வ.உ.சி. நூலகம் சார்பில் வெளியான எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் எஸ். சங்கரன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2004 இல் வெளிவந்தது. இப்புத்தகம் குறித்த அறிமுகத்தையும் - எனது விமர்சனத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
காதல் கோமாளிகள் என்ற குறுநாவலின் மூலம் ஜோலா பிரஞ்சு தேசத்தின் உயர் நடுத்தர வர்க்கத்தின் போலியான வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார். ஆக்டோவ் மூரட் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட இந்நாவலில் பல ஆண் - பெண் கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. இவர்கள் அனைவரும் சமூகத்தில் தங்களை உயர்ந்த இடத்தில் உள்ளவர்களாக கருதிக் கொண்டவர்கள் என்பதுதான் வேடிக்கையானது. ஆக்டோவ் மூரட் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மாளிகையைச் சுற்றிச் சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. இந்த இடத்தை ஆக்டோவ் மூரட்டிற்கு - கம்பார்டன் அறிமுகப்படுத்தும் போது, "ரொம்ப வசதியான இடம், பெரிய மனிதர்கள் மட்டுமே தங்கும் இடம்" என்று கூறுவதோடு பெண் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே இங்கு கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார். அப்படி எதுவும் இங்கே நடக்கக்கூடாது என்று கூறுவதோடு, பிரான்சில் வெளியில் எல்லாம் கிடைக்கக்கூடியதே என்பதையம் அவர் சொல்லத் தவறவில்லை.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல் தளத்தில் தங்கியிருக்கும் மூரட் பெண்கள் விசயத்தில் அலை பாயும் மனதைக் கொண்டவர். அங்கே உண்மையான காதலர்களை காண்பது அரிதிலும் அரிதுதான். காதலையும், காதலர்களையும் தீர்மானிப்பது பணமாக இருந்தது. பணத்திற்காகவும் - அதிகமான வரதட்சணைக்காகவும் காதலை இழந்தவர்களை காண முடியும். அதில் ஒருவர்தான் மூரட்டின் நன்பர் கம்பார்டன். காஸ்பரின் என்ற பெண்ணை காதலித்தாலும் அவரை கைவிட்டு 30 ஆயிரம் பிராங்க் வரதட்சணைக்காக ரோசை கைப்பிடித்தவர்.
வரதட்சனை என்பது ஏதோ தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டும்தான் இருக்கிறது என்பதை பொய்யாக்கியது எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் நாவல். அநேகமாக உலகம் முழுவதுமே இப்படிப்பட்ட பல கட்டங்களை தாண்டித்தான் வரவேண்டியுள்ளது போலும், ஆம் வரதட்சணை என்பது கூட முதலாளித்துவம் பெற்றெடுத்த அம்சம்தானே!
அடுத்து இந்நாவலில் முக்கிய இடம் பெறுவது ஜாசரண்ட் குடும்பம், ஜாசரண்ட்டுக்கு இரண்டு பெண்கள் முதல்மகள் ஹால்டென்ஸ், இரண்டாவது மகள் பெர்த் பருவமடைந்த இந்த இரண்டு பேரையும் பத்திரமாக நல்லவொரு இடத்தில் கரை சேர்க்க வேண்டும் என்ற கவலை தாய் ஜாசரண்ட்டுக்கு. அவர்கள் குடும்பத்தில் வாட்டும் வறுமை ஒருபுறம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது மகள்களை பெரிய இடத்து வாலிபர்களிடத்தில் எப்படியெல்லாம் பேசி அவர்களை கைக்குள் கொண்டு வரவேண்டும் என்பதை தாயே தினந்தோறும் டியூசன் எடுக்காத குறையாக அர்ச்சித்துக் கொண்டேயிருப்பாள். இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு அனுபவத்தை கற்றுக்கொள்ளும் மகள்களின் செயல் பரிதாபத்தை வரழைப்பதாக இருந்தாலும் அக்கால சமூகத்தில் நிலவிய குடும்ப சூழ்நிலையை கண்முன்னே கொண்டு வருகிறது.
இவர்கள் குறி வைக்கும் ஆண்கள் ஒவ்வொரும் குறி தவறிக் கொண்டே வருவார்கள் இதனால் பல நேரம் தாய் ஜாசரண்ட் மணம் வெறுத்துப் போய் மகளின் கையாகாலத தனத்தை திட்டித் தீர்ப்பாள். இறுதியில் இளைய மகள் பெர்த் அகஸ்ட்டியை கைப்பிடிப்பாள். இருப்பினும் இவர்களது மனவாழ்க்கையில் திருப்திகரமாக அமையவில்லை. பெர்த்தின் ஆடம்பரமான செலவுகள் அகஸ்டியை வாட்டியெடுப்பதும், அவளது செயல்களால் அவன் நிம்மதியிழப்பதும்... அவனது ஆண்மையை அவள் சந்தேகப்படுவதும் - சண்டையும் - சர்ச்சையுமாகவே இருக்கும்.
இந்நிலையில் ஆக்டோவ் மூரட் காத்திருந்த கிளிபோல அவளை கொத்திக் கொள்வதும்... அவனுடனான கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வருவதால் அவனது கணவன் கொலை வெறியோடு அலைவதும்... இதனால் மனம் உடைந்து நொறுங்குகிறாள் பெர்த் அவள் மட்டுமல்ல. அவளது அம்மா ஜாசரண்ட்டும்கூடத்தான். பின்னர் பாதிரியாரிடம் சென்று உண்மைகளை கூறி பாவ மன்னிப்பு பெறுகிறாள் பெர்த்...
