The Dreams of a Mappila Girl - a memoir.
Zuhara B.M.(2022)
Sage publications, India pvt Ltd, New Delhi 110 044

இஸ்லாமியப் பெண் பிள்ளைகள் கனவு காண்பதற்குக்கூட உரிமை இல்லாத காலத்தில் நான் வளர்ந்தேன். (சுகாரா)

சற்று இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சமூகமான மாப்பிள்ளா இஸ்லாமிய சமூகத்தில் பெண்ணாகப் பிறந்ததால் இந்நூலாசிரியரால் தமது குழந்தைப் பருவம், வளர் இளமைப் பருவம் சார்ந்த கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனது. அப்படி அவர் கண்ட கனவுகள்தான் என்ன?

அக்கனவுகள் ஒன்றும் எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத கனவுகள் அல்ல. மிகவும் எளிமையான கனவுகள் தாம்.” புதிதாகத் திறக்கப்பட்ட திரை அரங்கில் சென்று திரைப்படம் பார்ப்பது, தன் உடன் பிறந்த சகோதரர்களுடன் நெல் வயல்களில் விளையாடுவது, அவர்களுடன் சேர்ந்து தொன்மையான வீரவிளையாட்டான களரியைக் கற்பது, வயல் வெளியில் பணிபுரியும் குடியானவர்கள் தம் வேலையின்போது பாடும் பாடல்களைப் பாலம் ஒன்றில் நின்றவாறு கேட்பது,” என்பனவே அவளது சிறுவயதுக் கனவுகளாக இருந்தன. இக்கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள அவளது குடும்பத்தினர் துணை நிற்கவில்லை. அவள் ஒரு பெண் பிள்ளை என்பதுதான் இதற்குக் காரணமாகும்.

பால் வேறுபாட்டின் அடிப்படையில் சுகாரியா என்ற இஸ்லாமியப் பெண் பிள்ளை பெற்ற அனுபவங்களின் பிழிவாக மட்டுமின்றி சிறுவயதில் அவள் அவதானித்த செய்திகளையும் வெளிப் படுத்துகிறது. இந்நூலாசிரியர் மலையாள மொழியில் சிறுகதைகள் எழுதிவருபவர். இதழ்களில் பத்தி எழுதுபவராகவும் உள்ளார். 2008இல் கேரள சாகித்திய அகாதமியின் விருதைப் பெற்றுள்ளார்.

நூலாசிரியர்:

இந் நூலாசிரியரான சுகாரா, சென்ற நூற்றாண்டின் அய்ம்பதுகளில் கேரளத்தின் கோழிக்கோடு அருகிலுள்ள திக்கோடி என்ற கிராமத்தில் மாப்பிள்ளா முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். அவரது உம்மா (அம்மா) தமது பதினைந்தாவது அகவையிலேயே ஒரு குழந்தைக்குத் தாயானவர். முப்பத்தியெட்டாவது அகவையில் ஒன்பது குழந்தைகளுக்குத் தாயாக விளங்கினார். இதன் பின்னர் இனிமேல் குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஆனால், இம் முடிவுக்கு மாறாக சுகாராவை அவர் பெற்றெடுத்தார். சுகாராவின் குழந்தைப் பருவம் திக்கோடிக் கிராமத்திலேயே கழிந்தது. தொடக்கக் கல்வியையும் அங்கேயே பெற்றார்.

The Dreams of a Mappila Girlஅவரது உம்மா நான்காவது வகுப்பு வரையே படித்திருந்தாலும் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பத்துக் குழந்தைகளின் தாய் என்றாலும் மலையாள மொழிபெயர்ப்பில் குர்ரானையும் ஹதீசையும் படிக்க நேரம் ஒதுக்கி விடுவார்.அவர் ஒரு நல்ல கதை சொல்லியாகவும் சிறிய நிகழ்வுகளைக்கூட கதை போன்று சுவைபடக் கூறும் ஆற்றலுடையவராகவும் விளங்கினார். அவரிடம் கேட்ட கதைகள் சுகாராவின் கற்பனையாற்றலுக்குத் துணைபுரிந்துள்ளன. அவரது மறைவு தமது வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தின என்கிறார் சுகாரா.

