தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எனும்போது இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

இலக்கியம் பற்றிய மார்க்சியம்

சமுதாயத்தின் இயங்குநிலை பற்றி அதற்கொரு திட்டவட்டமான கருத்தியல் உண்டு. இயங்குநிலை என்பதில் பவுதீக இயக்கம் மட்டுமல்லாது உணர்வுநிலை இயக்கமும் அடங் கும். இந்த இரண்டுக்குமான மெய்யான, சரியான உறவை அடையாளம் கண்டதில்தான் மார்க்சின் பெருமை அடங்கியுள்ளது. அவர் எழுதினார்.

“மனிதர்கள் தங்களது சமூக வாழ்வை நடத்திச் செல்லும்பொழுது சக மனிதர்களுடன் சில திட்டவட்டமான உற்பத்தி உறவுகளை மேற் கொள்கிறார்கள். அந்த உறவுகள்அவர்களது காலத்திய பொருள் உற்பத்திச் சக்திகளுக்கும் இயைந்தவையாக இருக்கின்றன. அந்த உறவுகள் தவிர்க்க முடியாதவை, இவர்களின் ஆணைக்கு அடங்காதவை. அந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானமாக, உண்மையான அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்தின் மீதே ஒரு சட்டப்பூர்வ அரசியல் மேற்கட்டுக்கோப்பு எழுகிறது; அதற் கேற்றபடி திட்டவட்டமான சமூக உணர்வுகளும் தோன்றுகின்றன. பொருள் உற்பத்தி வாழ்வு முறைதான் பொதுவாக சமூக, அரசியல், அறிவு பூர்வ வாழ்வு முறையினை நெறிப்படுத்துகிறது. மனிதனின் உணர்வு நிலை மனிதனின் வாழ்வு நிலையைத் தீர்மானிக்கவில்லை. மாறாக, மனிதனின் வாழ்வு நிலையே மனிதனின் உணர்வு நிலையைத் தீர்மானிக்கிறது.”

மனிதனின் உணர்வுநிலை எனப்பட்டதில் அவனது இலக்கிய உணர்வுநிலையும் அடங்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இலக்கியமானது மனித வாழ்வு நிலையிலிருந்தே பிறக்கிறது என்பதுதான் மார்க்சியத்தின் நிலைபாடு. இதுதான் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏன் ஒரு குறிப்பிட்ட மாதிரியான இலக்கியம் பிறந்தது என்பதைப் புரிய வைக்கிறது. இதுதான் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வேறு மாதிரியான இலக்கியம் ஏன் பிறக்கவில்லை என்பதையும் விளங்க வைக்கிறது.

தமிழ்ச் சூழலில் யோசித்தால் சங்க காலத் தில் ஏன் சங்கப் பாடல்கள் தோன்றின, சங்கம் மருவிய காலத்தில் ஏன் காப்பியங்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பிறந்தன என்பது புரிபடுகிறது. சங்க காலத்தில் ஏன் வள்ளுவர் தோன்றவில்லை, சங்கம் மருவிய காலத்தில் ஏன் மூவர் தேவாரம் பிறக்கவில்லை, “பக்தி இயக்க காலம்” எனப்பட்டதில் ஏன் பாரதியும் பாரதிதாசனும் உதிக்கவில்லை என்பதும் விளங்குகிறது.

இலக்கியத்தைப் பாட்டிலே, எழுத்திலே உருவாக்குகிறவன் ஒரு மனிதனே. அவனுக்குரிய பங்கு நிச்சயம் அவனுக்கு உண்டு. ஆனால், அவனுக்குக் கிடைக்கிற களம் ஏற்கெனவே உள்ள சமுதாயம்தான். அதிலே ஓர் உடைப்பை ஏற்படுத்த அவன் விரும்பினாலும் கூட அதற்கான துவக்கம் ஏற்கெனவே உள்ளதிலிருந்துதான் பிறப்பெடுக்க முடியும். இது தனி மனித இலக்கியவாதியின் ஆசைக்கும், ஆணைக்கும் கட்டுப்படாத விஷயம். கிடைத்த களத்திலேயே, அதற்குள்ளிருந்தே புதிதைப் படைக்க முயலுவதில்தான் அவனது தனித்துவம் வெளிப்படுகிறது. அப்படிப் பிறக்கிற புதுமை இலக்கியம் - தனது உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் - அதே சமுதாயத்தை வளர்த் தெடுக்கவும் உதவும். மண்ணில் பிறந்த இரும்பு கொழுமுனையாகி அந்த மண்ணையே கிளறுவது போல எங்கே பிறந்ததோ அங்கேயே தன்னைப் பிரயோகிக்கும்.

