இருப்பதிலேயே மிகப் பெரிய வன்முறை தாலி.
இப்படித்தான் இங்கிருந்துதான் இந்த விவாதத்தை ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. தாலி என்ற வஸ்துவில்தான் ஆரம்பம். பெண் என்பவள் ஓர் ஆணின் உடமை. ஆணின் நிழல்.. ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தூண்..... இன்னும் இருக்கும் எல்லா ஒதுக்கல்களையும்..... பின் தள்ளுதல்களையும்......பெண்கள் மீது திணித்து ஆணுக்கு கீழேயே வைத்து கொள்ள ஒரு காலத்தில் வாழ்ந்த ஆண் சமூகம் ஏற்படுத்தி வைத்திருந்த நுண்ணறிவின் திட்டம் இது. அது இன்று வரை மிக நுட்பமாக தொடர்கிறது.
நம்மை முந்திச் செல்லும் ஸ்கூட்டியை எப்போது சந்தோசமாகப் பார்த்திருக்கிறோம்... ஆண்களே...!
தமிழ்க் கலாச்சாரம் சீர்கெட்டுப் போகிறது... தமிழ்ப் பண்பாடு பேரழிவை சந்திக்கிறது... தமிழ்ச் சமூகம் சிதறி சின்னாபின்னமாகிறது. சட்டம் 497 ன் படி திருமண பந்தத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றம் இல்லை என்று இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து கேட்கும் பினாத்தல்களை சகிக்க முடியாதபோது இப்படி உரக்கக் கத்த வேண்டி இருக்கிறது.
இந்த சமூகம் இன்னும் தெளிவடையவில்லை. சமூகம் என்பது இன்னும் நான்கு பேராகவே இருக்கிறது. அந்த நான்கு பேரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அதைத்தான் பழக்கப்பட்ட பெண் சமூகமும் விரும்புகிறது. அடிமையாக இருப்பது ஒரு வகை சுகம். அதைத் தாண்டிய தொலைநோக்கு மிகவும் குறைவு. எதைச் சொன்னாலும் அதில் கற்பு வைத்து பூஜை செய்யவே விரும்புகிறது மழுங்கடிக்கப்பட்ட சமூகம்.
வீதி வீதிக்கு சாராயக் கடை இருப்பது உங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு கேடு விளைவிக்கவில்லை. சுருட்டு, சிகரெட்டு, பீடி, புகையிலை.. ஹான்ஸ்... கஞ்சா.....அது இது என்று எதுவும் உங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு கேடு விளைவிக்கவில்லை. இன்னமும் சாதி விட்டு சாதி கல்யாணம் செய்ய அனுமதிக்காத உங்கள் தமிழ்ப் பண்பாடு கேடுகளில் இல்லையா... காதலித்தால் விரட்டி விரட்டி வெட்டு.. பிறகு கையை ஆட்டிக் கொண்டே சிரித்த முகத்தோடு சிறை சென்று ஒரு மாதத்தில் திரும்பி வந்து மீண்டும் யார் காதலிக்கிறார்கள்... என்று வேவு பார்த்து திட்டம் போட்டு வெட்டு. மகளாக இருந்தால்... இன்னும் நான்கு வெட்டு சேர்த்து வெட்டு எனும்போது கலாச்சாரம் சீரழிவுக்குள்ளாவதேயில்லை. மணல் கொள்ளை செய்யும்போது தமிழ் மண் வாழ்கிறதா...? வீதியில் குழி தோண்டிப் போட்டவனை கேள்வி கேட்டிருக்கிறதா உங்கள் தமிழ்ப் பண்பாடு. எதிர்காலத்துக்கு.......தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்று சிந்தித்திருக்கிறதா உங்கள் கலாச்சாரம். நாட்டை குட்டிச் சுவராக்கும் மதவெறி அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிக்க யோசனை செய்திருக்கிறதா உங்கள் தமிழ்ப் பாரம்பரியம்...?
40 பேர் சேர்ந்து மனநிலை சரியில்லாத ஒரு புள்ளைய மாத்தி மாத்தி வன்புணர்வு செய்தபோது கெட்டு விடாத தமிழ்ச் சமூகம் இந்தத் தீர்ப்பில் கெட்டு விடப் போகிறதா...? ரயிலில் வைத்து வன்புணர்வு....... கோவிலில் வைத்து வன்புணர்வு........பேருந்தில் வைத்து வன்புணர்வு......சர்ச்சில் வைத்து வன்புணர்வு....... கொஞ்சம் காடு கிடைத்தால் போதும்... கொஞ்சம் இருட்டு கிடைத்தால் போதும்.... பேண்ட்டை அவிழ்த்து விட வேண்டியது...குடிச்சு கும்மாளம் போட்டு.......கிடைக்கற பொண்ணு.......அது கிழவியா இருந்தாலும் பாய வேண்டியது. அப்போதெல்லாம் கெடாத உங்கள் சமூகக் கட்டமைப்பு இந்தத் தீர்ப்பில் கெட்டு விட்டதா...?
