பார்ப்பனிய சங்கி கும்பலால் பல நூறு ஆண்டுகளாக ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு இந்த இருண்ட காலத்தில் உச்சநிலையை அடைந்திருக்கின்றது.

எல்லோருக்கும் சமமான சட்டம், நீதி என்ற போலி பிம்பங்களின் மீது கட்டமைக்கப்பட்ட போலி ஜனநாயகம் முச்சந்தியில் அம்மணமாய் நின்றுகொண்டு சிரித்துக் கொண்டுள்ளது.

ராமராஜ்ஜியம் அதன் குரூர வடிவத்தில் புல்டோசராக மாறி தலித்துகளையும் சிறுபான்மையின மக்களையும் மூன்று பக்கமும் கடல்சூழ்ந்த இந்திய தீபகற்பத்தின் விளிம்பை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை - ஒன்று அவர்கள் புல்டோசரை அடித்து நொறுக்கியாக வேண்டும், இல்லை என்றால் கடலில் இறங்கி தங்களை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

மசூதியை இடித்து, இஸ்லாமிய இடுகாடுகளை இடித்து அவர்களின் பிணங்களைத் தோண்டி எடுத்து, அவர்களின் வீடுகளை தீக்கிரையாக்கி, அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றியும், டயர்களை கொளுத்திப் போட்டும், துண்டு துண்டாக வெட்டியும், கரு அறுத்தும் கொன்ற கொலைவெறி பிடித்த மனநோயாளிகள் இன்று அவர்களின் வீடுகளை இடித்து தங்களின் அரசியல் அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

demolition of muslim houseநபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா மற்றும் அதன் டெல்லி செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் பேசிய வெறுப்புப் பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு உபியை ஆளும் காவி ரவுடி அரசால் தகர்க்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கான இடம் இந்தியாவில் எது என்பதை அவர்கள் தெளிவாக உலக நாடுகளுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டின் பிரதமர் எவன் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்று அருவருக்கத்தக்க மெளனத்தால் நடக்கும் கேடுகெட்ட பயங்கரவாத செயலுக்கு மறைமுகமான ஆதரவைத் தந்து கொண்டு இருக்கின்றார்.

உச்சநீதி மன்றத்திற்கு மனுபோட்டு அதன் செவிட்டு காதுகளுக்கும், குருட்டுக் கண்களுக்கும், ஊமை வாய்களுக்கும் தெரியப்படுத்தி மன்றாட வேண்டி இருக்கின்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவின் பேச்சைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை தாக்கியதில் பலர் படுகாயமடைந்தனர், பலர் கைது செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

அப்போதும் ஆத்திரம் அடங்காத சங்கி அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறையைக் கொண்டே எச்சரிக்கை விடுத்தது.

அது வெறும் எச்சரிக்கை அல்ல, காவி சங்கிகளின் மனஅரிப்பு என்பதை அவர்கள் உடனே நிரூபிக்க ஆரம்பித்தார்கள்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தைப் பகிர்ந்ததோடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்தநாள் சனிக்கிழமை வரும் என மறைமுகமாக இஸ்லாமியர்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தினான்.

சொன்னது போலவே முஜம்மில், அப்துல் வகீர் மற்றும் ஜாவேத் அகமது என்ற இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரைக் கொண்டு இடிக்கப்பட்டன.

அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் மனநோயாளிகளின் அரசு இடித்து தள்ளியது.

அத்துடன் வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று கூறி ஆஃப்ரின் பாத்திமா, அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோரையும் உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்திருக்கின்றது. இதற்கு எதிராக நாடு முழுவதும் #StandWithAfreenFathima என்ற ஹேஷ்டேக் ஆஃப்ரின் பாத்திமாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது.

இந்தியாவில் உபி ராமராஜ்ஜியத்தின் சோதனைக் களமாக இருக்கின்றது. அதனாலேயே அது இந்தியாவின் சீரழிந்த மாநிலமாக, உலக நாடுகள் அனைத்தும் காறித் துப்பும் மாநிலமாக இருக்கின்றது.

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகம் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசமே முதலிடத்தில் உள்ளது.

'போலீஸ் என்கவுன்ட்டர்' என்ற பெயரில் அரச வன்முறைகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு எதிராகத் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன.

முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு 2017 முதல் 2020 வரையில் 124 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதாவது, 6,476 மோதல்களில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் ஆண்கள், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் பாசிச சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகக் கைதானவர்களில் பெரும்பாலோனார் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்தியாவில் தேசிய பாதுகாப்புச் சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படும் மாநிலங்களில் உ.பியும் ஒன்று. உ.பியில் இந்த சட்டம் முஸ்லிம்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது சட்ட விரோத முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 76 பேர் பசு வதைக்காக கைது செய்யப்பட்டனர். 13 பேர் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடியதற்காக கைது செய்யப்பட்டனர். 37 பேர் கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனோ பேரிடரை மிக மோசமாகக் கையாண்டு ஆயிரக்கணக்கானோர் சாவுக்குக் காரணமாக இருந்தது உபியின் சங்கி அரசு, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது எனக் கூறியவர்கள் மீதெல்லாம் நடவடிக்கைகள் எடுத்தது. நூற்றுக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதந்து சென்று யோகியின் ராமராஜ்ஜிய யோக்கியதையை அம்பலப்படுத்தியது.

2017-க்கான மனிதவள வளர்ச்சி அட்டவணையில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசமும், பிஹாரும் மிக மோசமான செயல்பாட்டுக்காக இறுதியில் இடம்பெற்றன. கடந்த 27 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் தனது மனிதவளக் குறியீட்டு அட்டவணையை மேம்படுத்தவே இல்லை என்பதை ‘ஸ்டேட் வங்கி’யின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

புள்ளியியல் - திட்ட அட்டவணைத் துறை, கல்வி பற்றிய அறிக்கை தயாரிப்பில் ‘குடும்பங்களின் சமூக நுகர்வு’ என்ற தலைப்பிலும், நிதி ஆயோக் அமைப்பு ‘பள்ளிக் கல்வித்தர அட்டவணை’ என்ற தலைப்பிலும், பெண் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம் கேரளம் என்றும், மிக மோசமாகச் செயல்பட்ட மாநிலம் உத்தர பிரதேசம் என்றும் ஆய்வு செய்து தெரிவித்துள்ளன..

சட்டம் ஒழுங்கின்மை, கொள்ளை, வகுப்புவாதம், சாதிக் கொலைகள், பாலியல் சார்ந்த கொடூரச் சம்பவங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களை பண்ணையார்கள் அடிமைப்படுத்திச் சுரண்டுவது என்று அனைத்துமே இந்த மாநிலத்தில் தொடர்கின்றன. அதன் ஏழைகளில் ஒரு பகுதியினர் இடம்பெயரும் தொழிலாளர்களாக மாநிலத்தின் நகர்ப் பகுதிகளுக்கோ, பிற மாநிலங்களுக்கோ வேலை தேடிச் செல்கின்றனர்.

தேசிய குற்றச் செயல் பதிவேட்டு முகமை கடந்த ஆண்டு வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் பதிவான மொத்த குற்றச் செயல்களில் 10% - சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் - உத்தரப் பிரதேசத்தில்தான் பதிவாகியிருக்கின்றன.. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உபியில் நடந்தவை மட்டும் 56,011. எல்லா மாநிலங்களிலும் சேர்த்து 3,59,849 ஆகும்.

துப்பாக்கி உரிமங்களிலும், துப்பாக்கிகளை வைத்திருப்பதிலும் உத்தரப் பிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் பதிவின்படி 2016-ல் உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் 12.77 லட்சம் பேர். ஜம்மு-காஷ்மீரில் 3.69 லட்சம்.

இவையெல்லாம் அதிகாரப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே. 2015-ல் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக நாடு முழுவதும் பதிவான வழக்குகள் 3 லட்சம்; உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1.5 லட்சம்.

இந்தத் தரவுகள் எல்லாம் உபியின் இன்றைய நிலையைப் புரிந்துகொள்ள ஓரளவு உதவலாம். ஆனால் நாம் புரிந்து கொள்ள முயல்வதற்கு அப்பால் உபியியை ஒரு கொடூர மண்ணாக யோகி அரசு மாற்றி வைத்திருக்கின்றது.

ஒரு மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நடத்திக் காட்டும் முனைப்போடு பாசிச மனநோயாளி யோகியின் அரசு செயல்பட்டு வருகின்றது.

உபியில் இன்று நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் குரல் கொடுக்கத் தவறினால் இந்தியாவே உபியாக ஒரு நாள் மாற்றப்படும்.

ஒரு சோதனைச் சாலையில் தயாரிக்கப்படும் விஷக்கிருமிக்கு ஒப்பாக இன்று உபியில் இஸ்லாமிய வெறுப்பு என்னும் நச்சுக்கிருமி சோதனை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

முற்போக்கு ஜனநாயாக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நாடு முழுவதும் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இந்தியா எவன் விட்டு அப்பன் சொத்தும் அல்ல என்பதையும், இது அனைத்து மக்களுக்குமான நாடு என்பதையும் நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

- செ.கார்கி

Pin It