மார்க்ஸ் ஒரு விரிந்த அர்த்தத்தில் கூறிய இந்த அஸ்திவாரம் - மேற்கட்டுக்கோப்பு கோட் பாட்டைச் சிலர் கொச்சைப் படுத்தினார்கள். அஸ்திவாரம் எனப்பட்ட பொருளியல் வாழ்வே சகலமும் என்றும், மேற்கட்டுக்கோப்பு எனப்பட்ட உணர்வுபூர்வக் கூறுகள் அதற்கேற்பச் செயல்படும் வெறும் தானியங்கி என்றும் அதைச் சிதைத்தார்கள். இதை மார்க்சின் உயிர்த்தோழர் ஏங்கெல்சே கண்டித்தார். “வரலாறு பற்றிய பொருளியல்வாதக் கோட்பாடின்படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரே யானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்தமற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத் தனமானதாக ஆக்கி விடுகிறார்” என்று கடுமை யாகக் கூறினார். பொருளியல் வாழ்வு அடிப் படைக் காரணியே தவிர, ஒரே காரணி அல்ல. அரசு, சட்டம், மதம், தத்துவம், இலக்கியம், கலை, விபத்துக்கள் என்ற எத்தனையோ காரணிகள் வரலாற்றைத் தீர்மானிக்கின்றன. “இறுதியாக அதிலே பொருளாதார இயக்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது” என்று முத்தாய்ப்பு வைத்தார் அவர்.

இலக்கியம் பற்றிப் பேசும் போது மார்க்சியத்தின் அந்த அடிப்படைக் கோட்பாட்டை யும், ஏங்கெல்ஸ் செய்த எச்சரிக்கையையும் சேர்த்தே பார்க்க வேண்டும். கூடவே செவ்வியல் இலக் கியங்கள் பற்றி மார்க்ஸ் வியந்தோதியதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். பொருளி யல் ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்த கிரேக்கத்தில் - அந்த அடிமைச் சமுதாயத்தில் - அழகியல் ரீதியில் உயர்ந்த படைப்புகள் தோன்றியது பற்றி மார்க்ஸ் யோசித்திருந்தார். சமுதாய இயங்குநிலையின் அந்த அடிப்படையான விதிகள் இயங்கும்போது “அழகின் விதிகள்” என்பவையும் இயங்குகின்றன. தனக்கென விதிகளைக் கொண்டிருப்பதால் அழகியலானது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளியல் வாழ்வையும் மிஞ்சி நிற்கிறது. “கலையைப் பொறுத்தவரையில் அதன் சில அற்புதப் படைப்புக்கள் சமுதாயத்தின் பொது வளர்ச்சிக்கும் விஞ்சி நிற்கின்றன. எனவே பொருளாதார அடித்தளத்திற்கும் அதன் அமைப்புக் கட்டுமானத்திற்கும் விஞ்சி நிற்கின்றன. உதாரண மாக, கிரேக்க இலக்கியங்கள் ஷேக்ஸ்பியருடன் ஒப்பிடத்தக்கவையாக உள்ளன” என்றார்.

