப் பார்வை.

சாப்பாட்டு மேசையில்....
எதிரில் அமரும்
சக ஊழியனிடம்
மாத்ருபூதக் கேள்விகளை
கேட்கும்
என் சக ஊழியன்

வீட்டில்....
காலை கட்டும் குழந்தைகளை
உச்சிமுகர்ந்து விலக்கி
கை, கால் கழுவி
துவைத்து உலர்த்தி
சமைத்து அருந்தி
கழுவி அடுக்கி
அயர்ந்து சாய்ந்தால்
கழுத்தைச் சுற்றுகிறது

கணவனின்
முரட்டுக் கரம்.