என் வருகை நின்று போனதில்
நம் பால்யதினங்களைத் தின்ற
கம்பராயப் பெருமாள் கோவில் திடல்
சிவகாமியம்மன் கோவில் தெப்பம்
அகோர பசியில் குழுமியழுது
இரத்தம் கக்கிச் செத்துபோயின.
என் குல்லா கைலியை நீ உடுத்தி
மசூதியில் ரமலான் நோம்புக்கஞ்சி
பருக நின்ற வரிசையில் எழுந்த
"அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்குமெனும்"
பதில் கிடைத்திராத உன் வினாவையே
என் மேடைகள் கொட்டித் தீர்த்தன.
உன் வீட்டுக் கொலு பொம்மைக்கு
வெள்ளை நிறம் அடித்த
உன் தங்கையின் தூரிகையைத்
தட்டிப் பறித்து
அவன் நீலக்கண்ணனெச் சொல்லி
பேனா மையில் கண்ணனோடு
நாமும் ஈரப்பட்ட நேற்றைய தினங்களின்
தூரிகையை எரிக்கும் குண்டுகளின்
வெப்பம் தணிவதாயில்லை.
- சோமா