ஆதியில் தோன்றிய அச்சத்தி னாலே
மேதினி கண்ட கடவுள் தத்துவம்
எண்ணமே முதலென வளர்ந்த நிலையும்
திண்மை யெனினும் இயங்கா நின்றலும்
மாந்தனின் சிந்தையை மயக்கிய நிலையில்
ஈந்தனர் இயக்கப் பொருள்முதல் வாத
மெய்யியல் தன்னை மார்க்சும் நண்பரும்
பொய்யா வினைஞர் தத்துவம் அதுவே
புவிவெப்பத் தாலும் சந்தை யினாலும்
அவியும் உலகைக் காத்திட முனைவோர்
இயக்கப் பொருள்முதல் வாதம் தன்னை
தயக்கமின்றி ஏற்பதே ஒரேவழி யாகும்
(ஆதியில் இயற்கை உற்பாதங்களைக் கண்ட மனிதனின் உள்ளத்தில் தோன்றிய அச்சத்தினால் இவ்வுலகில் கடவுள் தத்துவம் உருவானது. இது கருத்து முதல் வாதமாக வளர்ந்தும், இயக்க மறுப்பியல் பொருள் முதல் வாதமாக எதிர் நிலையில் நின்றும் மனிதனின் சிந்தையை மயக்கிக் கொண்டு இருந்த காலத்தில், இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனும் தத்துவத்தை கார்ல் மார்க்சும் அவருடைய நண்பர் பிரடெரிக் எங்கெல்சும் வழங்கினர். இது தான் இவ்வுலகைத் தங்கள் உழைப்பினால் வாழ வைத்துக் கொண்டு இருக்கும் தொழிலாளர்களின் தத்துவம் ஆகும். புவி வெப்பத்தாலும் சந்தைப் பொருளாதார நெருக்கடியினாலும் அழிந்து கொண்டு இருக்கும் பூமியைக் காப்பதற்கு இந்த இயக்கவியல் பொருள் முதல் வாதத் தத்துவத்தை ஏற்பதே ஒரே வழியாகும்.)
- இராமியா