கண்களுக்குள் குப்பையை வைத்துக் கொண்டு காட்சி மங்கலாகத் தெரிகிறது என்று சொன்னால் கேட்பவன் கேனையனா...?
தீர்ப்பு என்ன சொல்கிறது... அதைக் கூட கள்ளக்காதல் என்று கொச்சையாக சொல்லும் மனிதக் களையோடு வாழ்வதுதான் தமிழ்க் கலாச்சார சீர்கேடு. ஒரு பெண் தனக்குப் பிடித்தவரை காதலிக்கலாம்....உறவு கொள்ளலாம். அது அவளின் தனி மனித ஒழுக்கம் சார்ந்த ஒன்று. அதை யாரும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது. மற்றபடி உங்கள் மனதின் சட்டப்படி அவளை கேள்வி கேட்கலாம். "நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன்டா அங்க போறேன்னு" அவ திருப்பிக் கேட்டா என்ன சொல்றது...? வெரி சிம்பிள்.. பிடிக்காத கணவனோடு (ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு 99 காரணம் இருக்கிறது) காலம் முழுக்க வாழ்வது அத்தனை சுலபம் இல்லை. உங்கள் பண்பாடு கலாச்சாரம்....எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மானுடவாசியாக.....ஒரு பரிணாமம் பெற்ற உலகின் மூலம் வலம் ஒரு ஆன்மாவின் அவதானிப்பை உணர வேண்டிய இடம் இது.
தாலி கட்டிக் கொண்டால் மட்டும் காதல் வருவதில்லை. (காதல் இல்லாமல் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது.) அது நேர்த்தியான கோடுகளால் வரையப்படும் கிறுக்கல் சார்ந்த வெளி. அங்கேதான் அகவெளி நிம்மதி அடைகிறது. "பொண்ணுக்கு என்ன தெரியும்.... மாப்பிள்ளை கவர்ன்மென்ட்ல வேலை பண்றாரு.... பத்......தா......து.....!" என்று ஆச்சரியப்பட்டு கட்டி வைத்தால் இப்படித்தான். அதையெல்லாம் தாண்டி உடலும் மனமும்.. எப்போது வேண்டுமானாலும் கட்டுடைக்கும். அதுதான்.. மானுட யதார்த்தம். நியாயமான கேள்விகளால் பதில் தேடலாமே தவிர குற்றம் சுமத்தி கூட்டில் அடைக்க முடியாது. அடைபட்டு மூச்சுத்திணறி சாகவா இவ்வாழ்வு. உணர்வுப் பூர்வமாகவும் அணுக வேண்டிய தீர்ப்பு... இது.
எல்லாரும் எல்லார் கூடவும் உறவு கொண்டது ஒரு காலம். ஒப்புக் கொள்கிறேன். மனித குலம் வேட்டை சமூகத்திலிருந்து வெளி வந்து குழுக்களாக பிரிகையில்... தனியுடமை... சொத்துரிமை...வாரிசுரிமை.....என இன்னபிற உரிமைகளின் வசம் அவர்களின் கட்டமைப்பு காலத்தின் தகவமைப்பில் விரிவுபடுத்தப்படுகிறது. தான்.....தனக்குப் பின் தன் வாரிசு என்று வாழ்வின் நீட்சி பிடிபடத் துவங்குகிறது. அதன் பொருட்டும் உருவாக்கப்பட்டது அல்லது உருவானது தான் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு. அதன் பிற்பாடு அதில் தங்க முலாம் பூசிக் கொண்டது.....விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதை. ஆனால் இங்கு நடப்பது என்ன...? "என் பொண்டாட்டி நீ.. எப்போ கூப்ட்டாலும் வந்து படுக்கணும்...." (வேறு வேறு விதங்களில் வெளிப்படும்... இவ்வாக்கியம் ) என்ற உச்சபட்ச ஆணாதிக்க கலாச்சாரம் கொண்ட கணவனிடம் என்ன சொல்லி விவாதிப்பாள் பெண். பொருளாதாரம் சார்ந்து பிள்ளைகள் சார்ந்து வாழும் பெண்ணுக்கு படுப்பதும் ஒரு வேலை. அவ்வளவே. மனைவியாக இருந்தாலும் அவளுக்குப் பிடிக்காதபோது......அவளுக்கு விருப்பம் இல்லாதபோது... அவளின் உடல் ஒத்துழைக்காதபோது அவளோடு உறவு கொள்ளுதல் அயோக்கியத்தனம். அது ஒரு குற்றம் என்றுகிறது மானுட விதி. அதை எத்தனை கணவன்கள் கடைபிடிக்கிறார்கள்..?
