(லங்காராணி, அருளர், சான்றோன் பதிப்பகம், இந்தியத் தொடர்பு 105, ஜானிஜானிகான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600014 பக்.232. விலை ரூ.100/- )

'லங்கா ராணி' 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். ஈழத்தமிழர் உணர்வுகள் கொந்தளிக்கத் துவங்கிய காலகட்டத்தில் ஈரோஸ் (erose) எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பின் கொள்கைப் பிரகடனமாகவே வடிக்கப்பட்ட நாவல் இது.

1982ல் ஈழபுரட்சிகர அமைப்பு (erose) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (eprlf), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (plote), தமிழீழ விடுதலை இயக்கம் (telo), தமிழீழ விடுதலைப்புலிகள் (ltte), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (nlfte) ஆகிய அமைப்புகள் அங்கம் பெற்ற ஈழவிடுதலைக்குழு உருவான போது அந்த அமைப்பின் பொது ஆவணமாகவே இந்நூல் மாறிப்போனது. "1977 கலவரத்தின் ரத்தவாடையும் அதனால் எழுச்சிபெற்ற இளைஞர்களின் புரட்சி மணமும் பதிந்து நிலைத்திருக்கும் நாவல்" இதுவென பெரியார்தாசன் வரையறை செய்கிறார்.

ஆம் 1977 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளை சுமந்து கொண்டு கொழும்பு துறைமுகத்தில் புறப்பட்ட கப்பல் இலங்கையை சுற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித் துறைமுகத்திற்கு செல்கிறது. இரண்டு நாள் பயணம். மொத்த கதையும் அந்த இரண்டு நாட்களுக்குள் நகர்த்தப்பட்டாலும்; உரையாடல்கள் மூலம் 2500 ஆண்டுகால வரலாறு விவ ரிக்கப்பட்டு விடுகிறது. நாவலில் வரும் இளைஞர்கள் வியாபாரிகள், மருத்துவர். தோட்டத் தொழிலாளி நவீன பெண்மணி என ஒவ்வொருவரும் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாய் காட்டப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழ் மக்களிடம் எத்தனை விதமான வர்க்க, சாதி, மத வேறுபாடுகள் உள்ளன; ஒவ்வொரு சாராரும் அவரவர் வாழ்நிலை சார்ந்து வெவ்வேறு நிலைபாடுகள் மேற்கொண்டாலும்; அரசியல் யதார்த்தம் அவர்களை எப்படி அதிதீவிர நிலைக்கு விரட்டியடிக்கிறது என்பதுதான் நாவலின் மைய இழை. தனிநாடு அதுவும் சோஷலிச தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு என்கிற இலக்கை நோக்கியே நாவலின் விவாதம் மிக நுட்பமாக நகர்த்தப்பட்டுள்ளது. 9வது அத்தியாயம் முழுவதும் "சமதர்மம் என்றால் என்ன?' என்ற கருவை மையமாகக் கொண்ட விவாதமாகவே அமைகிறது. எளிய இனிய தமிழில் சோஷலிசம் விளக்கப்படுவது அருமை!

அதேபோல இலங்கைத் தமிழர் வரலாற்றுக் கதையாடலில் தவறாமல் இடம் பெறும் எல்லாளன் ஆட்சியின் பெருமையும் அதை வீழ்த்திய துட்டகை முனுவின் செயலும் தமிழ் இன உணர்வை நன்கு ஊட்ட ஏதுவாக சரிவிகிதத்தில் பிசைந்து தந்திருக்கிறார் நூலாசிரியர் அருளாளர். குமரிக்கண்டம் போன்ற அதீத கற்பனைச் சரக்குகளும் தமிழ்நாட்டைப் போலவே இலங்கையிலும் பிரசித்தம். அதுவும் இந்நூலில் உண்டு. முதலாளித்துவ சிங்கள அரசியல்வாதிகளின் சுயநல அரசியல் வேட்கைக்காக தொடர்ந்து சிங்கள இனவெறி ஊட்டப்பட் டது என்பதையும் அதில் பௌத்தபிக்குகள் பங்கையும் இந்நூல் பலதரப்பு உரையாடல்கள் மற்றும் செய்தி விவரிப்புகள் மூலம் பதிவு செய்கிறது. தனி ஈழம் என்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது தான் நாவலின் ஊடும் பாவுமான செய்தி; அதே சமயம் அந்த ஈழத்தை தமிழக-இந்திய உதவியோடு பெற முடியாது என்பதையும்; அமையப் போகிற ஈழம் சோஷலிச ஈழமாகவே மலர வேண்டும். என்பதையும் நூல் நெடுக்க விவாதங்கள், உரையாடல்கள் மூலம் நிறுவ முயற் சிக்கிறார் அருளாளர்.

