சமயம் பற்றி மானுடவியல் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. ஒவ்வொருவரும் தாம் மேற்கொண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் சமயத்தை விளக்க முயன்றுள்ளனர். மானுடவியல் அறிஞரான எமில் துர்க்கைம் என்பார் ‘சமயம் என்பது சமூகம் சார்ந்த ஒரு நிறுவனமாகும்; மக்கள் தங்களுக்குரிய நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளை யும் வழிபாட்டு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமயங்களைக் கட்டமைக்கின்றனர்’ என்பர். எட்வர்ட் பர்ணட், டைலர், ஜேம்ஸ் ஜார்ஜ், பிரேசர் போன்ற மானுடவியலாளர்கள் சமயத்தை ‘மனித மனத்தைச் சார்ந்தது’ என்று விளக்குகின்றனர். இராபர்ட் லோவி, எப்.மலினாவிஸ்கி, சிக்மண்ட் பிராய்டு, விக்டர் டார்னர், கிளிப்போர்டு, ராட்கிளிப் பிரவுன் போன்றோரும் சமயத்தைச் ‘சமூகம் சார்ந்தது’ என்று விளக்குகின்றனர்.

இன்று சமயம் என்று நாம் கருதும் கருத்தமைப்பு ஒரு நிறுவனமாகும். அந்நிறுவனம் புனிதச் சடங்குகளை ஒருங்கிணைத்து அதற்கு ஒரு தெய்வத்தைப் படைத்து, அந்நிறுவனத்தைச் சார்ந்த மக்கள் கூட்டம் தமக்கெனச் சில வழிபாட்டு முறைகளையும் நடத்தை முறைகளையும் வகுத்துக் கொண்டு, அது வகுத்துக் கொண்ட நெறிமுறைகளுக்கு இசைவாக நடந்து கொள்வதாகும். அதன் நடத்தை விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டியவை; அவ் விதிகளை மீறி நடப்பவர்கள் அச்சமயக் குழுவிலிருந்து விலக்கப் பெறுகின்றனர் அல்லது தள்ளிவைக்க பெறுகின்றனர். இந்நிறுவனத்தைத் தோற்று வித்து அதற்குத் தலைமை தாங்குபவராக; வழிநடத்துபவராக வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் அமைகின்றார். யூதம், கிறித்தவம்; இஸ்லாம், பௌத்தம், சமணம் போன்ற சமயங்கள் அச்சமயங்களைத் தோற்றுவித்த வரலாற்று மனிதரை நமக்குத் தெரிவிக்கின்றன. இச்சமயங்கள் ஒரே ஒருவரைக் கடவுளாகக் கொண்டு ஏகத்துவத்தை வற்புறுத்து கின்றன.

இந்து சமயம் என்று நாம் கொண்டுள்ள கருத்தமைப்பு இதற்கு நேர்மாறானதாகும். உண்மையில், இது ஒரு சமயம் அன்று. மாறாக, இது சில வாழ்வியல் நடத்தைகளின் தொகுப்பு ஆகும். யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம் போன்றவை வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த ஒருவரால் நிறுவப்பட்ட சமய நிறுவனங்களாகும். ஆனால், இந்து சமயம், சநாதன தர்மம், அதாவது, அது என்று தோன்றியது? அதனைத் தோற்று வித்தவர் யார்? போன்றவற்றை விளக்க இயலாத-வரலாற்றுக்கு முற்பட்ட- காலத்திற்குரியதாக அது கருதப்படுகின்றது. அது காலந்தோறும் காலத்தின் தேவைக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளதால், இத்தனைப் பல்கடவுட் கோட்பாட்டுச் சமயம் என்பர். இவ்விரண்டுமே இயல் உலகிற்கு அப்பாற்பட்ட பொருள்களை ஆராய்கின்றன. அதாவது, உலகம் எவ்வாறு தோன்றியது? அதனைத் தோற்றுவித்தவர் யார்? உலகில் காணப்படும் பொருள்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுகள் யாவை? தோன்றிய பொருள்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றன என்றால் அவை எங்கே போய்ச் சேர்கின்றன? அவை மீண்டும் பிறக்கின்றனவா? அப்படிப் பிறக்கும் போது அவை எத்தன்மையுடன் பிறக் கின்றன? என்பன போன்ற பல வினாக்களை ஆராய்வது சமயம் ஆகும். சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் போன்ற கருத்தாக்கங்களும் சமயம் என்னும் சொல்லுக்குள் புதைந்துள்ளன.

