கைதவறி விழுந்த கைபேசி
கொஞ்சம் கொஞ்சமாய்..
தன் வண்ணங்களை
இழந்து கொண்டிருந்தது..!
ஒளிமிக்க அதன் திரையில்
மெல்ல மெல்ல
பிரியமானவர்களின் பெயர்களும்
செய்திகளும் தொலைந்து போயின.!
குரல்களின் வழியாக மட்டுமே
அறிய முடிகிறது
அன்பானவர்களின் விசாரிப்பை..!
பழுது பார்ப்பவனின் நுட்பத்தால்
சரிசெய்யப்பட்டு
இப்போது இயல்பு நிலைக்கு
திரும்பி விட்டது..!
இதற்கு முன்
ஒரு போதும் உணர்ந்ததே இல்லை
பார்வையற்ற ஒருவனின்
வண்ணங்களற்ற வாழ்க்கையும்
சரி செய்யப்பட வாய்ப்பின்றி
தொடரும் அவனின்
மிக நீண்ட துயரையும்..!