முன்னுரை:

                தமிழ் இலக்கியம் 25 நூற்றாண்டுகளின் வரலாற்றை பெற்றுள்ளது என்பர் நம் சான்றோர் பெருமக்கள். அத்தகைய அழகுதமிழில் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பிறமொழியாரின் தாக்குறவும் (Influence) பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் குறைவாக இருந்த காரணத்தால், நாட்டு வழக்கில் இருந்த நம் பாடல்களில் இருந்தே புலவர்களால் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் மற்ற திராவிட-மொழிகளின் இலக்கியங்கள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தோன்றியதாக அறிய முடிகிறது. (சங்ககாலம் தொடங்கி கி.மு 500 – கி.பி 200) பின்னர் காப்பிய காலத்தில் குறிப்பாக கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்ட காலமாக அனுமானிக்கப்படுகின்றது. அத்தகைய சிறப்பு மிக்க மணிமேகலை நூலினை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே மணிமேகலைக் காவியம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை ஆகும். கண்ணகியை கற்பிற்கு உதாரணமாக கட்டமைத்தும்; மணிமேகலையை தெய்வநிலைக்கு அடையாளமாக கட்டமைத்தல்போன்ற சாத்தனாரின் அணுகுமுறை பெண்களுக்கான இழிநிலைகளை கட்டுடைக்கும் பின்புலம் வெளிப்பiயாக தெரியவருகின்றது மணிமேகலை தெய்வமாக்கப்படுதல், பத்தினி வழிபாடு போன்றவை ஆராயப்பட வேண்டியவைகள் ஆகும்.

 மணிமேகலை என்பது தமிழிலக்கியத்தில் உள்ள இரண்டாம் காப்பியம் ஆகும். கதையின் தொடர்பில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி போல் காணப்படுகின்றது. ஆகவே சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றது. கோவலனுக்கும் நாட்டியக் கலையரசியான மாதவிக்கும் மகளாகப் பிறந்த மணிமேகலையின் வாழ்க்கையை விளக்கும் நிகழ்வாக சாத்தனார் கட்டமைப்பது மணிமேகலை உற்ற வயது வந்தபோது, குலத்தின் வழக்கப்படி அவள் நாட்டியம் கற்றுப் பரத்தையாக வாழவேண்டும் என்று பாட்டியும் மற்றவர்களும் விரும்பினர். ஆனால் அவளுடைய தாய் மாதவியோ கோவலன் பிரிந்து சென்று மதுரையில் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்தது முதல் துயரமே வடிவாய், கலங்கி, கலை வாழ்வைத் துறந்தாள் என்றும் பதிவுகளை நாம் காணமுடிகின்றது.

மாதவிக்கு இங்கே இரண்டு விதமான கேள்விகள் எழுகின்றது. 1. குலத்தின் வழக்கத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லை தன் வாழ்க்கையை போல (வேசி) பரத்தைப் பெண், 2.இரண்டாம் தாரம் என்ற வாழ்க்கையா என்ற இந்நிலையில் தன் நாட்டிய தொழிலை விடுத்து மனதில் துயரத்தோடு பௌத்த சமயத்தைச் சார்ந்த அறவணஅடிகள் என்பவரிடம் அனுகி துறவறம் பூண்டாள் என்றும் தன் மகள் குலத்தொழிலை செய்யக் கூடாது என்று உறுதி பூண்டு, அவளுடைய கூந்தலைக் கலைந்து சமயத் தொண்டுக்கு உரியவள் ஆக்கினாள் என்றும் அவளைத் தன் மகள் என்று கூறுவதும் பழியான தொழிலில் கொண்டு போய் சேர்க்கக் கூடும் என்று கருதி, கண்ணகியின் மகள் என்றே சொல்லத் தொடங்கினாள். இவ்வாறு குடும்பத்தைத் துறந்த மணிமேகலையின் வாழ்வில் இடையூறு புகுந்தது நாட்டின் இளவரசனான உதயணகுமாரன் அவளுடைய இளமையைக் கண்டு காதல் கொண்டான் அடிக்கடி பின்தொடர்ந்தான் அந்நிலையில் அவளைக் காப்பாற்றக் குல தெய்வம் வந்து உதவியதாம். அந்தத் தெய்வத்தின் உதவியால் மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்று, புத்தரின் திருவடிகளைக் கண்டு, முன்பிறப்பை உணர்ந்து, நாட்டுக்கு திரும்பினாள். அமுத சுரபி என்னும் தெய்வீகப் பாத்திரம் பெற்றுப் பலருடைய பசியைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றாள். நாடெங்கும் திரிந்து பசியும் பிணியும் தீர்த்து மக்களுக்கு அறமொழிகளை எடுத்துரைத்தாள். பல நல்லறங்களைச் செய்து பௌத்த நெறியின்படி முக்தி பெற்றாள் என்று சாத்தனார் பௌத்தம் சார்ந்த செய்திகளையே முன்னிருத்துகின்றார். ஆனால் இளங்கோவடிகள் போல் சமயப் பொதுமை நாடவில்லை.