‘தொல்சமயம்’ என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். உண்மையில், அதனைச் ‘சமயம்’ என்று கூறுவதே பிழையாகும். நாம் ஆதிச் சமூக மக்களின் நடத்தை முறைகளை விளக்குவதற்காகவே, தொன்மையோடு சமயத்தை யும் சேர்த்துத் ‘தொல் சமயம்’ என்கின்றோம். உண்மையில் புராதன மக்களிடம் மறு உலகம் பற்றிய நம்பிக்கையோ கோட்பாடோ இருந்ததாகத் தெரியவில்லை. அறிவு வளர்ச்சி குன்றியிருந்த நிலையில் அவர்கள் இயற்கையில் காணும் ஒவ் வொரு பொருளும் தம்மைப்போல் உயிர்ப் பாற்றலை பெற்றிருப்பதாகக் கருதினர். அவ்வுயிர்ப் பாற்றலைத் தம் வசப்படுத்திக் கொண்டு தம் வாழ்க்கையை வளமுறச் செய்வதற்காகப் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட அந்நடவடிக்கைகளையே நாம் ‘தொல் சமயம்’ என்று வரையறுத்துக் கூறுகின்றோம்.

பூசாரியம்:

இனக்குழுக்கள் சிலவற்றில் பூசாரி என்பவர் மிகப் பெரும்பங்கு வகித்துள்ளார். ‘பூசாரி’ என்னும் சொல் பூசை செய்பவர் என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இதனை வடசொல் என்பர். ஆனால், வடமொழியிலுள்ள பூஜை என்னும் சொல்லே திராவிட மொழிகளிலுள்ள ‘பூ செய்’ என்பதிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல் என்று வடமொழியிலும் வல்லுநர்களான எமினோ, பர்ரோ ஆகியோர் கூறுகின்றனர். இன்றும் கிராமதேவதை வழிபாட்டில் ‘பூச் சொரிதல் என்பது ஒரு முக்கியமான சடங்காகத் திகழ்கின்றது. திருமுருகாற்றுப்படை முருகனுக்குப் பூச்சொரிதலைக் ‘கொழுமலர் தூஉய்’ என்று சுட்டியுள்ளது. உக்கிரமான தேவதைக்கு உயிர்ப்பலி கொடுப்பதோடு பூச்சொரிதலும் நடைபெறு கின்றது. பூச்சொரிகின்றவன் ‘பூசாரி’ என்று கருதப் பட்டான் என்பது மேலாய்விற்குரியது.

வேதங்கள் குறிப்பிடும் யாகங்களில் உயிர்ப்பலி இருந்தது. ஆனால், திராவிடர்களின் வழிபாட்டில் உயிர்ப்பலி கொடுத்தலோடு பூப்பலி செய்தலும் பெரும் வழக்காக இருக்கின்றது. வழிபடும் பொருளுக்கும் வழிபடுபவனுக்குமிடையில் ஓர் இடைத்தரகராக அல்லது இணைப்பாளராகப் பூசாரி விளங்குவதைக் காண முடிகின்றது.

சங்க இலக்கியங்களில் பூசாரியின் பாத்திரம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகனு டைய பூசாரியான ‘வேலன்’ முருகனின் ஆயுதமான வேலைத் தாங்கி ஆடுவதால், அவன் ‘வேலன்’ எனப் பெறுகிறான். முருகனை அழைத்து அவன் புகழைப் பாடிக்கொண்டு வரும்போதே அவன் ஒரு வகையான மருளுக்குள்ளாகிறான். முருகு அவன் மேல் ஆவேசித்ததாகக் கருதப்படுகின்றது. அந் நிலையில், அவன் வேலைக் கையில் தாங்கி மருளோடு ஆடுகின்றான்; இறுதியில், முருகனின் அருட்பிரசாதமாக பலியாக முருகனுக்குப் படைக்கப்பட்ட பூக்களைத் தருகின்றான். இது ஒரு சாந்தி வழிபாடாகத் தோன்றுகின்றது.

முருகனுடைய பூசாரியான வேலன் நடத்தும் இம்மருளாடல் வெறியயர்தல், வெறியாடல், வெறியாட்டு எனச் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பட்டுள்ளது. ‘வெறி’ என்னும் சொல்லே ‘மணம்’ என்னும் பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டா, குவி, பிராகூய் போன்ற பல திராவிட மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது. கோண்டா மொழியில் இச்சொல் ‘வெறி ஆ’ என வழங்கு கின்றது. மானுடவியலாளர் குறிப்பிடும் சாமனிசத்தோடு தொடர்புடையதாக இச்சொல் கோண்டா மொழியில் இன்றும் வழங்குவது குறிப்பிடத்தக்கது. வேலன் வெறியாடலும் சாமனிசத்தை நினைவூட்டுகின்றது.

