காலனிய பாரம்பரியத்தில் இருந்து விலகுகிறோம் என்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஜூலை ஒன்றாம் தேதிமுதல் அமலுக்கு வந்திருக்கிற இந்த புதிய சட்டங்கள் தேசியப் பிம்பத்தை வலுப்படுத்தி மாநில உரிமைகளையும், கருத்துரிமைகளையும் பறித்துக் கொள்ளும்படியாகவே இருக்கிறது. புதிய சட்டங்களுக்கு வைக்கப்பட்டிருக்கிற பெயரில் இருந்தே அதை உணர முடிகிறது. 1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பாரதிய நியாய சன்ஹிதா (BNS) என்றும், 1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பாரதிய நாகரிக் சுரக்சா சன்கிதா (BNSS) என்றும், 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதிய சாக்சிய அதினியம் (BSA) என்றும் மாற்றப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் அதை உதறித் தள்ளிவிட்டு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல் 3-இல் இடம் பெற்றுள்ளன. சட்டங்களை மாற்றுவதற்கு முன்பாக, மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும்போதே எந்த விவாதமும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை கூண்டோடு இடைநீக்கம் செய்த வேளையில் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசு. மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை.
‘Sedition’ எனப்படும் தேசத் துரோகம் இந்தச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதற்கு மாற்றாக, ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிப்பது’ குற்றம் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. பழைய தேசத் துரோக சட்டத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதற்கு முன்பு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம் என்ற அளவுக்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. கருத்துரிமையை பறிப்பதற்கான, சமூக - அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கான புதிய ஏற்பாடாகத்தான் இப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
முன்பு பயங்கரவாதச் சட்டப் பிரிவுகளின் கீழ் இருந்த கடுமையான பிரிவுகள், இப்போது குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை, UAPA பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்தான் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். இனி புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டாலே, குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். சாதாரண போராட்டங்களைக்கூட, அரசுக்கு எதிரான செயல்பாடாகக் காட்டி ஒருவரைக் கைது செய்ய முடியும். அப்படி கைது செய்யப்பட்டவர் நிரபராதி என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும் என்று மிக மோசமான ஏற்பாடுகளை புதிய சட்டத்தில் செய்து வைத்திருக்கிறது பாஜக அரசு.
காலனிய பாரம்பரியத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் முதலில் ஆளுநர் பதவியைத்தான் ஒழித்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் பதவியை வைத்துக்கொண்டே காலனிய பாரம்பரியத்தை ஒழித்துவிட்டோம் என்று பாஜக தலைவர்கள் பேசுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் காலனிய ஆட்சியில் இயற்றப்பட்டதே அல்ல. 1973-இல் தான் இயற்றப்பட்டது. இப்போது அதனை மொத்தமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது பிரிவு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட எந்த ஒரு சட்டமும் அடிப்படை உரிமைகளை மீறினால் தவிர, தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்கிறது. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் வருணாசிரம தர்மத்தின்படி மனுசாஸ்திரத்தை வைக்க வேண்டுமென்பதுதான் பாஜகவின் மாபெரும் கனவு. அந்த கனவுக்கான முயற்சியாகத்தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோல மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறைக்கு, ஏகபோக அதிகாரங்களை வழங்கியிருக்கிறது புதிய சட்டங்கள். காவல்துறை ஒருவரைக் கைது செய்யும்போது, விசாரணைக்கு முன்பே சொத்துகளை முடக்கவும் முடியும். முன்பு ஒருவர் கைது செய்யப்பட்டால், 15 நாட்களுக்குள் காவல் துறையினர் நீதிமன்றத்தை அணுகி போலீஸ் காவல் கேட்க வேண்டும். ஆனால், தற்போது இந்த கால இடைவெளி 60 நாட்களாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த 60 நாட்களில் பிணை கிடைப்பது கடினமாகலாம். ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய, காவல்துறை 14 நாட்களை எடுத்துக்கொள்ள BNSS வாய்ப்பு வழங்குகிறது. ஆகவே, 14 நாட்கள் வரை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் இருக்க முடியும். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவரின் வழக்கில், ஒரு குற்றம் நடந்ததாக புகார் வந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய, காவல்துறை 14 நாட்களை எடுத்துக்கொள்ள BNSS வாய்ப்பு வழங்குகிறது. ஆகவே, 14 நாட்கள் வரை முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்யாமல் இருக்க முடியும்.
தலைமைக் காவலர் மட்டத்திலான காவலர் ஒருவரே, பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவரைக் கைது செய்ய முடியும். “குற்றம் சாட்டப்பட்டவருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விவாதிப்பது, ஒரு தேநீர் அருந்துவது கூட இனி குற்றம்தான்”. இத்தகைய கொடூர சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம். பெரும்பான்மை பலத்தோடு பாஜக ஆட்சியில் இருந்தபோதே மூன்று திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை விவசாயிகள் நிறுத்தச் செய்த வரலாறு இருக்கிறது. இப்போது பெரும்பான்மை பலம் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு ஆட்சி புரிகிறது பாஜக. ஆகவே பலமற்ற பாஜகவை பணிய வைப்பது சாத்தியமே!
- விடுதலை இராசேந்திரன்