இங்கு மார்க்ஸ் கூற வருவது உருவ அழகு பற்றிய விவகாரமே தவிர உள்ளடக்கம் பற்றிய தல்ல. பிற்காலத்து ஷேக்ஸ்பியரின் தனித்த சிந்தனைகள் எல்லாம் கிரேக்கத்து இலக்கியங் களிலேயே இருந்தன என்பதல்ல விஷயம். இரண்டுமே அழகியல் இன்பத்தைத் தருவதில் போட்டி போடுகின்றனவே என்பதுதான் மார்க்சின் வியப்பிற்குக் காரணம். இதை இப்படியாகச் சொல்லவும் செய்தார் - “கிரேக்கக் கலையும், இதிகாசக் கவிதைகளும் சமுதாய வளர்ச்சியின் சில குறிப்பிட்ட வடிவங்களுடன் தொடர்பு கொண்டி ருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதில் நமக்குச் சிரமமில்லை. ஆனால், அவை இன்னும் நமக்கு அழகியல் இன்பத்தைத் தருகின்றன, சில அம்சங் களில் அவை உயர்தரமானதாக, நாம் எட்டவே முடியாத இலக்காக நிற்கின்றன என்பதுதான் வியப்பளிக்கும் விஷயமாகும்.” இந்த வியப்பின் மூலகாரணம் அழகியலுக்கென்று தனித்த விதிகள் அக்கம்பக்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது.

மார்க்சிய ஆய்வு முறையின் இந்தக் கூறுகளை மனதில் வாங்கிக் கொண்டு மார்க்சிய ஆய்வாளர்களின் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் பற்றிய பங்களிப்பை ஆராய்வது நல்லது. தோழர் கே. முத்தையாவின் பாத்திரம் பற்றி இனிப் பார்ப்போம்.

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் கே. முத்தையாவின் பாத்திரம்

தமிழகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய கே. முத்தையா எழுத்துத்துறையில் பன்முக ஆற்றலை வெளிப் படுத்தியவர். அதன் வழியாக மார்க்சியத்தைத் தமிழகப் பின்புலத்தில் விளக்கியவர். “தீக்கதிர்” என்கிற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் ஏட்டிற்கு ஆசிரியராக இருந்தவர், அதன் இலக்கிய ஏடாகிய “செம்மலரும்” அவரை ஆசிரியராகக் கொண்டிருந்தது. இந்த இரண்டின் மூலமாக அரசியல் சர்ச்சைகளை மட்டுமல்லாது சித்தாந்த மற்றும் இலக்கிய விவாதங்களை முன்னெடுத்துச் சென்றவர். “உலைக்களம்”, “விளைநிலம்” என்று இரு நாவல்களையும் எழுதியவர்.

ஒன்றுபட்டிருந்த தமிழகக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடாகிய “ஜனசக்தி” யிலேயே ஜீவாவோடு சேர்ந்து பணியாற்றியவர் கே. முத்தையா. கொள்கை வேறுபாடு காரணமாகக் கம்யூனிஸ்டு இயக்கம் 1964இல் பிளவுபட்ட போது எவ்விதத் தயக்கமுமின்றி மார்க்சிஸ்டு கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டவர். அதற்குப் பிறகு சுமார் முப்பதாண்டுக் காலம் அதன் அறிவுஜீவித் தலைவர்களுள் ஒருவராகவும், இலக்கியப் புலத்தின் தனித்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

1975ல் மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவங்கப்பட்ட காலத்திற்குச் சற்று முந்திய ஆண்டுகளிலிருந்து அவரோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் மார்க்சிய சித்தாந்தத்திற்கும் அதன் செயலாக்கத்திற்கும் அவர் தந்த பங்களிப்பை என்னால் பூரணமாக உணர முடிந்தது. த.மு.எ.ச. என்கிற அமைப்பு இப்போது த.மு.எ.க.ச. வாக, “கலைஞர்கள்” என்கிற சொல்லையும் தனது பெயரில் இணைத்துக் கொண்டு காலத் தொடர்பு அறுந்து போகாமலும், அனைத்து மாவட்டங்களில் விரவி நின்றும் இயங்குகிறது என்றால் அதற்கு மூல காரணம் அவர் ஊன்றிய சித்தாந்த வித்து.