மணமாகாத கன்னிப் பெண்களைச் சூர், அணங்கு போன்றவை தீண்டித் துன்புறுத்துவதாகப் பழந்தமிழ் மக்கள் நம்பினர். சூர், அணங்குகள் போன்றே திருமணமாகாத கன்னிப் பெண்களை முருகனும் தீண்டி அணங்குறுத்துவான் என்று பழந்தமிழ் மக்கள் நம்பினர். பெண் ஒருத்தி ஓர் ஆண்மகன்மேல் காதல் கொண்டு உறவு கொள்ளும் போது அவளுடைய உடலில் மாற்றங்கள் சில உண்டாகின்றன. அவற்றிற்குரிய உண்மையான காரணத்தை உணராத பெண்ணின் தாயும் செவிலி யும் அவள் முருகனால் தீண்டப்பட்டாள் என்று முடிவு செய்து முருகனுக்குச் சாந்தி செய்யும் எண்ணத்தோடு வேலனை அழைக்கின்றனர். வேலன் முருக வழிபாடான வெறியை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று நன்கு அறிந்தவன். அதனைத் தொல்காப்பியம் ‘வெறியறு சிறப்பின் வெவ்வாய் வேலன்’ என்று குறித்துள்ளது.

பெண்ணைப் பெற்றவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வேலன், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கின்றான். பெண்ணின் வீட்டின் முற்றத் தில் வெறியாடும் களம் அமைக்கப்படுகின்றது. முருகனுக்குரிய சேவல் கொடி அங்கே ஏற்றப்படுகின்றது. களம் மலர் மாலைகளால் அழகுபடுத்தப்படுகின்றது; வெறியாடும் வேலனும் தன்னைத் தழைகளாலும் பூக்க ளாலும் அணி செய்து கொள் கிறான். பல்வேறு வகைகளில் தன்னை அலங்கரித்துக் கொண்டு நறுமணப் புகையை எழுப்பி மணிகளை ஒலித்து முருகனை வேலன் அழைக் கின்றான். முருகன் அவன்மேல் ஆவேசமுற்றதும், அவன் ஒரு வகையான மயக்க நிலையில் துள்ளிக்குதித்து ஆடிப் பாடுகின்றான். வெறிக்களத்தில் கட்டப்பட்டிருக்கும் கொழுத்த ஆட்டுக்கிடாயின் கழுத்தை அறுத்து அதிலிருந்து பெருகும் குருதியினைச் செந்தினை அரிசியுடன் கலந்து முருகனுக்குப் பலியாக அதனைத் தூவு கின்றான்.

பலிக்காகக் கொடுக்கப்படும் ஆட்டு கிடா இன்றும் நடைபெறுவது போல் சடங்கு முறையில் வேலனால் வெட்டப்பட்டதா அல்லது அறுக்கப்பட்டதா என்பதனை உறுதி செய்து கொள்ளத் தொகைநூல் பாடல்களில் சான்றுகள் இல்லை. தமிழ்ப் பண்பாட்டின் வைதீகச் சமயத்தின் தாக்கம் திணிக்கப்பட்டிருந்த போதிலும் இன்றுவரை அடித்தட்டு மக்களிடத்தில் தொன்மையான பழந்தமிழ்ப் பண்பாடே தொடர்ந்து கொண்டிருப்பதால், மருளாடிய நிலையில் சடங்கு செய்யப்பட்ட ஆட்டுக்குட்டியை வேலன் வெட்டியிருக்க வேண்டும் என்று இவ் வாய்வாளன் கருதுகின்றான். வேலன் முருக னுக்குப் பலியாகத் தூவப்பட்ட பூக்களை அணங் குறுத்தப்பட்ட பெண்ணுக்குப் பிரசாதமாகத் தரு கின்றான். குறுந்தொகைப்பாடல் ஒன்றிலிருந்து பலியிடப்பட்ட கிடாயின் கழுத்திலிருந்து பெருகிய குருதியை எடுத்து அப்பெண்ணின் நெற்றியில் வேலன் தடவுகின்றான் என்று அறிகிறோம். இது இக்காலத்தில் பெண்ணின் நெற்றியில் பூசாரி குங்குமம் இடுவதை நினைவூட்டுகின்றது.

ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில் வெறியாடும் வேலன் ‘கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி முருகு என மொழியும்’ என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. ‘கன்னம்’ என்பது முருகனின் மந்திரத்தை எழுதிய ஒரு தகடு என்று ஐங்குறு நூற்றுக்கு உரை வரைந்த அவ்வை துரைசாமி அவர்கள் விளக்குகின்றார்.

வெறியாடலை ஒத்த நிகழ்ச்சி பல இனக்குழுச் சமூகங்களில் இன்றும் காணப்படுவதாக மானுட வியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதனை, அவர்கள் சாமனிசம்(ளுhயஅயnளைஅ) என்கின்றனர். ‘சாமன்’ என்பது துங்கிஸியன் மொழிச் சொல்லாகும். அது உணர்ச்சிவயமுற்று ஆடுகின்ற அல்லது மேலோக்கி எழுகின்ற ஒருவனைக் குறிக்கின்றது. மானுடவியலாளர்கள் ‘சாமனிசம்’ என்பது ஒரு சமயமன்று; அது ஒரு தொன்மையான வழிபாட்டு நடத்தை என்பர். சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் ‘சாமன்கள்’ இன்றும் இருக் கின்றனர். அவர்களைப் பற்றி மானுடவிய லாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். வெறியாடுதலையும் சாமனிசத்தையும் ஒப்பிட்டுக் காண முடிகின்றது. கேரள மாநிலத்தின் வடபகுதியிலுள்ள மலபார், காசர்கோடு மாவட்டங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் வேலன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் பூசாரி இனத்தவர் இன்றும் வாழ்கின்றனர். அவர்கள் ‘வேலன்மார்’ என்று அழைக்கப் பெறுகின்றனர். குறிப்பிட்ட விழாக்காலங்களில் இவர்கள் வேலன் கோலம் அணிந்து ஆடுகின்றனர். அது வேலனாட்டம் அல்லது தெய்யம் (தெய்வம்) என்று அழைக்கப்படுகின்றது.

சங்க இலக்கியங்களில் வேலனாகிய ஆண் பூசாரியைப் போன்றே கட்டுவிச்சி என்னும் பெண் பூசாரியும் இடம் பெறுகின்றாள். கட்டுவிச்சியைப் பெண் பூசாரி என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்யாதபோதிலும், அவளும் வேலன் செய்யும் முருக வழிபாட்டைச் செய்வதாகத் திரு முருகாற்றுப்படை பதிவு செய்துள்ளது. திரு முருகாற்றுப்படை, காலத்தால் பிற்பட்ட நூல் என்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆயினும், அந்நூலில் முருக வழி பாட்டிற்குரிய தொன்மையான கூறுகள் (அம்சங்கள்) அனைத்தும் பதிவு செய்யப் பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படையும் பரிபாடலி லுள்ள செவ்வேள் பாடல்களும் குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை வடமொழிக் கந்தனோடும் (ஸ்கந்தன்) சுப்பிரமணியனோடும் (மேலான தெய்வம், சு+ப்ரமணியம்) கார்த்திகேயனோடும் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்) இணைக்கப்பட்டுள்ளதைத் தெளிவுறக் காட்டு கின்றன.

கட்டுவிச்சி என்பவள் கழங்கு நெல் முதலிய வற்றை முறத்தில் வைத்து எண்ணிப் பார்த்துக் குறி கூறுபவள்; அதனால் இவள் ‘கட்டுவிச்சி’ எனப் பெறுகின்றாள். இவள் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவள்; இவள் கட்டுப்பார்த்துக் குறிசொல்லும் போதுதான் வழிபடும் தெய்வங்களை விளித்துப் (அகவி-அழைத்து) பாடுவதால் இவள் ‘அகவன் மகள்’ என்றும் அழைக்கப் பெறுகின்றாள். இவள் முதுமை அடைந்தவள்; இவள் தலைமயிர் நரைத்திருக்கின்றது; இவள் சங்கு மணிகளால் ஆகிய மாலையை அணிந்துள்ளாள்; இவள் தன்கையில் ஒரு சிறு கோலை ஏந்தியிருக்கின்றாள்; அவள் குறி சொல்லத் தொடங்கும் முன் கோலை ஆட்டி ஆட்டித் தெய்வத்தை அகவிப்பாடுகிறாள்; தான் வழிபடும் தெய்வத்தை அழைக்கின்றாள்; அத்தெய்வம் இருப்பதாகக் கருதும் மலையைப் பாடுகின்றாள். சங்க இலக்கியங்களில் அகவுநர் கையில் ஒரு கோல் இருப்பதாகக் குறிக்கப் பட்டுள்ளது. புறநானூற்றில் இடம்பெறும் அச் சொல்லுக்கு ‘அவர் தம் பிறப்பை உணர்த்தும் கரிய கோல்’ (புறம் 152:18) என்று உரை வரையப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து அதனை ‘நுண்கோல்’ (43:27) என்கிறது. பதிற்றுப்பத்து உரையாசிரியரும் புறநானூற்று உரையாசிரியரைப் போன்றே உரை செய்துள்ளார். இவ்வுரை பொருத்தமானதன்று என்று இவ்வாய்வாளன் கருதுகின்றான்.

