கீற்றில் தேட...

இந்த அரசாங்கத்தைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை.
அது உன்னதமான தாய் என்றோ
எல்லாவற்றுக்கும் உணவளிக்கிறதென்றோ
நம்மை ஏமாற்றவில்லையென்றோ
அதனால் யாருமே வஞ்சிக்கட்டதில்லையென்றோ
சொல்லப் போவதில்லை.
இந்தக் கடவுளைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை
கடவுள் எல்லா அநியாயங்களையும் தட்டிக் கேட்கிறார் என்றோ
எந்தப் பெண்ணும் விபச்சார விடுதியில் வஞ்சகமாக விற்கப்படவில்லையென்றோ
எந்தச் சிறுமியும் பாலியல் கொடுமைக்கு ஆளாகவே இல்லை என்றோ
எல்லாவற்றையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றோ
சொல்லப் போவதில்லை
இந்த மதத்தைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை.
அது மனிதத்தைப் போதிக்கிறதென்றோ
மனிதர்களை சாதிகளற்று இருக்கச் சொல்கிறதென்றோ
இன்னொரு மதத்துக்காரனை சகோதரனென்று பேசுகின்தென்றோ
அதனால் கலவரங்கள் உருவாவதில்லை என்றோ
சொல்லப்போவதில்லை
கட்சிகளைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை
அவை மக்களுக்காகத் தோன்றி மக்களுக்காக உயிரை விடுகின்றன என்றோ
வெவ்வேறு வண்ணங்களிலிருந்தாலும் மக்களை
வண்ணங்களற்று இருக்க வலியுறுத்துகின்றன என்றோ
சொல்லப் போவதில்லை.
எல்லாம் நன்றாக இருக்கிறது.
எல்லாமே ஒழுங்காக போய்க் கொண்டிருக்கிறது
இனி என்ன கவலை?
குறிகளைப் பற்றி பேசுவோம்
உன் காதலைப் பற்றி என் காதலைப் பற்றி
உன் சொற்களைப் பற்றி என் சொற்களைப் பற்றி...