தலைக்குமேல் இருண்ட கார்மேகங்கள்
படை திரள்வதையறிந்து
இதயங்கள் நடுங்குவதை மறைத்துக் கொண்டு
எம்மை எச்சரிக்கின்றனர்
பண்பாட்டு தொங்கட்டாண்களை அணிவித்து
அழகு பார்ப்பதற்கென எம் தகுதியை
அவர்கள்தான் வரையறுத்தவர்கள்
அடுப்படிப் பண்டமாக வீட்டு உபகரணங்களில் ஒன்றாக
எம்மை ஏற்றுப் பழகியவர்கள்
அதிகாரங்களை எழுதும் கரங்கள் தமதென்றும்
அரியாசணைகள் தமக்கு மட்டுமேயென்றும்
தாமே ஆளப்பிறந்த வல்லவர்களென்றும்
தங்களுக்குத் தாங்களே பட்டம்சூடியவர்கள்
மாற்றங்களைத் தரம் பிரிக்கும்
அவர்களின் ஆருடங்களால்
நம்மை நடுங்கச் செய்யலாம் என நம்புகிறார்கள்
கல்லாக வாழ எம்மை விதித்தவர்களும் அவர்களே
செதுக்கவரும் சிற்பிகளின் கைகளை
வெட்டியெறிவதாக எச்சரிக்கின்றனர்
அரசியல் வில்லங்கமென்றும்
இளைத்தவர்களால் வலுத்தவர்களை
வெல்லமுடியாதென்றும் சபதமிட்டெம்மோடு
எதிர் வாதம் புரிகின்றனர்
எதிர்ப்புகள் நாம் எதிர்பார்த்ததுதான்
மாலை அணிவித்தெம்மை
அரங்கேற்ற இவர்களுக்கேது தைரியம்?
வில்லங்கங்களை வெல்லும் சூட்சுமங்களை
உங்களைப் போலவே நாங்களும் அறிய நாளாகாது
கைவிடுவதாயில்லை,
கிளைகளை வெட்டி செப்பனிட்டு
புதியதோர் விருட்சம் வளர்க்கும்
இம்மகத்தான பணியை…