                சாத்தனார் கட்டமைக்கு மணிமேகலை என்னும் காப்பியத்தைவிட மணிமேகலை என்னும் பெண் துறவியே பலருடைய போற்றுதலுக்கு உரியவளாய் விளங்கியுள்ளாhள் என்ற செய்தி காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டுமல்லாது அழகும் இளமையும், அறிவும் பண்பும் நிரம்பிய பெண்ணாக, அரசிளங் குமாரனுடைய காதலை கைவிட்டு பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம், அதைவிடப் பெரியது அவள் அருள் நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு ஆகும். மணிபல்லவத் தீவில் அவள் பெற்ற அமுத சுரபி என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தி “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” பசிக்கு உணவு கொடுத்து காப்பவர் உயிரையே காப்பாற்றும் அறமுடையோர் என்று உணர்ந்து. செயலாற்றும் நிலை, மணிமேகலை கூறிய பாடல் கீழே

“அறமெனப்படுவது யாதெனக்

கேட்பின் மறவாது இதுகேள் “

மன்னயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உரையுளும் அல்லது கண்டதில்லை அறநெறி போற்றுதல், உணவு அளித்தல், கூண், குருடு, ஊமை, செவிடு திக்கற்றவர்களுக்கு உதவிசெய்வதாக, பிறரிடத்தில் அன்பு கொண்டு உதவி புரிகின்ற தன்மை, இளவரசனின் கொலைக்கு காரணமாக்கி சிறையில் அடைகப்பட்டாள் மணிமேகலை. பிறகு அவளுடைய பண்பையும் உண்மையையும் உணர்ந்த சோழ அரசன் சிறையிலிருந்து விடுவித்து மணிமேகலை அரசனிடம் கேட்ட வரம் சிறைச்சாலைகளையெல்லாம் அறச்சாலை ஆக்குமாறு அரசனைக் கேட்டுக் கொண்டாள் மகனாகிய இளவரசனை இழந்த சோழ அரசி, முதலில் மணிமேகலையிடம் சினம் கொண்டு அவளுக்குப் பல துன்பங்கள் செய்தாள். பிறகு உண்மை உணர்ந்ததும் சினம் நீங்கிய அரசி, முதலில் மணிமேகலையை வணங்கினாள். அப்போது மணிமேகலை நீ நாட்டு மன்னனின் தேவி என்மேல் காதல் கொண்ட இளவரசனைப் பெற்ற தாய் ஆதலால் என்னை வணங்குவது பொருந்தாது என்று கூறினாள். சிறைச்சாலை அறச்சாலையாக மாற்றம் அடைதல் அறம், நீதி, நெறி தலைத்தோங்க அரசன் அவ்வாரே செய்தான். அரசி வணங்கும்போது தன் மகன் இறப்பு குறித்து புலம்பி அழும்போது வாழ்வின் நிலையாமையை உணர்த்தினாள். அவரவர் வினைக்கு ஏற்றவாறு அமையும் அதை தெரிந்துகொள்ள இயலாது என்கிறாள். இவ்வாறு பல இடங்களில் புத்தர் பெருமானின் அறிவுரைகள் மணிமேகலையின் வாய்மொழியாலும் வாழ்க்கை நெறியாலும் தெளிவாக புலப்படுகின்றன.

மணிமேகலை – சிறப்புச் செய்திகள்

• மந்திர வலிமையால் வானிற் பறந்து போதலும், உருவம் மாறுதலும் பசியின்றி இருத்தலும் கூடும் என்பதைப் புலப்படுத்துதல்

• ஒரு பாத்திரமே எடுக்க எடுக்கக் குறையாத உணவைச் சுரந்து தந்துகொண்டே இருக்கும் தெய்வசக்தி படைத்தது என்பதை உணர்த்துதல்

• கற்புடைய மங்கையர் நெருப்பிலே இறங்கி உயிர்விட முயன்றாலும் நெருப்புச் சுடாது என்று எதிர்மறையாய் கட்டமைப்பது

• தெய்வங்கள் நேரி;ல் தோன்றிப் பேசும்

• உயிர்களின் பசிப்பிணி தீர்த்தலே மிகச் சிறந்த அறமாகும்

• மக்கள் பாவம் போக்கக் குமரித்துறை சென்று நீராடுதல்

• ஆட்சியாளர்கள் தாமே அறவழி நடத்தல்வேண்டும் என்பதும், மன்னுயிர்கெல்லாம் உண்டியும், உறையுளும் உடையும் கிடைக்குமாறு நாட்டாட்சியை முறையே நடத்த வேண்டும் என்பதும்.

