வழி தெரியாமல் எனது அறைக்குள்
விழித்துக் கொண்டிருக்கும்
இருளில்-
கிளை நீட்டத் துவங்குகிறது
என் கனவுகளின் சாம்பல் மரம்.
எனக்குள் உறங்கும் கள்ளத்தனங்களை
பூக்களாய்க் கிள்ளி எறிகிறது...
வான வாசலில் அள்ளித் தெறிக்கப்பட்ட
நட்சத்திரங்கள்.
நிலவின் ஒளியில்...
நடனமாடும் மரங்களின் பிம்பம்...
உறங்கும் மனிதர்களின்...குறட்டை ஒலியிலும்
கத்திப் பிரியும் நாய்களின் ஒலியிலும்
இசை கோர்க்கிறது.
உந்தி எழும்பும் என் கனவின் வலிமைகளை
சிறை வைக்கத் தவிக்கிறது...
இருள் தின்று வளரும் வைகறை.
கனவுகள் நொறுங்கும் சப்தம்...
காலத்தின் முட்கரங்களில் வழிகிறது...
அழித்தெடுக்க இயலாத குருதியென.
என் தனிமை தீப்பிடித்து எரிய...
எனது அறைக்குள் விரிந்து சுருங்கும்
இருளின் மூலைகளில்....
அதிர்ந்து எழும்புகிறது...
என் மீட்சிக்கான பாடல்...
எனது புதிய கனவின் புதிய பூவாய்
தலை துருத்தியபடி.