தன் முன்னால் உள்ள தலைவர் களின் பிறப்பையும் அவனது முன்னோர் களின் சிறப்பையும் தான் வழிபடும் தெய்வத்தின் உதவி யால் அகவன் மகள் அழைத்துக் கூவிப்பாடு கின்றாள் என்பதே பொருந்தும். அவ்வகையில், இது ஒரு மந்திரக்கோலாகப் பயன்பட்டுள்ளது. முன்னோர்களின் பெருமையைப் பாடும் பாண மரபினர் இன்றும் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சிற்றூர்களில் வாழ்ந்து வருகின்றனர். மத்திய இந்தியாவில் உள்ள கோண்டு என்னும் நடுத் திராவிட மக்களிடம் அவர்களின் குடிப்பிறப்பை உணர்த்தும் ‘அகவுநர் கள்’ இருப்பதாக மானுடவியல் அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார்களிடையில் அவர்களின் முன்னோர்களின் சிறப்பைப் பாடும் அகவுநர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

தலைவனோடு காதல் கொண்டதால் உடல் வேறுபாடுற்ற தன்மகளின் நோய்க்குக் காரணம் என்ன என்று பெண்ணின் தாயும் செவிலியும் கட்டுவிச்சியை அழைத்துக் கேட்கின்றனர். அவள் கட்டு வைத்தும் கழங்கு வைத்தும் தலைவி உற்ற நோய்க்குக் காரணம் கூறுகின்றாள். திருமுரு காற்றுப்படையில் முருக வழிபாடு நடத்தும் அகவன் மகள் ‘குறமகள்’ என்றே குறிக்கப் பெறுகின் றாள். இவள் முருகனை வழிபடும் முறை காண் பார்க்கு அச்சம் தருவதாக உள்ளது; இவள் முருகனுக்குரிய மந்திரத்தை யாரும் கேட்க முடியாதபடி தனக்குள் மெல்ல உரைக்கின்றாள்; அவள் முருகனைக் குனிந்து வணங்கி மலர்களைத் தூவி வழிபடுகின்றாள். இது இன்றும் பெருஞ் சமய வழிபாட்டில் ‘மந்திரபுஷ்பம்’ எனப்படு கின்றது. பூக்களைப் பலியாகத் தூவும் முன் அவள் தன் கைவிரல்களில் பெருவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் மடக்கிக் கொண்டு இரண்டு பெருவிரல்களையும் தன் நெஞ்சில் வைத்து முத்திரை காட்டுவதாகத் திருமுருகாற்றுப்படை யில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவளும் வேலனைப் போன்று காப்புக் கட்டிக் கொள்கிறாள்; ஆட்டுக்கிடாயைப் பலியாகக் கொடுத்து அதன் குருதியை வெள்ளரிசியில் பிசைந்து பலியாகத் தூவுகின்றாள்; பல இசைக் கருவிகள் முழங்கு கின்றன; நறுமணப் புகையைத் தூபமாகக் குறமகள் எழுப்புகின்றாள்; முருகனுக்குரிய மலையைக் குறிஞ்சிப் பண்ணில் பாடுகின்றாள்.