• மிக்க அறமே விழுத்துணையாவது என்பதைப் பல படியாக வற்புறுத்திக் கூறுதல்.

• உம்மை வினைவந்து உறுத்தல் ஒழியாது என்று காட்டித் தீவினை விலக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

• அருந்தவர், அரசர், கணவனுடன் தாமும் உயிர்விட்ட பெண்டிர் ஆகியோருக்குஞ் சுடுமண் ஓங்கிய நெடிநிலைக் கோட்டம் அமைத்தல்.

• இன்னும் அக்கால வாழ்வியல் மரபு காட்டும் செய்திகள்.

சமயக்கணக்கர் தம் திறங்கேட்ட காதை பகுதியில்

‘நாவை நன்பொருள் உரைமினோ’ எனச் சமயக் கணக்கர் - தம்திறம் சார்ந்து வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள்: எய்தி, ‘நின் கடைப்பிடி இயம்பு’ என - ‘வேத வியாதனும் கிருத கோடியும் ஏதம்இல் சைமினி, எனும்இவ் ஆசிரியர் பத்தும் எட்டும், ஆறும், புண்புறத் தம் - தம் வகையால், தாம்பகர்ந் திட்டனர்; காண்டல், கருதல், உவமம், ஆகமம், ஆண்டைய அருத்தா பத்தியோடு, இயல்பு ஐதிகம், அபாவம், மீட்சி ஒழிவறிவு எய்திஉண் டாம்நெறி, என்றுஇவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்

                மாதவன் வடிவம் எடுத்த மணிமேகலை சமயவாதிகள் வாழும் இடத்திற்குச் சென்றாள். “குற்றமற்ற மெய்ப் பொருளை உரைப்பீராக!” என வினவும் கருத்து உடையவளாய் வேத நெறியை மேற்கொண்டொழுகும் அளவை வாதியை அடைந்தாள். “நீ கைக் கொண்ட சமயக் கொள்கைகளைச் சொல்வாயாக!” என்று அவனைக் கேட்டாள். அளவை வாதி விரிவாகச் சொல்லலுற்றான்: பொருளின் உண்மைத் தன்மையை அறிவதற்காக அளவைகள் வகுக்கப்பட்டன. உத்தர மீமாஞ்சை எழுதியவரும், வேதத்தைப் பகுத்து முறை செய்தவரும் ஆன வேதவியாசர், பாதராயனர் என்னும் கிருதகோடி, பூருவ மீமாஞ்சை எழுதிய சைமினி ஆகிய இவ்வாசிரியர்கள் முறையே பத்து அளவை, எட்டு அளவை, ஆறு அளவை என்று தத்தம் கூறுபாட்டின்படியே அளத்தற்குரிய பொருளை அஞ்சாமல் அளந்து காட்டத் தக்க அளவைகளைக் கூறியிருக்கின்றனர். அவை வருமாறு:

1. காட்சி அளவை - பிரத்தியட்சம்

2. கருத்தளவை - அனுமானம்

3. உவம அளவை - உவமம்

4. ஆகம அளவை - சத்தம்

5. அருத்தாபத்தி அளவை - அருத்தாபத்தி

6. இயல்பு அளவை - சுபாவம்

7. ஐதிக அளவை - ஐதிகம்

8. அபாவ அளவை - இன்மை

9. மீட்சி அளவை - பாரிசேடம்

10. உள்ளநெறி அளவை - சம்பவம்

 மேற்கூறிய பத்து அளவைகளாலும் ஆராய்ந்து பொருளின் உண்மைத் தன்மை அறிந்து ஒழுகுதலே அளவைவாதியின் கொள்கையாகும். அவற்றையெல்லாம் ஆராய்ந்து அறிந்து பௌத்த நெறியைப் பின்பற்றினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் மூலம் தத்துவம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளை உண்மையாய் அறிந்து செயல்பட்டதை விளக்குகின்றது. மேலும் எண்ணம், சொல், செயலில் தீங்கு செய்யாமல் கௌதமர் கூறும் அமைதி வழியை மையப்படுத்துவதை நாம் இங்கே காணமுடிகின்றது.