மார்க்சிஸ்டு கட்சியின் மற்றொரு முக்கிய தலைவராகிய என். சங்கரய்யாவோடு சேர்ந்து நின்று கலை - இலக்கியத் துறையில் எழுந்த சில காத்திரமான விஷயங்களில் அவர் சரியான தீர்வினை முன்மொழிந்தார். உதாரணம், பாரதி-பாரதிதாசன் பற்றி எழுந்த விவாதம். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தை அப்படியே ஆரத் தழுவிக் கொண்ட மார்க்சியர்களால் அதுபோல பாரதி-பாரதிதாசனை ஏற்பதில் தயக்கம் இருந்தது. பாரதியின் கடவுள் துதி கீதங்கள் அவர்பாலான தயக்கத்திற்குக் காரணம் என்றால், பாரதிதாசனின் திராவிட இனப் பார்வை இவர்பாலான தயக்கத் திற்குக் காரணமாகும்.

சி.பி.ஐ. கட்சிக்குள்ளிருந்து ஓர் இடதுசாரிப் பிரிவாக வெளிவந்த மார்க்சிஸ்டு கட்சிக்குள் இயல்பாகவே ஆங்காங்கே சித்தாந்தத் துறையில் அதி தீவிரவாதப் போக்கு இருந்தது. நக்சல் இயக்கத்தை எதிர்கொண்டு மீண்டு வந்த நிலையிலும் இந்தப் போக்கின் எச்சங்கள் இருந்தன. மார்க்சியத்தை இயந்திரகதியில் புரிந்து கொண்டு அதை அமுல்படுத்தும்போது சில வரலாற்று மனிதர்களைக் கணிப்பதில் தவறு நிகழ்ந்தது. மதம், இனம் பற்றிய விஷயங்களில் இது துல்லியமாக வெளிப்பட்டது.

பக்திப் பாடல்களைப் பாடிவிட்டான் என்கிற காரணத்தாலேயே பாரதியை முற்போக்குக் கவிஞன் எனச் சொல்லக்கூடாது என்றார்கள் சில மார்க்சியர்கள். இது இரண்டு விதமான கேள்வி களை எழுப்பியது. ஒன்று, அவன் பாடிய இதர பாடல்களை எல்லாம் இதன் காரணமாகவே ஒதுக்கிவிட முடியுமா? இரண்டு, அவனது பக்தி மாயாவாதம் சார்ந்ததா அல்லது யதார்த்தம் சார்ந்ததா என்று அலச வேண்டாமா? பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களின் அன்றைய தாக்கத்தையும், இன்றைய தேவையையும் அனுபவச் செறிவோடு எடுத்து வைத்தார் கே. முத்தையா.

மதம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தின் முழுமைத் தன்மை வலியுறுத்தப்பட்டது. மதம் மக்களின் அபின் என்று மட்டும் சொல்லி விஷயத்தை முடிக்கவில்லை மார்க்ஸ், அது ஏழைகளின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிற வினோதத்தையும் சேர்த்தே சொன்னார். இறையியல் கோட்பாட்டி லும்கூட வெகு மக்களின் முன்முயற்சிகளை மழுங்கடிக்கிற சங்கரரின் மாயாவாதத்திற்கும், அதையே தேசிய எழுச்சிக்குப் பயன்படுத்துகிற பாரதியின் சிந்தனைக்கும் இடையே வேறுபாடு காண வேண்டும் என்று கே. முத்தையா வலியுறுத்தினார். “காணி நிலம் வேண்டும் பரா சக்தி” போன்றவற்றை வெறும் ஸ்தோத்திரப் பாடல்களாகக் கருத முடியாது என்று வலுவாக வாதிட்டார். மாயாவாதத்திற்கு எதிராகப் பாரதி பாடியது போல அப்படி நயமாக எந்த நாத்திகக் கவியும் பாடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பராசக்தி விவகாரம் ரஷ்யப் புரட்சி பற்றிப் பாரதி பாடியது தொடர்பாகவும் எழுந்தது. புரட்சியில் போராளிகளின் பங்களிப்பை அவன் உதாசீனப்படுத்தி விட்டான் என்று குற்றங் கண்டவர்கள் உண்டு. ஒரு கடவுள் நம்பிக்கை யாளன் என்ற முறையில் அதைப் பராசக்தியின் கடைக்கண் பார்வையாக அவன் உருவகப்படுத்தி யிருந்தாலும் நடந்ததை “யுகப்புரட்சி” என்றும், குடி மக்கள் சொன்னபடி “குடி வாழ்வு” என்றும் வருணத்ததில் இறையியல் இல்லை, மாறாக ஒரு லட்சிய சமுதாய தாகம் இருந்ததைக் கோடிட்டுக் காட்டினார் கே. முத்தையா. அந்தப் பாடல் கெரன்ஸ்கி தலைமையில் நடந்த பிப்ரவரிப் புரட்சியைக் குறித்ததே தவிர லெனின் தலைமை யில் நடந்த அக்டோபர் புரட்சியைக் குறிக்க வில்லை என்று வாதிட்டவர்களும் உண்டு. பாடலின் தொனி அக்டோபர் புரட்சியைத்தான் சுட்டியது. ஒருவேளை அது பிப்ரவரி புரட்சியைப் பற்றியதாக இருந்தாலும் ஜார் ஆட்சியை வீழ்த்திய புரட்சி என்ற வகையில் அதுவும் முற்போக்கானதே, அதை முதலில் பாடிய தமிழ்க்கவி என்ற முறையில் பாரதி போற்றத்தக்கவனே என்று பதில் சொன்னார்.