வேலன் செய்யும் வழிபாட்டிற்கும் குறமகள் செய்யும் வழிபாட்டிற்கும் நுட்பமான வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகின்றது. குறமகள் செய்யும் முருக வழிபாடு மலை வளத்திற்காகச் செய்யப் படும் ஒரு வளமைச் சடங்காகத் தோன்றுகின்றது. இவள் ஆவேசமுற்றுத் தெய்வ மேறிப்பாடுவதாகத் தோன்றவில்லை. ஆனால், வேலன் வெறியாடுகின்றான். அதனைச் ‘சாந்திக் கூத்து’ எனலாம். அதாவது, துன்புறுத்தும் ஒரு தெய்வத்தினை அமைதிப் படுத்தும் முறையில் அதனுக்குரிய பொருள்களைக் கொடுத்துப் பரிகாரம் செய்வது போன்று வெறி யாடல் அமைந்துள்ளது.

தமிழர்களின் தொன்மையான சமூகம் தாய் வழிச் சமூகமாக இருந்தது என்பதற்கான எச்சங் களில் இதுவும் ஒன்றாகும். தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே பூசாரியாக இருந்துள்ளாள் என்று கருதுவதற்குத் திருமுருகாற்றுப்படையின் பழ முதிர்சோலைப் பகுதி இடம் தருகின்றது. சிலப் பதிகாரத்தில் வேட்டுவர்களின் தெய்வமான கொற்றவையின் பூசாரி சாலினி என்னும் பெண்ணாகக் குறிக்கப்பட்டிருப்பதும் நம் கருத்துக்கு அரண் செய்கின்றது. தொகைநூல் பாடல்களில் அயிரை மலையிலுள்ள கொற்றவை யையும் முரசிலுள்ள தெய்வத்தையும் பூசை செய்பவன் ஆணாகவே குறிக்கப் பெற்றுள்ளான். தாய்வழிச் சமூகம் உடைந்து தந்தைவழிச் சமூகம் உருவாகி, அச்சமூகம் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, ஆணே பூசாரியாகப் படிமலர்ச்சி பெற்றது சமூகத்தின் இயங்கியல் தளத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சியே ஆகும்.

வெறியாடல் தொடர்பான பாடல்களைத் தொகுத்துக் காணும்போது தலைவியும் அவள் தோழியும் முருகன்தான் தலைவியை அணங் குறுத்தினான் என்று நற்றாயும் செவிலியும் கருதியதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை; அவர்கள் வெறியாடலையே உண்மை என்று நம்ப வில்லை. தலைவன் ஒருவன் மீது காதல் கொண்டதால், தான் பசலை நோயுற்று வருந்துவதை அறியாத செவிலி தான் முருகனால் அணங் குறுத்தப்பட்டதாக செவிலி கருதுவதைத் தலைவி ஏற்றுக் கொள்ளவில்லை. வெறியாடல் பற்றிய பாடல் ஒன்றில் முருகன், ‘மடவன் மன்ற முருகன்’ என்று தோழியால் எள்ளி நகையாடப்படுகின்றான். இதனை எண்ணிப் பார்க்கும்போது இத்தகைய பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் வெறியாடல் பற்றிய பாடல்கள் என்பது புலவர்களின் புலனெறி வழக்கமாகப் பாடப்பட்டனவாக இருக்கலாமோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

வெறியாடல் போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நாகரிக முதிர்ச்சியில்லாத இனக்குழுக்களிடம் மட்டுமே இருந்திருக்கக் கூடுமோ என்று இவ்வாய்வாளன் கருதுகின்றான். சங்க இலக்கியங்கள் பெரும் பாலும் நாகரிக வளர்ச்சியடைந்த சமூகம் பற்றிய ஆவணங்களாக உள்ளன. அவற்றில் இடம் பெற்றுள்ள வெறியாடல் போன்ற சடங்குகளைக் குறிக்கும் பாடல்கள் இனக்குழு நினைவுகளை பதிவு செய்யும் முகத்தான் பாடப்பட்டனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது. அதற்கேற்பப் பரிபாடலில் வெறியாடல் ‘பேஎவிழவு’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ‘அச்சம் ஊட்டும் பேய்விழா’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்பாடலைப் பாடிய ஆசிரியர் ‘அது வாயுமல்ல, பொய்யுமல்ல’ என்ற இரட்டைக்குரலில் பேசுகின் றார். அதாவது, ‘வெறியாடல் உண்மையுமல்ல பொய்யுமல்ல என்று அவர் கூறுகின்றார். பக்தி இலக்கியக் காலத்தில் வெறியாடல், ஓர் இழிவான வழிபாடாகத் தூற்றப்பட்டுள்ளது. நம்மாழ்வார் தம் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் இம்மாறு பட்ட சிந்தனையைப் பதிவு செய்துள்ளார்.