மருள்இல் காட்சி ஐ – வகை ஆகும்; கண்ணால் வண்ணமும், செவியால் ஓசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும், நாவால் சுவையும், மெய்யால் ஊறும், எனச் சொன்ன இவைஇவை; கண்டு, கேட்டு, உயிர்த்து, உண்டு, உற்று; துக்கமுஞ் சுகமும்எனத் துயக்கற வறிந்து உயிரும் வாயிலும், மனமும் ஊறுஇன்றி, பயில் ஒளி யொடு, பொருள், இடம், பழுது இன்றி, சுட்டல், அறிதல், கவர்கோடல், தோன்றாது, கிட்டிய தேசம், நாமம், சாதி, குணம், கிரி யையின் அறிவது ஆகும்.

தொகுப்புரை:

தமிழ் இலக்கிய செழுமை தாங்கிய சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலைக் காப்பியம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக அனுமானித்தாலும் காப்பிய கட்டமைப்பு சமுகத்தில் புறம்தள்ளப்பட்ட பரத்தையர் குலப் பெண்ணிடம் காதல் வயப்பட்ட கோவலன் கண்ணகி மகளாக உயர்குடிக்கு அடையாளம் காட்டப்பட்டும் மணிபல்லவத் தீவிற்கு வான் வழியே பயணம் மேற்கொண்டு புத்தர் பாதபீடிகையை வணங்கி அமுத சுரபி பெறல், சிறைச்சாலை அறச்சாலைகளாக மாற்றம் அடைய வைத்தல் இறுதியில் தெய்வமாக்கப்படுதல், நிலையாமைத் தத்துவங்களை நிலைப்படுத்துதல், பௌத்த நெறி புரிதலோடு பெண்களுக்கு எதிரான பண்பாட்டு மரபுகளை உடைத்தெறிந்து துறவு நிலையை அடைந்து, பௌத்த சமயத்தின் அறம், நீதி, பிற உயிர்களுக்கு இரங்குதல் சமூக கட்டமைப்பில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைய மணிமேகலை காப்பியத்தில் சாத்தனாரின் பண்பாட்டு கட்டுடைப்பு புலப்படுகின்றது.

                குறிப்பாக காப்பிய காலத்திற்கு முந்தைய பகுதியில் இந்து சமயத்தின் சட்ட புத்தகமாக கருதப்படும் மனுஸ்மிருதி என்பதை வருண பகுப்பு, குலத்தொழில் யார் யாருக்கு எந்த பணிகள் எனவும் அதை மீறுபவர்களுக்கு என்ன என்ன தண்டனை பிராமணர்களுக்கு அளிக்கப்படும் விலக்கு போன்ற கட்டமைப்புகளை உள்ளடக்கி இருந்த காலத்தில் பெண்களின் நிலை மிகவும் மோசமாக காணப்பட்ட அக்காலத்தில் குறிப்பாக வயதுக்கு வந்த ஆறு மாத காலத்தில் திருமணம் முடித்தல், வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. தலைகுணிந்து நடக்க வேண்டும், மாத விலக்குக் காலம் ஆனால் பார்ப்பணர்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் கோவில்களை விட்டு ஆறு மைல் தூரம் சுற்றி நடந்து செல்ல வேண்டும். பெண்கள் எப்பொழுதும் கணவனுக்கு கட்டுப்பட்டவள் அடங்கி நடக்க வேண்டும். ஒரு ஆண் பெண்னை அடிப்பது தர்மமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெண் அடிவாங்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். நீர் நிலைகளுக்கு செல்லக் கூடாது. தண்ணீரைக் கடந்து பயணம் செய்யக் கூடாது. என்ற பல விதமான கட்டுப்பாடுகளால் பெண்கள் இழிநிலைகளை உடைத்தெறியும் உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தைக் கட்டமைக்க முற்பட்டுள்ளார். மேலும் பௌத்த தர்மம், தம்மம் என்பது எல்லாரும் இன்புற்று, சமமான நடுநிலையான, பொதுவான வாழ்க்கை வாழ வேண்டும். வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று கற்றுத்தர, உலகத்தில் எதுவும் நிலையானது இல்லை என முடிக்க விளைகிறார்.

பார்வை நூல்கள்:

மு. வரதராசன் - தமிழ் இலக்கிய வரலாறு, இருபதாம் பதிப்பு, ஸ்வாதி மந்திர் சாலை, புதுடெல்லி 110 001

துரை. தண்டபாணி      - மணிமேகலை தெளிவுரை, முதல் பதிப்பு 2001 டிசம்பர், உமா பதிப்பகம் மண்ணடி, சென்னை – 600 001.

ந.மு வேங்கடசாமி நாட்டர் ஒளவை.சு. துரைசாமிப் பிள்ளை - கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை முலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை 600 014.

மா.மாணிக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர், சைவ சித்தாந்தத் தத்துவத்துறை, சமயங்கள் தத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை-21.

Pin It