அந்த 1970களில் இந்துத்துவா சக்திகள் பெரிய அளவுக்கு இந்திய அரசியலில் முன்னுக்கு வரவில்லை. மார்க்சிஸ்டு கட்சியானது காங்கிரசை யே பிரதான எதிரியாகக் கணித்து அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. கூடவே திராவிட இயக்கத்தின் ஆட்சி மீதும் அதிருப்தி நிலவியது. இந்தச் சூழலில் பாரதிதாசனைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டிற்கு வருவதில் சிரமம் இருந்தது. அவர் பாடிய திராவிட இனவாதப் பாடல்கள் சரித்திர சம்மதம் இல்லாதவையாகப் போயிருந்தன. அந்தக் காலாவதியான பாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர் யாத்த வருணாசிரம எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கவிதைகளை ஒதுக்குகிற அல்லது உரிய முக்கியத் துவம் தராத போக்கு இருந்தது. ஏன் அவர் எழுதிய சில துடிப்புமிகு உழைப்பாளர் ஆதரவு பாடல் களைக்கூடக் கண்டு கொள்ளாத நிலைமை இருந்தது.

இதை எதிர்த்து உறுதியாகப் போராடியவர் கே. முத்தையா. படைப்பாளியானவன் கொய்யா பழம் போன்றவன் அல்ல ஒரு பக்கம் அழுகியதும் தூக்கி எறிவதற்கு. அவனைப் பற்றிய ஒட்டு மொத்தமான கணிப்பிற்கு வருவதற்கு அவனது அனைத்து படைப்புகளின் அடிநாத ஓசையைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பாரதிதாசனைப் போல கவித்துவ வன்மையோடு வருணா சிரமத்தைச் சாடிய கவிஞன் யார்? அவனது திராவிட இனவாதம்கூட பிராமணியத்தின் ஆரிய இனவாதத்திற்கு பதிலடியாக எழுந்ததுதான். அந்தப் பதில் சரியானது இல்லையே தவிர பதில் தர வேண்டிய அவசியம் என்னவோ இருந்தது. இத்தகையச் சரியான புரிதலைத் தந்த கே. முத்தையா தான் பேசும்போதெல்லாம் “உழைப்போர் உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன். இவ்வுலகு உழைப்போர்க் குரியது என்பதையே” போன்ற பாரதிதாசனின் பாடல்களைத் தவறாது குறிப்பிடுவார்.