திக்கோடில் இருந்து கோழிக்கோடு நகருக்கு அருகில் உள்ள கோகினூர் கிராமத்தில் தமது திருமணத்தை அடுத்து வாழ்ந்துள்ளார். இருப்பினும் அவரது உள்ளத்தில் திக்கோடி கிராமமும் அங்கிருந்த பூர்வீக வீடான மலையக்கல் வீடும் அவரது நினைவுகளில் படிந்தே இருந்தது. எனவேதான் அவர் பெற்ற குழந்தைப் பருவ அனுபவங்களே இந்நூலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மலையாள மொழியில் அவர் எழுதிய இந் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள ஃபெமிதா சக்கிராவும் கேரளத்தைச் சேர்ந்தவர்தான். சிறுகதை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குபவர். தம் சிறுகதைகளுக்காக விருதுகள் பெற்றவர்.

நூலாசிரியர் சுகாரா எழுதத் தொடங்கியபோது இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையை ஆண்களே எழுத்தில் பதிவுசெய்து வந்தனர். அவர் எழுத ஆரம்பித்ததும் மிகுதியான அச்சுறுத்தல்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.

நூல்:

தலைப்பு எதுவுமின்றி எண் வரிசையில் பகுக்கப் பட்ட மொத்தம் இருபத்தொரு இயல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. திக்கனங்கோடு கிராமத்தில் மலையக்கல் வீடு என்று அழைக்கப்பட்ட பூர்வீக வீட்டில் பிறந்து வளர்ந்த அவரது வாழ்கை அனுபவங்களின் பகிர்வாகவும் இந் நூல் அமைந்துள்ளது. இதனால் ஒரு நாவலாகவும் நினைவலைகளின் பதிவாகவும் இது காட்சி அளிக்கிறது. தன் அனுபவப் பதிவு என்பதால் நூலாசிரியரே நூலின் மையமாகிறார். ஆனால், சுயபுராணமாக நூல் மாறிவிடவில்லை. இதற்குக் காரணமாக அமைவது, இதில் நாம் சந்திக்கும் பல படிநிலைகளில் வாழும் மனிதர்களும் அவரகளது வாழ்க்கைச் சூழல்களும்தான். சுகாராவின் வளரச்சிக்கேற்ப அமையும் உற்றுநோக்கல் அவரது வாழ்க்கையை மட்டுமின்றி வேறுபட்ட வாழ்க்கை நிலையையும் குணங்களையும் கொண்ட மனிதர்களையும் சமூக மாறுதல்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறது. இது நிகழ் காலத்தில் இருந்து நம்மைப் பின்னோக்கி அழைத்துச்செல்கிறது.

முதல் இயலில் சிறுமி சுகாரா அறிமுகம் ஆகிறார். மூன்று பட்டப்பெயர்கள் அச்சிறுமிக்கு.அவள் கைக்குழந்தையாக இருந்தபோது இடைவிடாது அழுதுகொண்டே இருப்பாள். இதனால் கரைச்சபெட்டி (கரைச்சல்:கத்துதல்) என்ற பட்டப்பெயர் கிடைத்தது. தாராக்கோழி (வாத்து) என்ற பட்டப்பெயரும் உண்டு.எதிலும் முந்திக்கொண்டு பேசுபவரை இப்படி அழைப்பதுண்டு, (தமிழில் முந்திரிக்கொட்டை என்பது போல்) இப் பட்டப்பெயர் இவருக்குப் பிடிக்காத ஒன்று. இப்பெயரைக் கூறி அழைத்தால் கோபத்துடன் முறைப்பார். மூன்றாவது பட்டப்பெயரான உம்மாக்குட்டி (அம்மாவின் செல்லப்பிள்ளை)இவருக்குப் பிடித்தமான செல்லப் பெயர்.

இந்த இயலில் வலியப்பா (தாத்தா), உம்மம்மா (பாட்டி),என்போருடன் வீட்டின் பணியாளர்கள் சிலரும் அறிமுகமாகின்றனர். மரத்தால் செய்யப்பட்ட மிதியடியை அணிந்து வீட்டிற்குள் நடக்கும் வழக்கம் இருந்ததையும் அறிந்துகொள்கிறோம். குடும்பத் தச்சரான சந்து ஆசாரி என்பவர் ஆண்டுக்கு ஒருமுறை மரத்தாலான மிதியடிகளைச் செய்து தருவது வழக்கமாக இருந்துள்ளதும் தெரியவருகிறது.

