பழங்குடி மக்களின் வாழ்வா தாரம்
அழித்தே தன்னுடை நெருக்கடி தவிர்க்கும்
பெருமுத லாளியின் சந்தை விதியே
வெருவந்த செய்யுது உழைக்கும் பிறரையும்
சீராய் உழைக்கும் அனைத்துப் பிரிவும்
தீர்வு காண்பது சமதர்மந் தனிலே
நேரிது தெரிந்தும் உழைக்கும் மக்கள்
ஒன்றாய் இணைந்துப் பொருதா திருப்பது
ஆந்தை யாரும் கோப்பெருஞ் சோழனும்
மாளும் போது சேர்ந்தது போல
வாழும் புவியும் வெப்பந் தனிலே
அழியும் நிலையில் சேரத் தானோ
(பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், சந்தை விதிகள் தான், மற்ற உழைக்கும் மக்களின் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளன. சீராக உழைத்துக் கொண்டு இருக்கும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் (இத்துன்பங்களில் இருந்து) விடுதலை கிடைப்பது சோஷலிச சமூகத்தில் தான். (இதை) நன்றாகத் தெரிந்து இருந்தும் (அனைத்து) உழைக்கும் மக்களும் (சோஷலிச அரசை அமைக்க) ஏன் ஒன்றாய் இணைந்து போராடுவது இல்லை? பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ் சோழன் என்ற அரசனும் (ஒரே எண்ணம் கொண்டு இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருந்து இறுதியில்) மரணத்தின் போது ஒன்றாய்ச் சேர்ந்தது போல, (நாம்) வாழும் பூமியில், வெப்ப உயர்வால் (அனைத்து) உயிரினங்களும் அழியும் போது சேர்ந்து கொள்ளலாம் என்பதற்காவா?)
- இராமியா