ஒரு செறிவான, ஆழ்ந்த, காரியார்த்தமான விவாதத்திற்குப் பிறகுதான் தமிழகத்தின் முற் போக்கு கலை இலக்கியவாதிகளின் தலைமகன் களாக பாரதி-பாரதிதாசன்-பட்டுக்கோட்டை எனும் முப்பெருங்கவிஞர்கள் திகழ்கிறார்கள் என்கிற முடிவிற்கு மார்க்சியர்கள் வந்தார்கள். இந்த விவாதத்தில் சரியான மார்க்சிய நோக்கிலிருந்து சீரிய பங்களிப்பைச் செய்தார் கே. முத்தையா. அதற்குத் தனது புலமையையும் ஆற்றலையும் பயன்படுத்தினார். இதேபோலவே, இதற்கும் முன்னதாகவே பழந்தமிழ் இலக்கியங்களை அவர் ஆய்வு செய்தார், அதன் முடிவுகளை முன்மொழிந் தார். தெளிவான மார்க்சிய நோக்கே இதற்கும் அவருக்கு அடித்தளமாக இருந்தது.

தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்

திராவிட இயக்கமானது தனது வருணாசிரம எதிர்ப்புக்காக ராமாயண-மகாபாரத மறுப்பைக் கையில் எடுத்தது. அவற்றுக்கு மாற்று என பழந்தமிழ் இலக்கியங்களை உயர்த்திப் பிடிக்கவும் செய்தது. ஆனால், அந்த வேகத்தில் “சங்க காலம் பொற்காலம்” என்றும், அது அநியாயமாய் மறைந்த போனதே என்று ஏங்கவும் செய்தது. வரலாற்றுத் தேரைப் பின்னோக்கித் திருப்புகிற இந்த முயற்சிக்கு 1960களிலேயே மார்க்சிய வட்டாரத்திலிருந்து எதிர்ப்புக் குரல் வந்தது. அதைக் கொடுத்தவர் கே. முத்தையா.

“தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்கிற அவரது நூல் 1968ல் வெளி வந்தது. இதற்குச் சற்று முன்புதான் சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்து முடிந்திருந்தது. அங்கு சமர்ப்பிக்கப்பட்ட சில கட்டுரைகள், பேசப்பட்ட உரைகள், பொதுவாக எழுப்பப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றுக்கு ஒரு எதிர்வினை போல கே. முத்தையா தனது நூலில் இப்படிக் குறிப்பிட்டார் - “இடம், காலம் சம்பந்தப்படாத இலக்கியம் எதுவும் இல்லை. தொல்காப்பியமே தமிழ் மக்களின் சமுதாய வளர்ச்சியின் ஒரு காலகட்டத் தின் தோற்றமாகும். சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுபவைகளும் தமிழ் மக்களது வாழ்வின் ஒரு காலகட்டத்தின் படைப்புகள். ஒரு சில கவிஞர்கள் இவற்றை ஆக்கியிருக்கலாம். அந்தக் கவிஞரின் கண்ணுக்கும், கருத்துக்கும், கற்பனைக்கும் தூண்டுகோலாக நின்ற அந்தக் காலத்திய சமுதாய அமைப்பினை முழுமையாகப் பார்க்கவில்லை என்றால் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், ஏனைய கலைப் பொருட்களைப் பற்றியும், பொதுவான தமிழ் மொழியினைப் பற்றியும் சரியான ஒரு முடிவு தோன்ற முடியாது. இன்று வெளிவந்து கொண் டிருக்கும் பல்வேறு விதமான ஆய்வுரைகளில் இந்தப் பார்வை, அணுகுமுறை இல்லை”. இலக்கிய ஆய்வுக்கான மார்க்சியக் கண்ணோட்டம் ஏற்கெனவே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதையே இப்படி எளிமையாகச் சொல்லி அவர் தனது நூலைத் துவக்கினார்.

இதன் சாரம் தெளிவானது. படைப்பாளி என்ற முறையில் தனிமனிதர்களின் பங்களிப்பை மறுப்பதில்லை. ஆனால் அந்தக் கவிஞனும் தனது பாடுபொருளை, அதன் மீதான தனது கற்பனையை தான் வாழும் சமுதாயத்திலிருந்தே பெறுகிறான். அந்த நுண்ணிய நோக்கில் அவனது படைப்புக்கு ஆதாரம் அவனது சமுதாயம். ஆகவே அந்தச் சமுதாய பின்புலத்தில் படைப்புகளைப் பார்க் காமல் அவை பற்றிய கணிப்புக்கு வரக்கூடாது. வேறொரு வகையில் பார்த்தால் அந்தப் படைப்பு கள் மூலமாகவே அவை எழுந்த சமுதாயத்தையும் அவதானிக்கலாம். இத்தகைய இருவழிப் பாதையின் சங்கமத்தின் மூலம் பெறப்படும் மதிப்பீடே செம்மையாக இருக்கும். இதுவே சரியான ஆய்வு முறைமை என்கிறது மார்க்சியம். இதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் மீது பிரயோகித்துப் பார்த்ததன் விளைவே கே. முத்தையாவின் அந்த நூல்.