அந்த உயிர் குலக் குடியிருப்பில் இருந்த மேரியின் வாழ்க்கையும் ஆக்டோவ் மூரட்டிடம் சரணாகதியானது. மேரிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. இருந்தாலும் ஆக்டோவின் மீது அளவு கடந்த அன்பை பொழிந்தாள் மேரி. மேரிக்கும் அவரது கணவருக்கும் எட்டாம் பொருத்தமே நிலவியது (தினந்தோறும் சண்டைகள் நடந்துக் கொண்டேயிருக்கும்) இது கண்டு ஆக்டோவ் இரங்கினாலும்... மேரியை தன் வசப்படுத்திக் கொண்டான். மேரியும் ஆக்டோவுக்காக உண்மையான அன்பை செலுத்தினாள்.
இதேபோல் அந்த உயர்குல குடியிருப்பில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண்மணிகளின் லீலைகளும்... அங்கு வந்த உயர்குலச் சீமான்களின் கொட்டமும்... சகிக்க முடியாதது. இருந்தால் என்ன அந்த மாளிகையின் உள் அழகை யார் பார்க்கப் போகிறார்கள்? வெளியழகுத்தான் அதற்கு பெருமை சேர்த்துக் கொடுக்கிதே! அப்புறம் என்ன?
இருந்தாலும் ஆக்டோவ் வாலரிக்கும், ஜுசருக்கும் வலை வீசினான். ஆனால் இறுதி வரை வாலரி மாட்டவேயில்லை. ஜுசரோ ஆக்டோவிற்கு இடம் கொடுத்தாள். உறவு கொள்வதைத் தவிர வேறு எதை வேண்டுமானும் செய்துக் கொள் என்று தனக்கென ஒரு வரையறையை வைத்துக் கொண்டாள்.
இந்நிலையில் காஸ்பரினை காதலித்து கைவிட்ட கம்பார்டன் ஒரு கட்டத்தில் அவளோடு இணைந்து நிற்பதை ஆக்டோவ் காண்கிறான்.... இப்படித்தான் இந்த நாவல் முழுவதும் கதைகள் ஊடும் - பாவுமாக விரவிக் கிடக்கிறது. மொத்தத்தில் உயர் குலச் சீமான்களின் போலியான உணர்வற்ற - நடைபிணமான வாழ்க்கை எவ்வாறு அர்த்தமற்றதாகவும் - அவலம் நிறைந்ததாகவும் இருந்தது என்பதை கண்முன்னே கொண்டு வருகிறார் எமிலி ஜோலா...
ஓரிடத்தில் அந்த மாளிகையைப் பற்றி கூறும் போது... யார் வீடு கட்டினாலும் வெளியழகை மட்டும்தான் பார்த்துப் பார்த்து கட்டுகிறார்கள். ஆனால் உள்ளே அழகாக இருப்பது பற்றி கவலைப்டுவதில்லை என்று சொல்லிச் செல்வதே.... இந்த நாவலின் அச்சாணியாக சுழன்று சுழல்கிறது. ஒவ்வொருவரின் காதலும் எப்படி கோமாளித்தனமாக இருக்கிறது? அதில் அன்பும் உணர்ச்சியும் அற்ற காதலாக இருப்பதை நன்றாக படம் பிடித்துள்ளார் எமிலி ஜோலா.
அடித்தட்டு மக்களிடையே தங்களது வாழ்க்கைக்காக, வயிற்றுப் பிழைப்புக்காக செய்யப்படும் தவறுகளைக் கண்டு ஏளனமும் - ஏகடியமும் பேசும் உயர்குல சீமான்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை தனது இலக்கிய தொலைநோக்கி கொண்டு பார்க்கி்றார் ஜோலா.
கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவாக்கி விடுவீர்கள் என்று பேசும் முதலாளித்துவ கூலி தத்துவவாதிகளைப் பார்த்து மார்க்ஸ் இவ்வாறு கேட்பார்: முதலாளித்துவம் அதனை ஏற்கனவே செய்து விட்டது என்று, அதாவது அனைத்தையும் வியாபார பொருளாக பார்க்கும் உங்களுக்கு பெண்களையும் அவ்வாறே பார்க்கத் தோன்றுகிறது என்று முகத்தில் அறைவார். எப்படி இந்த முதலாளித்துவ சமூகம் உறவுகளை சிதைக்கிறது - பணம் படுத்தும் பாடு எப்படிப்பட்டது என்பதையும் இங்கே அன்பை தேடுபவர்களுக்கு கிடைப்பதோ ஏமாற்றமே! என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஜோலா!
தமிழில் இந்நாவலை மொழிபெயர்த்த எஸ். சங்கரன் பாராட்டுக்குரியவர். இருந்தாலும் மொழி நடையில் இன்னும் தளர்ச்சியிருக்க வேண்டும். ஒரு இறுக்கத்தை ஏற்படுத்துவது போன்ற உணர்வு மேலிடுகிறது. 80 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தை நல்ல முறையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது வ.உ.சி. நூலகம், ஜீ.1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை - 14, தொலைபேசி : 044-08476273, 9840444841 விலை ரூ. 30.
- கே. செல்வப்பெருமாள்(
கீற்றில் தேட...
எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள்
- விவரங்கள்
- கே.செல்வப்பெருமாள்
- பிரிவு: விமர்சனங்கள்