உறவு முடிந்த பிறகும் எத்தனை கணவன்கள் மனைவிகளுக்கு முத்தம் தருகிறார்கள். முதலில் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் முத்தங்கள் என்னவாகின்றன..? என்ற மிகப் பெரிய கேள்வி இருக்கிறது. .
ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் ஈர வெங்காய வசனம் பேச நான் வரவில்லை. ஆண் வேறு, பெண் வேறு. இரு வேறு துருவங்கள் ஒன்றாக இணைகையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுகிறது. அவ்ளோதான். இன்னொன்று ஒரு மனிதன் பிறப்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவெல்லாம் இல்லை. முன்னதும் பின்னதும் ஒரு சங்கிலித் தொடர். அதுவும் அவ்ளோதான். மனிதனாகப் பிறந்தது முக்தி அடையவெல்லாம் இல்லை. கிடைத்த வாழ்க்கையை இருக்கும்வரை சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்து விடுவது மட்டும் தான் பொருள். மனதாலும், உடலாலும் யாரையும் துன்புறுத்தா.... துன்புறுத்த அனுமதியா.......ஒரு வாழ்வு உண்டெனில்... அங்கே உங்கள் சட்டமும் சட்ட திருத்தமும்... சற்று தள்ளி நின்று தான் வேடிக்கை காட்டும்.
காருக்கும் வீட்டுக்கும் இஎம்ஐ கட்டியே சாகிறவர்கள் இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாதவர்கள்.
கடந்த மாதம் வந்த ஓரின சேர்க்கை தீர்ப்பு குறித்தும் இப்படித்தான் கிண்டலும் கேலியும் அவர்களின் அறியாமையை வெளிக்காட்டின. ஒரு காலத்தில் உண்பதும் உறவு கொள்வதும் தான் வேலையே. அதில் இருந்துதான் இன்றைய சமூகம் முளைத்திருக்கிறது. ஆக, உறவு கொள்வது பெரிய புனிதப்படும் செயலும் அல்ல. உறவு இவரோடு மட்டும் தான் கொள்ள வேண்டும் என்பது புனிதத்தின் உச்சியில் செர்ரி பழம் வைப்பதும் அல்ல. ஆணும் பெண்ணும் மட்டும் தான் உறவு கொள்ள வேண்டும் என்பது ஒரு வசதிக்குத்தானே தவிர, அதுதான் புனிதமான செயல் என்றெல்லாம் இல்லை. அப்படி இருந்தால் அது ஏமாற்று வேலை. யார் யார் கூட வேண்டுமானாலும்.. அவர்களுக்கு பிடிக்கும் நிலையில்.. அவர்கள் இருவரும் சுய புத்தியோடு இருக்கும் நிலையில்........அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்... உறவு கொள்ளலாம். ஆழ் மனதுக்குள் அத்தனை வக்கிரங்களை வைத்துக் கொண்டு வெளியே ஒழுக்க சீலனாய் வலம் வருபவர்களிடமும்......உறவு கொள்வதை உடல் ரீதியாக மட்டுமே பார்ப்பவர்களிடமும் இருக்கும் பிரச்னை தான்.... என்ன ஏதென்று தெரியாமலே மூர்க்கமாக எதிர்ப்பது. ஓரினச் சேர்க்கையாளர்கள்... உடல் ரீதியைத் தாண்டி மன ரீதியாகவும் நெருங்குகிறார்கள். (இங்கு இருப்பது போலவே எல்லா வஞ்சக மனிதர்கள் அங்கும் உண்டு) காதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே மட்டுமே வர வேண்டிய சாத்தியக் கூறு ஒன்றுமில்லை. ஒரு ஆணும் இன்னொரு ஆணும்.....அல்லது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் ஒன்றாக வாழ்வது... அவர்களின் உடல் சார்ந்த, மனம் சார்ந்த வாழும் உரிமை. அவர்கள் உடல் ரீதியாக தங்களை மாற்றாக நினைக்கவும் வழி இருக்கிறது. ஒவ்வொரு உடலும் வேறு உடல் என்பதை இங்கே நினைவில் நிறுத்துக.
மேலோட்டமாகப் பார்த்தால் இக்கட்டுரையில் என்னை திட்டத் தோன்றும். மனோதத்துவமாகப் பார்த்தால்.......எல்லாருமே அம்மணக்குண்டிகள்தான்.
ஒழுக்கம் என்பது ஊருக்கு ஊர் வேறுபடும். நீங்கள் எந்த ஊர் என்பது தான் இங்கே பிரச்சனை. சிம்பிள் மேட்டர்.. யாருக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களுக்கு அவர்களையும் பிடித்திருந்தால் அது தான் முழுமையான வாழ்வு.
வாழ்க்கை வாழ்வதற்கே...
இக்கட்டுரையில் இருந்து நிறைய கேள்விகள் முளைக்கும். எல்லாவற்றுக்குமே நானே பதில் சொல்ல இயலாது. நீங்களும் தேடுங்கள்...!
- கவிஜி