சங்க இலக்கியம் காட்டும் சில சமுதாயக் காட்சிகளை ஜீவா ஏற்கெனவே எழுதிச் சென் றிருந்தார். ஆனால் சங்க காலமானது வர்க்க சமுதாயம் பிறந்திருந்த காலம் என்பதைச் சங்க இலக்கியங்கள் கொண்டே அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டியவர் கே. முத்தையா. இது அந்தக் காலத்தைச் சிறுமைப் படுத்துவதாகாது. இனக்குழு வாழ்க்கையிலிருந்து வர்க்க சமுதாயம் பிறந்திருந்தது என்பது சமூக-பொருளியல் நோக்கில் ஒரு வரலாற்று முன்னேற்றமே. ஆனால், வர்க்க சமுதாயம், வர்க்க சமுதாயமே. ஆண்டான் அடிமைச் சமுதாயமே. அதை இன்றைய நவீன காலத்திலிருந்து கொண்டு பொற்காலம் என்று புகழ் பாடுவதோ, அது மீண்டும் வராதா என்று ஏங்குவதோ வரலாற்று முரணாகிப் போகும். மாறாக, அந்த வர்க்க சமுதாயத்திலும் தமிழ்க் கவிஞர்கள் எப்படிப் பாடினார்கள், எதைப் பாடினார்கள், அவர்கள் வெளிப்படுத்திய ஆற்ற லும் அழகும் எத்தகையது என்று அலசுவதே மெய்யான ஆய்வாக இருக்கும். தமிழின் நியாயமான பெருமையைப் புறந்தள்ளவும் கூடாது, சரித்திர விரோத கணிப்பிலும் புகழ்ச்சி யிலும் இறங்கவும் கூடாது. இதுவே கே.முத்தையாவின் ஆய்வு நெறியாக இருந்தது.

“சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள், சங்க காலத்தின் இலக்கணம் என்று கூறப்படும் தொல்காப்பியம், சங்க காலத்துக்கு அடுத்தாற்போல் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சைவ வைணவ இலக்கியங்கள் எல்லாம் தமிழ் மக்கள் பூரித்துப் பெருமைப்பட வேண்டிய சிறந்த இலக்கியங்கள் ஆகும். எனினும் இந்தச் சிறந்த இலக்கியங்களை நாம் பெற்றிருக்கிறோம் என்பதினாலேயே அந்தக் காலம் பொற்காலமாகி விடாது. சங்க காலச் சமுதாயமும் இன்றுள்ள வர்க்க சமுதாயத்தின் முன்னோடிதான்” - இப்படிக் கனக்கச்சிதமாகக் கூறினார்.

இதிலே ஒரு வித்தியாசமான பங்களிப்பு உள்ளது. இப்போதும்கூடப் பல ஆய்வாளர்கள் தொல்காப்பியத்தை சங்க இலக்கியத்திற்கும் மிக முந்திக் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். 1960 களில் இந்தப்போக்கு படுதீவிரமாக இருந்தது. ஆனால், கே. முத்தையாவோ “தொல்காப்பிய காலம், சங்க காலம் என்று வேறுபடுத்திக்காட்ட நாம் விரும்பவில்லை. இலக்கியத்தை வைத்துதான் இலக்கணம் தோன்றும், இலக்கணம் இலக் கியத்தை உருவாக்கப் பயன்படும். முதலில் தோன்றுவது இலக்கியமே. அதிலிருந்தே இலக்கணம் தோன்றுகிறது” என்று யதார்த்த நோக்கை முன் மொழிந்தார்.

(அடுத்த இதழில் முடியும்)

 

Pin It