"இரு தமிழர்கள் கதைத்தால் அது வாக்குவாதமாகத் தான் இருக்கும். கருத்துப் பரிமாறலாகவோ ஒத்துப் போவதாகவோ இருக்காது" என்கிற யதார்த்த வாதத்தை முன்வைத்து; அத்தகைய வாதமாக துவங்கி கருத்து பரிமாறலாக - கருத்துப் பிரச்சாரமாக நாவலை கொண்டு போயிருப்பதில் நூலாசிரியரின் லட்சிய உறுதி பளிச்சிடுகிறது. இந்த நாவல் குறித்து 1981ல் அமுத சுரபியில் அகிலன் எழுதிய வரிகள் முக்கியமானவை. அவர் கூறுகிறார்; "அண்மைய வரலாற்று நிகழ்ச்சிகள் நிறைந்த ஒர் அற்புதப் படைப்பு இது. ஈழத்து விடுதலைப் புரட்சியாளர்களின் சிந்தனையும் செயலும் சரியானவைதாமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படி உருவாக்கிவிட்ட பின்னணி நிகழ்ச்சிகளை நம்மால் மறுத்துவிட முடியாது"

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்த உணர்வு இதுதான். ஆனால் இன்று அப்படி இல்லையே ஏன்? இந்த நூல் மதிப்புரையின் தொடக்கத்தில் சுட்டப்பட்ட பல்வேறு அமைப்புகள் என்ன ஆயின? எப்படி ஒழிக்கப்பட்டன? எல்டி டிஇ -விடுதலைப்புலிகள் மட்டுமே ஈழத்தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்று சித்தரிக்கப்படும் இன்றையச் சூழலுக்கு யார் காரணம்? இந்நிலை ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க உதவுமா? அல்லது தடங்கல் ஆகிறதா? இப்படி பலப்பல கேள்விகள் எழுகின்றன.
நாவல் பிறந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை இன்று இல்லை. சோவியத் யூனியன் சிதைந்து விட்டது. இந்திய அரசு தலையீட்டால் செய்யப்பட்ட உடன்படிக்கை நொறுங்கி விட்டது. ராஜிவ் காந்தியை கொலை செய்த மூடத்தனம் ஈழத்தமிழர்கள் பெறவேண்டிய தமிழ் மக்களின் இயல்பான ஆதரவு தளத்தை சுருக்கி விட்டது. சோஷலிச ஈழம் என்ற லட்சியம் காற்றோடு போய்விட்டது. பயங்கரவாதச் செயல்கள் மூலம் சக போராளிக் குழுக்களை அழித்தாயிற்று. பேச்சுவார்த்தை ஒவ்வொரு முறையும் ஆயுதசேகரிப்புக்கான அவகாசம் என்றாகிவிட்டது. யுத்தகளத்தில் பின்தங்கியிருந்த இலங்கை ராணுவம் முன்னேறி தாக்கும் வலுவும் வியூகமும் பெற்றுவிட்டது.

ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் எதற்கும் உதவாத வெறிப்பற்றும் வெறிக்கூச்சலும், தீர்வுக்கு உதவாது; உணர்ச்சிகளோடு சிந்தனையைக் கலந்து யதார்த்த உரைகல்லில் உரசினால் சரியான தீர்வுக்கு வழி பிறக்கும். இந்நூலை மறுவாசிப்பு செய்வது அவசியம். புரட்சி இயக்கங்களின் செயல்பாட்டிலிருந்து பிறந்த கொரில்லா, மா, முறிந்தபனை முதலான நூல்களையும் படித்துவிட்டு மீண்டும் லங்காராணியைப் படித்தால் பல முடிச்சுகள் அவிழக்கூடும். லங்கா ராணியின் பயணம் இரண்டு நாளில் முடிந்துவிட்டது ஆனால் முடிவற்று நீள்கிறதே வேதனைப் பயணம்.

- சு.பொ.அகத்தியலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It