மலையக்கல் வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் நாம் சுற்றிவரும் வாய்ப்பு அடுத்துவரும் இயல்களில் நமக்குக் கிட்டி விடுகிறது. இதனால் உணவு வகைகள், இஸ்லாமியப் பண்டிகைகள், பண்டிகைக்கால சிறப்புணவு, புழங்கு பொருட்கள் என்பனவும் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒன்றுக்கொன்று முரண்பட்ட மனித உள்ளங்களையும் உணர்ந்து கொள்கிறோம். சான்றாக, திக்கோடியில் செயல்பட்டுவந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் சுகாராவுக்கும் கேளப்பன் ஆசிரியருக்கும் இடையே 1947இல் முதல் இந்திய விடுதலை நாள் கொண்டாட்ட நாளில் நடந்த பின்வரும் உரையாடலைக் குறிப்பிடலாம். அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்த சுகாராவைப் பார்த்து “இவரை உனக்குத் தெரியுமா?”என்கிறார் கேளப்பன் ஆசிரியர். "இவர் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர்.” “காந்திஜி.” என்கிறார் சுகாரா. இந்த விடைக்கு “சபாஷ்” என்று கேளப்பன் பாராட்டிய நிலையில், ஆனால் உம்மம்மா (பாட்டி) இப்படிக் கூறுகிறார் என்று தொடர்கிறார் சுகாரா:

“காந்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது, நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்கள் போனபிறகு விலைவாசி உயர்ந்துவிட்டது. நல்ல துணிகளை நெய்ய உதவும் நூலின் விலை உயர்ந்துவிட்டது.”

அதற்கு நீ என்ன பதில் கூறினாய் என்று கேட்ட கேளப்பன் ஆசிரியருக்கு, வகுப்பில் முகமது ஆசிரியர் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்துக் கூறியதை எல்லாம் எடுத்துரைத்தேன்.ஆனால் பாட்டியால் அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.”இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் அறிவுக்குப் புறம்பான எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறார்கள். கேளப்பன் ஆசிரியரை அழைத்து இதைக் குறித்துப் பேசுகிறேன் என்று உம்மாவிடம் கூறினார்” என்றாள்.

“இவர்கள் எல்லாம் பழமையான சிந்தனைகளில் ஊறிப்போனவர்கள். நில மானிய சமூக வரலாற்றின் தாக்கத்திற்கு ஆளானவர்கள். இதன் காரணமாகவே அவர் இப்படி கூறியுள்ளார். ஆங்கில ஆட்சியின் போது, பணக்காரர்களும் நிலவுடைமையாளர்களும் எந்தவிதமான தொல்லைகளையும் எதிர் கொள்ளவில்லை. ஏழைகள் மட்டுமே பட்டினிக்கு ஆளாகித் துன்புற்றார்கள். "நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து உங்கள் சமூகத்திற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்றார் கேளப்பன். “பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று உம்மா சொல்கிறார்களே" என்று துயரம் தோய்ந்த சன்னமான குரலில் சுகாரா கூறினாள். “நீ வளரும்போது நிலைமை மாறிவிடும். நீ கடுமையாக உழைத்துப் படி” என்றார் கேளப்பன் ஆசிரியர். இங்கு வீடு என்ற எல்லையைக் கடந்த கருத்துப் பறிமாற்றம் நிகழ்கிறது.

மலையாள மொழிச் சொற்களில் சில ஒலி மொழிபெயர்ப்பாக ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் உறவுச் சொற்கள் தனியாகவும் ஏனைய சொற்கள் தனியாகவும் அகர வரிசையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பதிமூன்று உறவுச் சொற்கள் தமிழுடன் நெருக்கமான உறவ கொண்டுள்ளன (உம்மா, உப்பா, வலியப்பா, மூத்தம்மா). ஏனைய சொற்கள் வரிசையில் அப்பம், அம்மி, ஆசாரி, உப்பு மாங்கா, உமிக்கரி, உரல், உரல்புறம், கஞ்சி, கிண்டி (கெண்டி), தாவணி, தோசா (தோசை), பாயசம், புட்டு, மிதியடி, முட்டம் (முற்றம்) முறுக்கு, நெய்யப்பம், வீடு, என்ற தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மொத்தத்தில் திடுக்கிடச் செய்யும் நிகழ்வுகளும் திருப்பங்களும் இன்றி வீட்டிற்குள்ளும் வெளியிலும் வாழும் மனிதர்களின் வழியாக ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவின் வாழ்வியலையும் குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையையும் இந்நூல் நாம் அறியும்படிச் செய்கிறது.

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்.